எம்.ஏ.சி.சி. குற்றச் செயல்களில் ஈடுபட்ட பத்து பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப் பட்டனர்
23 MACC for misconduct Action against employees
புத்ராஜெயா, மே 5- மூன்று ஆண்டு காலத்தில் தவறான நடத்தைக்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) 25 பணியாளர்கள் மீது பணி நீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட அந்த பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எம்.ஏ.சி.சி. புகார் குழுவின் தலைவர் டத்தோ அஸாரியா மியோர் ஷாஹருடின் கூறினார்.
பணியில் அலட்சியம், வேலைக்கு வராமை, குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது போன்றவை அந்த பணியாளர்கள் புரிந்த குற்றங்களில் அடங்கும் என்று அவர் சொன்னார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்ட பத்து பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப் பட்டனர். ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களில் பெரும்பாலோர் பத்து ஆண்டுகளுக்கும் குறைவாக எம்.ஏ.சி.சி.யில் வேலை செய்தவர்களாவர் என்றார் அவர்.
எம்.ஏ.சி.சி.யின் மொத்த பணியாளர்களில் கட்டொழுங்குப் பிரச்சனையை எதிர்நோக்கி உள்ளவர்களின் எண்ணிக்கை 0.3 விழுக்காடு மட்டுமே இருந்த போதிலும், இந்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் மீது மக்கள் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளதால் இவ்விவகாரத்தை தாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எந்தவொரு தவறான செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாத சுத்தமான மற்றும் உயர்நெறி கொண்ட அமைப்பாக எம்.ஏ.சி.சி. விளங்குவதைக் காண நாங்கள் விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.