சுங்கத் துறை அதிரடி நடவடிக்கையில் 14 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள பட்டாசுகள், போதைப் பொருட்கள் பறிமுதல்
Customs action Firecrackers, drugs worth RM1.4 million seized
மணிவேந்தன் டிங்கில் ஜன 22,
அரச மலேசிய சுங்கத் துறை மேற்கொண்ட ஒரு அதிரடி நடவடிக்கையில் சுமார் 14 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள பட்டாசுகள், போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
இச்சம்பவம் குறித்து நேற்று இங்குள்ள அரச மலேசிய சுங்கத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அரச மலேசிய சுங்கத் துறையின் அமலாக்கப் பிரிவின் உதவி தலைமை இயக்குனர் புவான் ரைசாம் பிந்தி செத்தாபா @ முஸ்தாபா விளக்கமளித்தார்.
கடந்த 14-1-2025 அரச மலேசிய சுங்கத் துறை தலைமையகத்தின் அமலாக்கப் பிரிவினர் சிலாங்கூர் பெர்னாங் பகுதியில் ஒரு கிடங்கை முற்றுக்கையிட்டு சோதனை நடத்தியதில் 6 லட்சத்து 29 ஆயிரத்து 320 ரிங்கிட் மதிப்புள்ள பட்டாசுகள் கைப்பற்றப்பட்டதாகவும் இதற்கு செலுத்த வேண்டிய சுங்க வரி 3 லட்சத்து 77 ஆயிரத்து 592 ரிங்கிட் என்று அவர் கூறினார்.
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் போர்ட்கிள்ளான் துறைமுகத்தின் வழி இப்பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவை இறக்குமதி செய்வதற்கான உள்துறை அமைச்சின் அனுமதி கடிதத்தை கொண்டிருக்கவில்லை என்றும் சுங்கத் துறை சட்டம் 1967 பிரிவு 135(1) விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றம் நிரூபிக்கப்ட்டால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் தொகையை விட பத்து மடங்கு கூடுதல் அல்லது 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது கைப்பற்றப்பட்ட பொருட்களின் தொகையை விட கூடுதலாக 20 மடங்கு அல்லது 5 லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறை அல்லது இவை இரண்டுமே விதிக்கப்படும்.
இதனிடையே அரச மலேசிய சுங்கத் துறை தலைமையக்கத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் 15-1-2025 இல் பெட்டாலிங் ஜெயாவில் ஒரு கிடங்கை சோதனையிட்டதில் 1.100கிராம் எடையை கொண்ட 2 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய கொக்கேய்ன் வகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து பரிசு புத்தக்கத்தில் மறைத்து விரைவுத் தபால் வழி நாட்டிற்குள் இது கடத்தி வரப்பட்டுள்ளதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது 12 பிரம்படிகள் விதிக்க வகை செய்யும் சுங்கத் துறை சட்டம் 1952 பிரிவு 39பி (1) (a) இல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்ந்து கடந்த 3-1-2025 பிற்பகல் 1.45 மணியளவில் இல் சுங்கத் துறையினர் பெட்டாலிங் ஜெயாவில் ஒரு கிடங்கில் மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கையில் 1000 கிராம் எடையைக் கொண்ட கொக்கேய்ன் வகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் இதனுடைய சந்தை விலை 2 லட்சம் ரிங்கிட் என அவர் குறிப்பிட்டார்.
சுங்கத் துறை மேற்கொண்ட தீவிர விசாரணையில் வெளிநாட்டிலிருந்து பொம்மைக்குள் மறைத்து நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டுள்ளதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது 12 பிரம்படிகள் விதிக்க வகை செய்யும் சுங்கத் துறை சட்டம் 1952 பிரிவு 39பி (1) (a) இல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிகரெட், பட்டாசு, மது, போதைப் பொருள், வாகனங்கள் மேலும் பல தடை செய்யப்பட்ட பொருட்களை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கடத்தி வருவது நாட்டின் பொருளாதாரத்திற்கும், அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் என்றும் இது போன்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள் அரச மலேசிய சுங்கத் துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1-800-88-8855 என்ற எண்களின் வழியோ அல்லது அருகில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்திலோ புகார் செய்யலாம் என்றும் புகார் செய்பவர்களின் ரகசியம் காக்கப்படுவதற்கு சுங்கத் துறை உத்தரவாதம் அளிப்பதாக புவான் ரைசாம் பிந்தி செத்தாபா @ முஸ்தாபா தெரிவித்தார்.