தயாரிப்பு தொழிலில் சாதிக்கவே 3ஆவது தேசிய கார்! -மகாதீர்

0
189

தயாரிப்பு தொழிலில் சாதிக்கவே 3ஆவது தேசிய கார்! -மகாதீர்

கோலாலம்பூர், ஆக.24- எவ்வளவு காலம் தான் மலேசியா ஒரு பயனீட்டு நாடாகவே இருப்பது? மலேசியாவும் தயாரிப்பு துறையில் சளைத்த நாடு அல்ல என்பதை நிரூபிக்கும் நோக்கிலேயே, தாம் மூன்றாவது தேசிய கார் தயாரிப்புத் திட்டத்தைப் பரிந்துரை செய்வதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

சீனாவிற்கான தமது அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள மகாதீர், சீனா உலகின் மிகப் பெரிய தயாரிப்பாளர் நாடாக திகழ்வதை தாம் கூர்ந்து நோக்கியதாக, ‘மலேசியா கினி’ உடனான பேட்டியில் கூறினார்.

கடந்த 1985-ஆம் ஆண்டு, நாட்டின் முதல் தேசிய காரை அறிமுகம் செய்த போது, மலேசியாவும், உலகின் மிகப் பெரிய தயாரிப்பு நாடாக பவனி வரும் எண்ணம் கொண்டிருந்தது. அதற்கான வாய்ப்பும், அப்போதைய தருணத்தில் சிறப்பாக இருந்தது என்று அவர் விளக்கினார்.

“அந்தத் தருணத்தில், வளர்ந்து வரும் நாடுகளில், மலேசிய மட்டுமே தேசிய காரை தயாரித்து இருந்தது. நீங்கள் வேண்டுமானால், அது குறித்த விவரங்களைத் தேடிப் பாருங்கள்” என்று அவர் சொன்னார்.

“ஆனால், நமக்கு (மலேசியர்களுக்கு) உள்நாட்டு தயாரிப்புகள், மற்றும் பொருட்கள் மீது அதிக நாட்டம் இல்லை. வெளிநாட்டு தயாரிப்புகளை மட்டுமே நாம் விரும்புகிறோம். நுகர்வோர் சமுதாயமாக நாம் தொடர்ந்து நீடித்தால், நாடும் நாமும் என்றுமே ‘பணக்கார’ நாடாக வலம் வர முடியாது” என்று மகாதீர் நினைவுறுத்தினார்.

நவீன மோட்டார் வாகனங்களை தயாரிப்பதில் சில சிக்கல்கள் உண்டு என்பதால், அதனை உணரும் மலேசியாவின் வாகனத் துற, அதனின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தில் தேவையான கவனத்தை செலுத்தும். அதன் வாயிலாக, நாட்டின் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

மூன்றாவது தேசிய கார் தயாரிக்கப் படுவதால், நாட்டின் வாகனத்துறையும் பாதுகாக்கப் படும். இதன் வாயிலாக புரோட்டோனின் சரிவும் குறைக்கப் படலாம் என்று அவர் சொன்னார்.

“ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகள், தங்களின் வாகனத் துறையை பாதுகாத்து வருகின்றன. சீனா, கொரியா, மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளும், தங்களின் சொந்த தயாரிப்பு கார்களுக்குத் தான் முக்கியத்துவம் வழங்குகின்றன. மலேசியா மட்டுமே அதற்கு விதிவிலக்கு” என்று அவர் சுட்டிக் காட்டினார்.

Your Comments