கோலாலம்பூர், ஜன 10 – நாட்டில் கோவிட் -19 தொற்று மோசமடைந்துள்ளதை அடுத்து தற்போதைய நிலையைக் காட்டிலும் மேலும் மோசமான நிலையை எதிர்நோக்கக் கூடுமென, சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர்நோர் ஹிஷாம் அப்துல்லா எச்சரித்துள்ளார்.
கடந்தாண்டு ஜனவரியிலிருந்து செப்டம்பர் வரையில் ,கோவிட் 19 தொற்றால் நூற்றுக்கும் குறைவான மரண எண்ணிக்கையே நாட்டில் பதிவானது. இவ்வாண்டு ஒன்பதே நாட்களில் 71 மரணங்கள் பதிவாகியிருப்பதை, நோர் ஹிஷாம் அப்துல்லா, தமது சமூக அகப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதில் முன்களப் பணியாளர்கள் பெரும் சவாலை எதிர்நோக்குகின்றனர். அடக்கம் செய்யும் பணிகள் முடிவுறும் வரை முழு பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு, அதிகரிக்கும் உடல் சூட்டையும் தாங்கிக் கொண்டு முன்களப் பணியாளர்கள் பணியாற்ற வேண்டியுள்ளது.
முன்களப் பணியாளர்கள் எதிர்நோக்கியிருக்கும் கஷ்டங்களை புரிந்துக்கொள்ளுங்கள் !ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்ளுங்கள், குடும்பத்தினரின் சுகாதார பாதுகாப்பினையும் கருத்தில் கொள்ளுங்கள் என , டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.
நாட்டில் இதுவரை கோவிட்- 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 559 ஆகும். மரண எண்ணிக்கை 542 ஆக பதிவாகியிருக்கின்றது.