புக்கிட் தாகார் மற்றும் மேரி தோட்டங்களை தத்தெடுத்துள்ளேன் - செனட்டர் சரஸ்வதி கந்தசாமி.

Adopted Bukit Tagar and Mary Estate Tamil school - YB,Senator Saraswathy Kandasamy.

புக்கிட் தாகார் மற்றும் மேரி தோட்டங்களை தத்தெடுத்துள்ளேன் - செனட்டர் சரஸ்வதி கந்தசாமி.

News By:M.Archanaa-

10 Sept 2024 - புக்கிட் தாகார் மற்றும் மேரி தோட்டங்களை தாம் தத்தெடுத்துள்ளதாக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார். நேற்று முன்தினம் நடைபெற்ற 20வது மாணவர் பண்பாட்டு விழாவில் இதை அவர் அறிவித்தார். 
ஒவ்வொரு தலைவரும் ஒரு கிரமத்தை தத்தெடுக்கும் திட்டத்தை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார். அமைச்சர்கள், துணையமைச்சர்கள், ஆட்சிகுழு உறுப்பினர்கள், அமைச்சின் தலைமை செயலர் ஆகிய அரசு நிர்வாகத்தில் உயரிய பதவியில் இருக்ககூடியவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த கிராமத்தை தத்தெடுத்து அங்குள்ள மக்களின் மேன்மைக்கு சேவையாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

தான் பிறந்து வளர்ந்தது பினாங்கு ஜோர்ஜ்டவுன் என்றாலும் தோட்டபுற மக்களுக்கு தமது சேவை அதிகமாக பயன்படும் என்ற நோக்கிலே இவ்விரு தோட்டங்களை தாம் தேர்ந்தெடுத்து அதற்கான பிரதமர் துறையின் ஒப்புதலையும் பெற்றுவிட்டதாக அவர் கூறினார். 
நேற்றுமுன் தினம் நடந்த மாணவர் பண்பாட்டு விழா நாவலர் மண்டபத்தில், தெலுக் புலாய், கிள்ளான் பகுதியில் நடைபெற்றது. இதில் சுமார் 800 மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளின் மூலம் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். முக்கியமாக, மாணவர்கள் 30 திருக்குறளை மனனம் செய்து பிழையில்லாமல் சொல்லும் போட்டியில் கலந்துகொண்டு, நினைவாற்றல் மற்றும் தமிழின் செழுமையான பண்பாட்டை மேம்படுத்தும் ஒரு சிறந்த முயற்சியாக செயல்பட்டனர்.


இவ்வாறான நிகழ்ச்சிகள், மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் நம்பிக்கையை வளர்த்து, எதிர்காலத்தில் சிறந்த கலைஞர்களாக உருவாக உதவும் என்று செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தமது உரையில் வலியுறுத்தினார். மேலும், இந்த வகை நிகழ்ச்சிகள் தமிழர் கலாச்சாரத்தை உலகளவில் உயர்த்தும் முக்கிய முயற்சியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திருக்குறள், ஆத்திசூடி, கலை, இசை, நாடகம், மற்றும் நடனம் போன்ற கலைத்திறன்களை அனைத்து மாணவர்களும் கற்று, மேலும் வளர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு வழிவகுக்கும் வகையில் அண்மையில் இந்திய பிரதமர் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கும் பரிந்துறையை நம் பிரதமர் ஏற்றுக் கொண்டது ஒரு சரித்திர நிகழ்வாகும் என அவர் கூறினார்.
தமிழர் கலாச்சாரத்தை உலக அரங்கில் உயர்த்தும் இத்தகைய விழாக்கள் தொடர்ந்து நடைபெறுவது அவசியம், மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் பலரையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை, எனத் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் தோட்டபுற மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. முக்கியமாக இடைநிலை பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் குடும்ப சூழலின் காரணமாக மேற்கல்வியை தொடரவே அதிகம் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கும் இதுபோன்ற நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டால் படைப்புதிறன் மிக்க இளைய தலைமுறையின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என அவர் கூறினார். அவ்வகையில் தாம் தத்தெடுத்துள்ள மேரி தோட்டம் மற்றும் புக்கிட் தாகார் தோட்ட ஆரம்ப மற்றும் இடைநிலை பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் கலை கலாச்சார வளர்ச்சிக்கு தாம் முன்னுரிமை அளிக்கவிருப்பதாக அவர் கூறினார்

.

அங்கும் மாணவர் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வு, இயல் இசை நாடகம் மன்றம் மற்றும் கிள்ளான் மாவட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றம் இணைந்து நடத்திய 20வது மாணவர் பண்பாட்டு விழா 2024, நாவலர் மண்டபத்தில், தெலுக் புலாய், கிள்ளானில் சிறப்பாக நடைபெற்றது.

10 Sept 2024 -