மூன்று ஆண்களை திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணம் மோசடி- பெண் கைது

0
40

ஆந்திரப் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவர் டென்மார்க் நாட்டில் சாப்ட்வேர் என்ஜினீயராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், திருமண தகவல் மேட்ரிமோனி இணைய தளத்தின் வாயிலாகத் திருப்பதியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சொப்னா எனும் பெண்ணைச் சந்தித்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்குப் பிறகு ஆஞ்சநேயலுவும் சொப்னாவும் ஐதராபாத்தில் மூன்று மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். விடுமுறை முடிந்ததும், சொப்னாவை, ஆஞ்சநேயலு டென்மார்க்கிற்கு அழைத்துள்ளார். ஆனால் சொப்னாவோ, எனக்கு வேலை தான் முக்கியம் என்று கூறி, டென்மார்க் செல்ல மறுத்து, ஹைதராபாத்திலே தங்கியுள்ளார்.

அதன்பின் ஆஞ்சநேயலு, தனியாக டென்மார்க்கிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவர் டென்மார்க் புறப்பட்டவுடன், சொப்னா, அவர் மாமனார், மாமியாரிடம், உங்கள் மகன் என்னை ஏமாற்றிவிட்டார். எனக்கு நஷ்டஈடாகப் பணம் கொடுங்கள். இல்லையென்றால் நடப்பதே வேறு என்று கூறி மிரட்டியுள்ளார்.

ஆனால், அவர்கள் மருமகளை எப்படியாவது சமாதானப்படுத்திவிடலாம் என்று அவரிடம் சமாதானம் பேச, சொப்னாவோ, பிரச்சினையை பெரிதாக்கியுள்ளார். இதனால் அவர்கள் அருகில் இருக்கும் போலீஸ்  நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 இதையடுத்து போலீசார் சொப்னாவை பிடித்து விசாரித்தபோது, அவர் ஐபிஎஸ் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. விசாரணையில், சொப்னா எனும் பெயர் கூட போலியானது என்பது தெரிய வந்தது. ரம்யா எனும் இயற்பெயர் கொண்ட சொப்னா இதற்கு முன்பு சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் என்பவரையும் ஆத்மகூரைச் சேர்ந்த சுதாகர் என்பவரையும் வெவ்வேறு பெயர்களில் திருமணம் செய்து, பணம் பறித்து ஏமாற்றியுள்ளார்.

அந்தப் பெண்ணின் பண வேட்டையில் மூன்றாவதாகச் சிக்கியவர் தான் ஆஞ்சநேயலு. மூன்று பேரை ஏமாற்றிய பெண்ணைப் போலீசார் கைது செய்தபோதுதான் அந்தப் பெண் இப்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்தப் பெண்ணைக் காப்பகத்தில் சேர்த்துவிட்டு, வேறு யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Your Comments