சென்னை, ஜன 7
கோவிட் – 19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிக்குமாறும், அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும், உள்துறை அமைச்சு தமிழகத்தை கேட்டுக் கொண்டிருக்கிறது.
திரையரங்குகளில் , 100 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிக்கலாமெனும் தமிழகத்தின் முடிவை அடுத்து , உள்துறை அமைச்சு அந்த உத்தரவை விடுத்திருக்கின்றது.
இந்தியாவில் திரையரங்குகளில், 50 விழுக்காடு இருக்கைகளை மட்டுமே நிரப்ப முடியுமென மத்திய அரசாங்கம் விதிமுறைகளை விதித்திருக்கின்றது.
அதனால், 100 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதித்திருக்கும் தமிழகத்தின் முடிவு, மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இருப்பதாக, உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.
நடிகர்களும், திரையரங்க உரிமையாளர்களும், திரையரங்குகள் முழுமையாக செயல்பட அனுமதிக்கும்படி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அதையடுத்து கடந்த திங்கட்கிழமை எடப்பாடி பழனிச்சாமி , தமிழகத்தில் திரையரங்குகள் முழுமையாக செயல்பட அனுமதி அளித்திருந்தார்.
புதன்கிழமை தமிழகத்தில் மட்டும் புதிதாக 811 கோவிட் – 19 தொற்று சம்பவங்களும், 11 உயிரிழப்புகளும் பதிவாகின.