150 ஆண்டு கால கோலசிலாங்கூர் புக்கிட் பிளிம்பிங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூச திருவிழா
150 years of Kuala Selangor Bukit Belimbing Sri Subramania Temple Thaipusam Festival
Date :Maniventhan 11 FEB 2025
இவ்வட்டாரத்தில் மிகவும் பிரசித்திபெற்ற பழைமை வாய்ந்த ஆலயயங்களில் ஒன்றாக விளங்கி வரும் கோலசிலாங்கூர் புக்கிட் பிளிம்பிங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கோலசிலாங்கூர் 2 1/ 2 மைல் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூச திருவிழாவிற்கு அடுத்து இவ்வட்டாரத்தில் பக்தர்கள் அதிகம் கூடும் ஆலயமாக புக்கிட் பிளிம்பிங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூசத் திருவிழா விளங்கி வருகிறது.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் புக்கிட் பிளிம்பிங் தோட்ட மக்கள் ஒரு சிறு கொட்டகையில் ஸ்ரீ சுப்பிரமணியர் சிலையை வைத்து வணங்கி வந்த நிலையில் காலப் போக்கில் மெல்ல அபிவிருத்தி அடைந்து இன்று மிக கம்பீரமாக காட்சியளிக்கிறது.
இவ்வாலயத்தில் தைப்பூச திருவிழா ஆலயம் தொடங்கப்பட்டது முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புக்கிட் பிளிம்பிங் தோட்டம் சுமார் நாற்பது குடும்பங்களை கொண்ட ஒரு சிறு தோட்டமாக விளங்கி வந்தாலும் இவ்வாலயத்தில் நடைபெறும் அனைத்து சமய நிகழ்ச்சிகளிலும் தோட்ட மக்கள் ஒற்றுமையாக ஆலய விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பித்தது ஆலயத்தின் பெருமைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன் பல தோட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு விட்ட காரணத்தால் புக்கிட் பிளிம்பிங் தோட்டமும் தற்போது இல்லாமல் போனது. எனினும் ஆண்டு தோறும் இங்கு கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவிற்கு தோட்டத்தில் முன்பு வாழ்ந்த மக்கள் தவறாமல் கலந்து கொண்டு வருவது ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
நேற்று முன் தினம் கொண்டாடப்பட்ட தைப்பூச திருவிழாவிற்கு தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். புக்கிட் பிளிம்பிங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூச திருவிழாவின் மற்றொரு சிறப்பு அம்சம் அதன் அன்னதானமாகும். பொது மக்களுக்கு வாழை இலையில் அறுசுவை உணவு மதிய வேளையில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
மதியம் தொடங்கி மாலை வரை ஆலயத்திற்கு வரும் பக்கதர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானத்தில் அனைவரும் பங்கு பெறும் வகையில் அன்னதானத்திற்கென்று தனியாக பொது உண்டியல் வைக்கப்படும். இதன் மூலம் அடுத்த ஆண்டு தொடங்கி இவ்வாலயத்தின் தைப்பூச திருவிழாவின் இடம் பெறும் அன்னதானத்தில் அனைவரும் பங்கு பெறும் பாக்கியம் ஏற்படும் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் உள்ள முருகன் திருத்தலங்களில் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வந்தாலும் புக்கிட் பிளிம்பிங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் கொண்டாடப்படும் தைப்பூச திருவிழா அம்மனுக்கு தீ மிதியோடு நடைபெற்று மற்ற ஆலய தைப்பூசத்தோடு சற்று மாறுபட்டு விளங்குவதாலே இவ்வாலயத்தில் கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது
.
புக்கிட் பிளிம்பிங் தோட்டம் தற்போது அங்கு இல்லை என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் இங்கு கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவில் தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள். இவ்வாட்டார மக்களும் ஒன்று கூடும் பொது ஆலயமாகவும் விளங்கி வருகிறது. இவ்வேளையில் இவ்வாண்டு தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய ஆலய நிர்வாக உறுப்பினர்கள், தொண்டூழியர்கள், பொது மக்கள் அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
_________