Categories
பொக்கிஷம்

“இண்டர்நெட்டுக்குத் தமிழில் இணையம் என்று பெயர் வைத்தவர்!” – ஆதி.இராஜகுமாரன்

“இண்டர்நெட்டுக்குத் தமிழில் இணையம் என்று பெயர் வைத்தவர்!” ஆதி.இராஜகுமாரன்

Rajakumaran Photo Feature மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஆதி.இராஜகுமாரன் மறைவு குறித்துத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக, அவரின் நீண்டநாள் நண்பரும், பல பணிகளில் அவருடன் இணைந்து பணியாற்றியிருப்பவருமான முத்து நெடுமாறன் கூறியுள்ளார்.

“ஆதி.இராஜகுமாரன் தமிழுக்கென கலைச் சொற்கள் உருவாக்குவதில் பெரும் ஆர்வம் காட்டியவர். இன்று தமிழின் முக்கியச் சொல்லாகத் தோன்றியிருக்கும் ‘இணையம்’ என்னும் சொல்லை உருவாக்கியவரும் அவரே!” என்று மறைந்த இராஜகுமாரன் குறித்துக் குறிப்பிட்ட முத்து நெடுமாறன், மேலும் பின்வருமாறு தொடர்ந்து தெரிவித்தார்:

“தொண்ணூறுகளின் தொடக்கத்தில், தமிழ்-நெட் என்னும் மடலாடற்குழுமத்தில் தமிழிலேயே மின்னஞ்சல் வழிக் கருத்தாடல்கள் நடந்து வந்தன. உலகத்தில் பலநாடுகளில் வாழும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துரையாடும் குழுமமாக அது திகழ்ந்தது. இணைய முன்னோடிகள் பலர் அந்தக் குழுமத்தில் இருந்தனர். ஆதி.இராஜகுமாரனும் அக்குழுவில் ‘கோ’ என்ற பெயரில் பங்கு கொண்டு தமது கருத்துகளைத் தெரிவித்து வந்தார். மின்னுட்பக் கலைச் சொற்கள் தமிழிலேயே இருக்கவேண்டும் என்று உறுதிபூண்டு செயல்பட்டு வந்த குழுமத்தினர், ‘இண்டர்ணெட்’ என்னும் சொல்லுக்குத் தமிழில் நல்ல சொல் ஒன்றைத் தேடிவந்தனர்”

கையச்சு முறையால் அவதியுறும் அச்சகங்கள் கணினிப் பயன்பாட்டுக்கு மாறவேண்டும் என்று 80களில் முன்னோடியாக இருந்து உழைத்தவர் ஆதி.இராஜகுமாரன். மலேசிய நாளிதழ்களுக்கு இந்தப் புதிய வசதியினை அறிமுகப்படுத்த வேண்டும், அதிக அளவில் நாள், வார, மாத இதழ்கள் இதனைப் பயன்படுத்த வேண்டும் என்று அயராது பாடுபட்டவர் இராஜகுமாரன். குறிப்பாக முரசு அஞ்சல் மென்பொருள் எனது முயற்சியால் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது, என்னை அவர் தம்பியும், அப்போதைய ‘தமிழ் ஓசை’ ஆசிரியருமான ஆதி.குமணனிடம் அழைத்துச் சென்று, தமிழ் ஓசை நாளிதழ் கணினி வழி அச்சிட்டு வெளிவந்தால் பல முன்னேற்றங்களைக் காண முடியும் என்று அதன் பயன்பாட்டைப் பரிந்துரை செய்தவர் இராஜகுமாரன்தான். இவரின் முயற்சியினாலே தமிழ் ஓசை கையச்சு முறையில் இருந்து மாறிக் கணினி அச்சு வழி வெளிவந்த முதல் மலேசியத் தமிழ் நாளிதழ் ஆனது. கணினி வழி மற்ற மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கைகள் அச்சிடப்படுவதற்கு புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியது” என்றும் இராஜகுமாரனின் தொண்டு குறித்து முத்து நெடுமாறன் நினைவு கூர்ந்தார்.சில நாட்கள் கழித்து, என்னைத் தொலைபேசி வழி அழைத்து, ‘இண்டர்ணெட்டுக்கு’ நல்ல தமிழ்பபெயர் ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்துள்ளேன் என்றார். மிகுந்த ஆவலோடு என்ன சொல் என்று கேட்டேன். ‘இணையம்’ என்றார். அருமையான சொல்லாக இருக்கிறதே! இதுபோல வெல்லும் சொல் தேடுவது கடினம். நீங்களே குழுவில் பரிந்துரை செய்யுங்களேன் என்றேன். “நுட்பவியலாளர்கள் இருக்கும் குழு, நீங்கள் அறிமுகம் செய்தால் பொருத்தமாக இருக்கும் என்று எந்தவிதச் செறுக்கும் இல்லாமல், அவருக்கே உரிய பணிவுடன் கூறினார். பல சொற்கள் தோன்றினாலும், அவர் பரிந்துரைத்த ‘இணையம்’ என்னும் சொல்லே வெற்றி பெற்றது.” என்று கூறிய முத்து நெடுமாறன், ஏறக்குறைய அனைத்து உலக மொழிகளும் ‘இண்டர்நெட்’ என்றே கூறும் இந்தப் பெயர், தமிழில் மட்டும் இணையம் என்று விளங்குகிறது. ஆதி.இராஜகுமாரனின் பெயரும் நினைவுகளும் “இணையம்” என்ற சொல்லுடன் தொடர்ந்து இணைந்திருக்கும்.” என்று நன்றி உணர்வுடன் கூறினார்.

“ஆர்ப்பாட்டமில்லாமல், அமைதியாகவும், பணிவாகவும் பல தமிழ்ப் பணிகளை ஊடகத் துறையில் நடத்திக் காட்டியவர் இராஜகுமாரன். அன்னாரின் மறைவு மலேசியத் தமிழ் உலகுக்கு ஏற்பட்ட அளப்பரிய இழப்பாகும். தனிப்பட்ட முறையில், எந்தவிதத் தங்குதடைகள் இல்லாமல், உரிமையோடு பேசும் ஓர் அருமை நண்பரை இழந்தேன்”

Categories
பொக்கிஷம்

நினைவலைகள்: “கை அச்சுக் கோர்ப்பின் கறைபடிந்த வரலாறு” – எம்.துரைராஜ் கட்டுரை

நினைவலைகள்: “கை அச்சுக் கோர்ப்பின் கறைபடிந்த வரலாறு” – எம்.துரைராஜ் கட்டுரை

   இன்று வெள்ளிக்கிழமை காலமான -மலேசியப் பத்திரிக்கை உலகின் பிதாமகர் – என எப்போதும் அழைக்கப்பட்ட – எம்.துரைராஜ் பத்திரிக்கைத் துறையில் பல காலகட்டங்களைக் கடந்து வந்தவர். சுவையான, சுவாரசியமான அனுபவங்களைக் கொண்டவர்.

“எனது சிங்கப்பூர் வாழ்க்கை,… 19-வது வயதில் சிங்கப்பூர் தமிழ் வார இதழில் (புதுயுகம்) தொடங்கியது. எனக்கு முதலில் தரப்பட்ட வேலைவாய்ப்பு அந்த இதழ் சொந்தமாகப் பெற்றிருந்த கையால் மேற்கொள்ளப்படுகின்ற அச்சுக்கோர்ப்பு பகுதியில், சிதறி விழும் தமிழ் எழுத்துருக்களின் (டைப்) உலோக (ஈய) வார்ப்புகளைப் பொறுக்கி, அந்த எழுத்தை அச்சுக்கோர்ப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட இரண்டு அடுக்கு மரப்பலகைத் தட்டில் உருவாக்கப்பட்டிருந்த அதனதன் குழிகளில் போடவேண்டும்.

அச்சு கோர்ப்பவர், தமிழில் நன்கு தேர்ச்சி பெற்றவர். ஒவ்வொரு குழியில் உள்ள எழுத்தை, தனக்கு தரப்படுகின்ற “கையெழுத்து” காப்பியைப் பார்த்து அனாயசமாக ஒவ்வொன்றாகப் பொறுக்கி தனது இடது கையில் இறுக்கப் பற்றியிருந்த சிறிய அச்சுக்கோர்ப்பு செப்புத் தகட்டில், அளவு நிர்ணயித்து ஒவ்வொன்றாக அதற்குள் இணைத்துச் சொருகிக் கொண்டிருந்ததை கண்டு பிரமித்தேன்.

தனது அச்சுக்கோர்ப்பில் கையெழுத்துக் காப்பிக்கு அச்சு உரு கொடுத்தார் அந்த அச்சுக் கோர்ப்பாளர். அச்சில் பதிவாகும் எழுத்துரு, தலைகீழாக இருக்கும். கீழே சிதறும் டைப்புகளை (எழுத்துரு) சரியான குழியில் கொண்டு போய் சேர்ப்பதற்குள் தலை கிறுகிறுத்துவிடும்.

Composing Fonts
பழைய அச்சுக் கோர்ப்பு முறையில் ஈயத்தாலான எழுத்துருக்கள்

இப்படித்தான், இந்த தமிழ் அச்சுக்கோர்ப்பு சிங்கப்பூரிலும் மலாயாவிலும் (பின்னர் மலேசியாவிலும்) அறிமுகம் கண்டது. பூர்த்தியடைந்த அச்சுக்கோர்ப்பு மேட்டர் ஈயத்தட்டு ஒன்றின் மீது சிந்தாமல் சிதறாமல் நூல்கொண்டு இறுகக் கட்டப்பட்டு அதன் மீது அச்சு மை தடவப்பட்டு பிரதி (ஃபுரூப்) எடுக்கப்படும்.

வீட்டில் இருந்து அச்சுக்கோர்ப்பு வேலைக்குச் செல்பவர் தனது கைகளையும்  உடைகளையும் அழுக்காக்கிக் கொள்ளத் தயாராக்கிக் கொள்ளவேண்டும். “அழுக்கு படியற வேலை இழுக்கு அல்ல” என்பது அச்சுக்கோர்ப்புக் காலத்தில் கூறப்பட்ட பொன்மொழி.

அச்சு எழுத்து உலோகவார்ப்பு தமிழகத்தில் இருந்து முக்கியமாக சுதேசி டைப் ஃபவுண்டரில் இருந்து கட்டுக்கட்டாக தருவிக்கப்பட்டு அச்சு பொருத்தும் தட்டின் (கேஸ்-case) குழிகளில் நிரப்பப்படும்.

சிங்கப்பூர் வாழ்க்கையை அடுத்து, கோலாலம்பூரில் தமிழ் நேசனில் துணையாசிரியராக இணைந்தபோது அச்சுக்கோர்ப்பு பகுதியில் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் அச்சுக் கோர்ப்பை தங்களது திருக்கரங்களின் சுழற்சியில் மேற்கொண்டதைக் கண்டேன்.

ஆசிரியர் பகுதியினர் தரும் காப்பிகளை தினசரிக்கும் ஞாயிறு மலருக்கும் தங்கள் கையால் கம்போசிங் செய்துகொண்டிருந்தனர் அச்சுக் கோர்ப்பாளர்கள்.

முதல் நாள் செய்துமுடித்த பக்கங்கள் அடுக்கடுக்காக பிரித்து எடுக்கப்பட்டு ஒவ்வொரு எழுத்தாக அச்சு பொறுக்குத் தட்டின் குழிகளில் சேர்க்க வேண்டும். சில எழுத்துக்கள் தவறான குழிகளில் சேர்க்கப்பட்டு அதை மின்னல் வேகத்தில் அச்சுக் கோர்ப்பவர்கள் கோர்த்து விடுவதாலேயே அச்சுப்பிழைகள் ஏற்படக் காரணமாக இருந்தனர்.

அச்சுக்கோர்த்த மேட்டரை புரூஃப் எடுத்து பிழை திருத்துவோரிடம் சேர்க்கும் போது அவர்களின் கவனக்குறைவால் பிழைகளுடன் பத்திரிகைகளில் செய்திகள் இடம் பெறுவதுண்டு. அவ்வாறு பிழையாக அச்சுக் கோர்க்கப்பட்டு கவனமுடன் திருத்தப்படாமல் பத்திரிகையில் இடம்பெற்ற பல சம்பவங்கள் சர்வசாதாரணமாக நிகழ்வதுண்டு.

உதாரணமாக “எம்பெருமான்” என்பதற்கு பதிலாக “எமபெருமான்” என்றும் “வைத்தியர்” என்பது மாறி “பைத்தியர்” என்றும் “தருணம்” என்பது “மரணம்” என்றும் “நாட்டுமருந்து” என்பது “பாட்டுமருந்து” என்றும் “கல் எறிந்தனர்” என்பது “பல் எறிந்தனர்” என்றும்,

இன்னும் பல பல விநோதமான பெயர்களில் பிழைகள் அச்சேறிவிடுவதுண்டு.

ஒரு விளம்பரப் பக்கத்தில் “துக்க அறிவிப்பு” என்பது “தூக்க அறிவிப்பாக” இடம்பெறுவதுண்டு. டைப் தயாரிப்பு நிறுவனம்  சில முக்கிய எழுத்துக்களில் எண்ணிக்கையை குறைத்து ஏற்றுமதி செய்வதால் தற்காலிகமாக வெறும் எழுத்தைத் திருப்பிப் போட்டு புரூஃப் எடுத்து அனுப்புவதும், அது கவனக்குறைவால் திருத்தப்படாது அச்சில் வெளிவருவதும், கை அச்சுக் கோர்ப்பு காலத்தில் சர்வசாதாரணம்.

அங்குலக் கணக்கில் அச்சுக்கோர்ப்பு அந்தக் காலத்தில் கணக்கிடப்படும்.

கை அச்சுக்கோர்ப்பாளர் தனது திறமையை முழுவீச்சில் பயன்படுத்தி இரண்டு மணிநேரத்தில் 60 அங்குல மேட்டரை அச்சுக்கோர்த்துக் கொடுப்பதும் உண்டு. வழக்கமாக ஒருமணி நேரத்தில் பத்து அங்குலம்  முதல் பதினைந்து அங்குலம் மட்டுமே அச்சுக்கோர்க்க முடியும்

.

கை அச்சுக் கோர்ப்பாளர்களுக்கு இரண்டுவித பாதிப்புக்கள் வருவதுண்டு. நின்று கொண்டே அச்சுக் கோர்ப்பதால் அதிகமானவர்கள் மூட்டுவலியால் அவதிப்படுவதுண்டு. இடதுகையில் அச்சுக்கோர்ப்பு செப்புத்தகட்டை இறுகப் பற்றிக்கொண்டு நீண்டநேரம் வலது கையால் அச்செழுத்து டைப்புகளை பொறுக்கிப் பொறுக்கி இணைத்து அதை ஒரு தட்டில் கவனமுடன் இறுக்கமுடன் கட்டப்படுவதால் மன இறுக்கமும் (டென்சன்)  (டைப்புகள் உதிர்ந்து சிதறினால் இருமடங்கு வேலை) கைகளின் நரம்புகளில் ஏற்படுகிற தசை இறுக்கமும் ஏற்பட்டு கைவிரல்களை மடக்கி விரிக்கமுடியாத நிலை உருவாகலாம்.

எனது உறவினர் பையன் ஒருவன் தனது வாழ்க்கையை சிங்கப்பூரிலும், கோலாலம்பூரிலும் கைஅச்சுக்கோர்ப்பில் முப்பதாண்டுகள் கழித்து அப்பாதிப்பினால் தமிழகத்தில் எந்த சிகிச்சையிலும் பலன் காணாது  தற்போது வீட்டோடு இருக்கின்றான். தனது எழுபதாவது வயதிலும் தன்கையால் உணவை எடுத்து உண்பதில் அதிக சிரமத்தை அனுபவிக்கிறான். அவனது பத்துக் கைவிரல்களும் மடங்கிக்கொண்டு வேதனை கொடுக்கின்றது.

அச்சுகோர்த்த மேட்டர் மீது மை தடவி புரூஃப் எடுப்பதால் கைகள்  அழுக்காகி அதைச் சுத்தம் செய்ய சோப்புடன் மண்ணெண்ணெய் கலந்து அலம்ப வேண்டும்.  அன்றாடம் 15 முதல் 20 அச்சுக்கோர்ப்பாளர்களுக்கு மண்ணெண்ணெயும் சோப்பும் முழுமையாகக் கிடைப்பதில் பத்திரிக்கை நிர்வாகங்கள் கஞ்சத்தனம் காட்டியதுண்டு.

அதன் தாக்கத்தால் அச்சுக்கோர்ப்பாளரின் உடல் நலம், கிருமிகளின்  தாக்குதலால் பாதிப்புறுவதும் உண்டு. “அச்சு வேலை – நச்சு வேலை” என்று 50-களில் பத்திரிகை வெளியிடுபவர்களும் அச்சகம் நடத்துபவர்களும்   சபிக்கப்பட்டதுண்டு.

ஆனால் இன்றைய கணினி யுகம் அச்சு வேலையை மெச்சும் வேலையாக்கித் தந்துள்ளது. தமிழ் எழுத்து உருக்களுக்கு மை தடவி புரூஃப் எடுத்து கைகளில் அழுக்கேற்றி கொள்வதற்கும் விடுதலை கிடைத்திருக்கிறது.

 

Categories
உலகம் பொக்கிஷம்

வாஜ்பேயி: தமிழர்களுடனான உறவு எப்படி இருந்தது?

வாஜ்பேயி: தமிழர்களுடனான உறவு எப்படி இருந்தது?

 • ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பேயி
 

இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். 

அகில இந்திய அளவில் மூத்த தலைவராக இருந்த கலைஞர் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை. கிட்டத்தட்ட அவரது வயதை ஒத்த வாஜ்பேயியும் வியாழக்கிழமைநம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். இது மனதிற்கு பெரும் வேதனையை தருகிறது.

பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பேயி ஒரு சிறந்த கவிஞர், இலக்கியகர்த்தா, ரசனைமிகுந்தவர், ஆங்கிலத்திலும் இந்தியிலும் சிறப்பாக மக்களை ஈர்க்கக் கூடிய வகையில் பேசக்கூடியவர், சிறந்த நாடாளுமன்றவாதி, மென்மையானவர், அரசியலில் அடிமட்டத்திலிருந்து வளர்ந்தவர். இவருடைய நாடாளுமன்ற பேச்சுக்கள் நான்கு தொகுதிகளாக புத்தகமாக வெளிவந்துள்ளன. அவை இந்தியாவின் சமகால அரசியலைப் பற்றி சொல்லும் ஆவணங்களாக விளங்குகின்றன.

அயோத்தி பிரச்சனையும், குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரமும் இவர் இதயத்தை குத்துகின்ற சம்பவங்களாக இருந்தன. அரசியலில் இவருடைய சகாக்களை மதவாத தீவிரவாதிகள் என்று விமர்சிக்கிறவர்கள்கூட வாஜ்பேயி அவர்களை மனம்திறந்து பாராட்டுவார்கள். Right Man in the Wrong Party (தவறான கட்சியில் இருந்த சரியான மனிதர்) என்று பலர் இவரைச் சொல்வதுண்டு.

தன் இளமைக் காலத்தில் இவரும் எல்.கே. அத்வானியும் தில்லியில் ஒரு சிறு அறையில் தங்கி, இவர்களே சமைத்து உண்டு, அரசியல் பணிகளை மேற்கொண்டார்கள். தலைவர் என்ற வார்த்தைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் அவர். மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த ஜனதா ஆட்சி காலத்தில், வெளியுறவுத் துறை அமைச்சராக வாஜ்பேயி இருந்தார். அப்போது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியாவிற்கு இருந்த இருநாட்டு உறவுகளை சமச்சீரமைத்தவர் அவர்.

1975ம் ஆண்டு இந்திராகாந்தி அவசரநிலையை பிரகடனம் செய்தபோது அதைத் தீவிரமாக எதிர்த்தவர். வங்க தேச விடுதலைக்கு இந்திராகாந்தி ஆற்றிய பணிகளைப் பாராட்டி “எங்கள் துர்கா தேவியே” என்றும் அழைத்தவர். இப்படி இவருடைய சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். 1986லிருந்து 2000வரைக்கும் இவரைச் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் எனக்கு அமைந்தன.

ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பாய்

தில்லியில் வைகோ அவர்களை கேபினட் அமைச்சர் ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன், எந்தத் துறை வேண்டும் என்று மட்டும் என்னிடம் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார் வாஜ்பேயி.

ஆனால், வைகோ “வெறும் நான்கு எம்.பிக்களைக் கொண்டு எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம். தமிழ்நாட்டில் என்னுடைய கட்சியை வளர்க்கவேண்டும்” என்றார். அதற்கு பதிலளித்த வாஜ்பேயி, ” ராமகிருஷ்ண ஹெக்டே மூன்று எம்.பிக்களை வைத்துக் கொண்டு வர்த்தகத்துறை அமைச்சராக இல்லையா…” என்றபோது, வை.கோ. வேண்டவே.. வேண்டாம் என்று தலையசைத்துவிட்டார். ஒரு கூட்டணிக் கட்சியை ஒரு பிரதமர் எப்படி மதித்தார் என்று கண்கூடாக அப்போது பார்த்தேன்.

வாஜ்பேயி அவர்களது ஆட்சியில் அரசியலமைப்புச் சட்டம் மாறுதல் குறித்த நீதிபதி வெங்கடாச்சலைய்யா குழுவில் அல்லது கேபினட் அந்தஸ்தில் உள்ள காதி கிராம வளர்ச்சி வாரியத்தில் தலைவராக என்னை நியமிக்க தன் கைப்பட எழுதிய கடிதத்தை வை.கோ அவர்களின் பரிந்துரையில் கையொப்பமிட்டு “ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லி அவருடைய காலை உணவை உண்டுவிட்டு, பப்பாளி பழத்தினை சாப்பிட்டுக்கொண்டே என்னைப் பார்த்து தலையசைத்துப் புன்னகைத்த நிமிடங்களை மலரும் நினைவுகளாக எண்ணிப்பார்க்கிறேன்.

பின் 1998 இறுதியில் ஜெயலலிதா மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால், பொதுத்தேர்தல் வந்தது. இதற்கிடையில் இந்த பொறுப்பு கிடைக்காமல் போனது வேறு விஷயம்.

ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பாய்

கடந்த 1998 செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்த நாளை எழுச்சி நாள் என்று சென்னைக் கடற்கரையில் வை.கோ. நடத்தினார். அந்த நிகழ்வை முன்னின்று நடத்தும் வாய்ப்புக் கிடைத்தது. அன்றைக்கு பிரதமர் வாஜ்பேயி சென்னைக்கு வருகை தந்திருந்தபோது, விமான நிலையத்தில் வைகோவும் கலைஞரும் சந்தித்தார்கள். 1993ல் தி.மு.கவிலிருந்து வெளியேறிய வை.கோ மீண்டும் கலைஞர் அவர்களை அன்றைக்குத்தான் சந்தித்தார்.

பிரதமர் வாஜ்பேயியின் வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிவடைந்தவுடன், ராஜ் பவன் செல்ல தயாரானார். அப்போது சேது சமுத்திர திட்டம் தொடர்பாக தான் எழுதிய கடிதத்தை வைகோ என்னிடமிருந்து வாங்கி பிரதமரிடம் “சேது சமுத்திர கேனால்….” என்று சொல்லி கொடுக்க முயற்சித்தார். அப்போது தன் கைகளைக் காட்டி, “கடிதத்தை வைத்துக் கொள்ளுங்கள்.. சேது சமுத்திர திட்டம் பற்றிய மனுதானே… இன்றைக்கு மாலை அதைப் பற்றி அறிவிப்பேன்” என வைகோவிடம் சிரித்துக் கொண்டே சொன்னார் வாஜ்பேயி.

திட்டமிட்டவாறு அன்று மாலை எழுச்சி மிகுந்த கூட்டம் நடைபெற்றது. கூட்ட மேடைக்குப் பின்புறம் தமிழக உணவு வகைகள் சுடச்சுட மணக்கும் வகையில் தயாராகி இருந்தன. மேடைக்குப் பின்புறம் வந்த பிரதமர் வாஜ்பேயி இதைப் பார்த்தவுடன் வைகோவிடம் “சாப்பிடலாமா” என்று உரிமையுடன் கேட்டு ருசித்துச் சாப்பிட்ட பின், சமையல்காரரைப் பார்த்து “நன்றாக இருந்தது” என்று சந்தோஷத்தோடு பாராட்டவும் செய்தார்.

இதை தன்னோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்.கே. அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாருக் அப்துல்லா, பிரகாஷ்சிங் பாதல், வெங்கைய்யா நாயுடு போன்றவர்களிடம் “நான் தமிழக உணவுகளை நேசிக்கிறேன். நீங்களும் சாப்பிடுங்கள்” என்று சொன்னதையெல்லாம் மறக்க முடியாது.

ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பாய்

ஒரு முறை தீப்பட்டித் தொழில் பிரச்சனைகள் குறித்து சிவகாசி, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி போன்ற அவ்வட்டார தீப்பட்டி உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு, தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வைகோ அவர்கள் சென்றிருந்தார். அப்போது அவர் சிவகாசி தொகுதியின் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார்.

பிரதிநிதிகளை சந்திக்கவந்த வாஜ்பேயி அவர்கள் அனைவரோடும் தேநீர் அருந்திவிட்டு, ஒவ்வொருவர் பெயரையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். இரண்டு நிமிடத்தில் மனுவை வாங்கிவிட்டு அனுப்பவேண்டிய பிரச்சனையை, ஒரு நாட்டின் பிரதமராக இருந்த நிலையிலும் இருபத்து ஐந்து நிமிடங்கள் எங்களோடு செலவிட்டார்.

ஈழத் தமிழர்கள் பிரச்சனையில், தமிழர்களுக்கு ஆதரவாகவே தம் ஆட்சி காலத்தில் முடிவுகளை மேற்கொண்டார். இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தந்தை நிறுத்திவைத்ததோடு, எதிர்காலத்திலும் ஆயுத தளவாடங்கள் எதுவும் இலங்கைக்கு அளிக்கக்கூடாது என்று தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார். இவர் ஆட்சிக் காலத்தில் பம்பாயிலிருந்து இந்தியாவின் போர்கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்ப இருந்ததை தடுத்து ஆணையிட்ட இரும்பு மனிதர் .

சுரேஷ் பிரபு தலைமையில் நதிநீர் இணைப்புக்கு ஆய்வுக் குழு அமைத்தது, நாட்டில் இன்றைக்கு எளிதில் பயணிக்க முடிகின்ற தங்க நாற்கரச் சாலைகளை உருவாக்கியது போன்ற பல அரிய சாதனைகளை நாட்டுக்கு அர்பணித்த அற்புத மனிதர்.

1986ம் ஆண்டு மே மாதம் மதுரை பந்தயத் திடலில் டெசோ மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் வாஜ்பாயியும் கலந்து கொண்டார். அப்போது அவரையும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த எச்.என். பஹுகுணாவையும் மறுநாள் விடியற்காலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்லவேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பா.ஜ.கவின் மூத்த தலைவரான ஜனா கிருஷ்ணமூர்த்தியும் உடனிருந்தார்.

ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பேயிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அவர்கள் தங்கியிருந்த பாண்டியன் ஓட்டலிலிருந்து கோவிலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, சித்திரை வீதிகளையும் சுற்றிக் காண்பித்தேன். அங்கிருந்து புறப்படும்போது, வாஜ்பேயி “இட்லி, தோசை சாப்பிடலாம்” என்றார். உடன் வந்திருந்த பஹுகுணாவும் இந்தியில் “சாப்பிடலாமே” என்று சொல்ல, காலேஜ் ஹவுஸ் உணவு விடுதிக்கு இருவரையும் அழைத்துச் சென்றேன்.

காலை 9.00 மணியளவில் ஓட்டலுக்கு வெளியே வந்ததும், “எங்களை யாருக்கும் அடையாளம் தெரியாதவாறு அமைதியாக கோவிலைச் சுற்றிக் காண்பித்து, நல்ல உணவையும் சாப்பிட வைத்ததற்கு நன்றி” என்றார் வாஜ்பேயி. மீண்டும் பாண்டியன் ஓட்டலுக்குத் திரும்பியபோது வாஜ்பேயிடமும், பஹுகுணாவிடமும் அடுத்தவாரம் நடைபெற இருந்த என்னுடைய திருமண அழைப்பிதழைக் கொடுத்தேன்.

வாஜ்பேயி அவர்கள் தில்லிக்கு சென்ற பின், திருமண நாளான 12-05-1986 அன்று, அதனை நினைவில் வைத்து எனக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பியிருந்தார். இத்தகைய அன்பான மனிதருக்கு தாமதமாக பாரத ரத்னா வழங்கப்பட்டாலும், பொருத்தமான மனிதருக்கே வழங்கப்பட்டுள்ளது என்று பாரத ரத்னாவுக்குத்தான் பெருமை.

Categories
பொக்கிஷம் பொது செய்திகள்

ஹிட்லரின் வதை முகாமில் மலர்ந்த காதல்

ஹிட்லரின் வதை முகாமில் மலர்ந்த காதல்…பாகம் 2

மிகப்பெரிய வதைமுகாம்

ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான ஹாலோகாஸ்ட் படுகொலை நடவடிக்கைகளின்போது, யூதர்களை அடைத்து கொடுமைப்படுத்திக் கொல்ல பல வதை முகாம்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் மிகப்பெரிய வதைமுகாம் அவுஷ்விட்ஸ் வதைமுகாம், ஜெர்மனி வசம் இருந்த தெற்கு போலந்தில் அமைந்திருந்தது. நாஜிக்களின் உளவு அமைப்பான எஸ்.எஸ், ஐரோப்பா முழுவதிலும் இருந்து யூதர்களை பிடித்துவந்து இங்கு அடைத்து சித்திரவதை செய்வார்கள்.

முகாம்களுக்கு கொண்டு வரப்பட்ட உடனேயே பலர் நச்சுவாயு அறைகளில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். வேறு சிலரோ சில மாதங்கள் வரை வதைமுகாம்களில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்களின் தலைமுடி மழிக்கப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு அரையாடையுடன் இரவும் பகலும் கடுமையான வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். உயிர் வாழ்வதற்கு போதுமான உணவு மட்டுமே வழங்கப்பட்டது.

வதைமுகாம்களில் இருந்த குழந்தைகள் பெற்றோர், உற்றார் உறவினரிடமிருந்து, பிரிக்கப்பட்டதோடு, அரை வயிறு உணவு கொடுக்கப்பட்டு பசியுடனே வைக்கப்பட்டனர். இதனால் பலவீனமான குழந்தைகளால் வேலை செய்யமுடியாது. அவர்கள் நச்சுவாயு நிரப்பப்பட்ட அறைக்கு அனுப்பப்பட்டு கொல்லப்படுவார்கள்.

ஹிட்லரின் அவுஷ்விட்ஸ் வதைமுகாம் பல ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டது. 1945ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப்போரின் போது சோவியத் ஒன்றியத்தின் படைகள் அவுஷ்விட்ஸை கைப்பற்றியபிறகு வதைமுகாம்கள் நிரந்தரமாக மூடப்பட்டன.

 

கைகளில் பச்சைக் குத்தப்பட்ட அடையாள எண்கள்

பெயரைக் கேட்டாலே அச்சம் விளைவிக்கும் அவுஷ்விட்ஸ் வதைமுகாமில் கைதிகள் தங்களது பெயர்களால் அல்ல, எண்களால் அடையாளம் காணப்படுவார்கள். கைதிகளின் கைகளில் அவர்களின் அடையாள எண்கள் பச்சைக் குத்தப்படும்.

 

வதைமுகாமில் இருந்த 32407 என்ற ஒரு கைதியின் வாழ்க்கையை அண்மையில் உலகிற்கு வெளிகொண்டு வந்திருக்கிறது , ‘The Tattooist of Auschwitz’ என்ற புத்தகம். வதைமுகாமில் கைதி எண் 32407 ஆக பச்சைக் குத்தப்பட்டவரின் இயற்பெயர் லுட்விக் லேல் எய்சன்பர்க் (Ludwig Lale Eisenberg). யூதரான இவர், 1916ஆம் ஆண்டு ஸ்லோவாக்கியாவில் பிறந்தார்.

1942 ஏப்ரல் மாதம் லேலின் வீட்டிற்கு நாஜிப்படைகள் வந்தன. விவரம் எதுவும் தெரியாத நிலையில், நாஜிப் படையில் பணிபுரிய முன்வந்தார் வேலையில்லாமல் இருந்த லேல். தான் ராணுவத்தில் சேர்ந்துவிட்டால், குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று அவர் தப்புக்கணக்கு போட்டார்.

தொடரும்   …..

Categories
பொக்கிஷம்

கருணாநிதி விட்டுச்சென்றுள்ள பாரம்பரியம் என்ன?

கருணாநிதி விட்டுச்சென்றுள்ள பாரம்பரியம் என்ன?

 • ஒரு முறை சென்னையில் உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு, உலகிலேயே மிகவும் பணக்கார மனிதர் அவரை வீடு தேடி வந்து சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
kalaignar karunanidhi dmk

“என்னிடம் கொஞ்சம் கடன் வாங்குவதற்காக அவர் வந்தார்,” என்று கருணாநிதி உடனடியாக பதிலளித்தார்.

தனது பொது வாழ்க்கை முழுமைக்கும் கருணாநிதி கொண்டிருந்த தன்னம்பிக்கையின் அளவு இது.

பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து, தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்த கருணாநிதி தாம் போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களில் ஒன்றில்கூட தோல்வியடைந்ததில்லை. ஏழு தசாப்தங்கள் பொது வாழ்வில் பங்களித்த மிகச் சில அரசியல் தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர்.

இரண்டு ஆயுதங்களைக் கொண்டுதான் அவர் அரசியலில் நுழைந்தார். ஒன்று அவரது பேச்சுத் திறமை, இன்னொன்று எழுத்துத் திறமை. அப்போது அவரிடம் பண பலமும் இல்லை, அதிக படிப்பும் இல்லை.

கருணாநிதிக்கு முன்பு திமுகவின் முன்னணி தலைவர்களாக இருந்த அண்ணாதுரை, மதியழகன் உள்ளிட்டோர் அப்போதே முதுகலை பட்டம் பெற்றவர்களாக இருந்தனர். ஆனால், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய கருணாநிதி அவர்களைவிட அதிக நூல்களை எழுதினார். எழுத்து மீதான அவரது தீராக் காதல் அவரை பல உயரங்களுக்கு அழைத்துச் சென்றது.

17 வயதிலேயே இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டிய கருணாநிதி, தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற மாணவர் அமைப்பைத் தொடங்கினார்.

கருணாநிதி தனது அரசியல் ஆசானான அண்ணாவை 1940களில் சந்தித்தார். பெரியார் உடன் உண்டான கருத்து வேறுபாட்டால், திமுக எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியபோது, அண்ணாவுக்கு நெருக்கமான, நம்பிக்கைக்குரிய தளபதியானார். கட்சியின் பிரசாரக் குழுவின் உறுப்பினராக மட்டுமல்லாது, கட்சியின் முக்கிய சக்தியாகவும் திகழ்ந்தார்….தொடரும்

myvelicham.com fbook

 

Categories
Featured Johor Bahru பொக்கிஷம் பொது செய்திகள்

நான் எப்போதோ இறந்திருப்பேன் – மகாதீர்

நான் எப்போதோ இறந்திருப்பேன் மகாதீர்

கோலாலம்பூர், ஜூலை.11

உலகின் வயதான பிரதமராகக் கருதப்படும் துன் மகாதீருக்கு நேற்று 93 வயது பூர்த்தியாகிய வேளை, தமது 64-வது வயதிலேயே தாம் இறந்திருக்க வேண்டியவர் என்றும், மருத்துவத் துறையின் அறிவியல் வளர்ச்சியால் மட்டுமே தாம் இதுவரை உயிரோடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

1989-ஆம் ஆண்டு, முதல் முதலில் தனக்கு மாரடைப்பு வந்ததாகவும், அப்போது இருதய சிகிச்சை நிபுணர் மட்டும் இல்லை என்றால் அப்போதே தான் இறந்திருக்கக் கூடும் என்றார் அவர். “இருதயத்தை பிளந்தாலே, நுரையீரல் பாதிக்கப்படும். ஆனால், டாக்டர் யாஹ்யா அவாங் என்ற வல்லுநரால் தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாலதான் நான் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என அவர் அஸ்ட்ரோ அவானியின் நிகழ்ச்சியொன்றில் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

அதன் பிறகு 2006-ஆம் ஆண்டில், துன் மகாதீருக்கு இரு முறை மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொல்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எல்லா அறுவை சிகிச்சைகளும் ஐ.ஜே.என்னில்தான் மேற்கொள்ளப்பட்டதாக மகாதீர் தெரிவித்தார்.

இதனிடையே, மகாதீர் கடைப்பிடித்து வந்த உணவு முறையும்தான் அவருடைய ஆரோக்கியத்திற்கு காரணமென அவருடைய மருத்துவர் யாஹ்யா சொல்லி இருக்கிறார். இதற்கு காரணமே, அவருடைய தாயார் என மகாதீர் சொன்னார்.

Categories
பொக்கிஷம்

கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள்

கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள்

 • திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான டுகருணாநிதி தனது 95 வயது  முன்னிட்டு அவர் குறித்த 95 தகவல்களை இங்கே பகிர்கிறோம்.
கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்           
 1. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும்.
 2. கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம்.
 3. கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. போர்ட் ஸ்கூல் ஹாக்கி டீமிற்காக விளையாடி இருக்கிறார் கருணாநிதி.
 4. கருணாநிதியின் முதல் மேடை பேச்சு ‘நட்பு’ குறித்து.  எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் ‘நட்பு’ என்ற தலைப்பில் பேசினார்.
 5. கருணாநிதி முதன்முதலில் துவங்கிய பத்திரிகையின் பெயர் மாணவ நேசன். 1941ல் வெளியான மாணவ நேசன் ஒரு மாத இதழ்.
 6. முதன் முதலில் கருணாநிதி தொடங்கிய அமைப்பு தமிழ் மாணவர் மன்றம்.
 7. நீதிக்கட்சியை சேர்ந்த அழகிரிசாமியால் தன் சிறுவயதில் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அதன் காரணமாகவே தம் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.
 8. தான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்று ஒரு முறை கருணாநிதி கூறினார்.
கருணாநிதி

9. எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டது சேலம் மாடர்ன் தியேட்டரில்தான்.

10. மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர் கருணாநிதி . முதல் மனைவி பத்மாவதி. அவகுப் பிறந்தவர், மு.க.முத்து. திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார் பத்மாவதி. கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்கள் அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்குப் பிறந்தவர் கனிமொழி.

11. கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், ‘பழனியப்பன்’. திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944ல் அரங்கற்றப்பட்டது.

12. 50களிலிருந்து 70கள் வரை தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை அளித்தவர் கருணாநிதி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி,மலைக்கள்ளன் .

13. கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படம்தான் முதன் முதலில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம்.

14. 1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் – சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி.

15. பராசக்தி படம் வெளிவந்தபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஒரு இதழில் பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடவே, அதே பெயரில் ஒரு நாடகத்தை எழுதி மாநிலம் முழுவதும் நடத்தினார் கருணாநிதி.

16. கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஸ்ரீ ராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான். அந்தத் தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92. எழுதிவந்தபோதே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.

17. கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்

18. 21 நாடகங்களை கருணாநிதி எழுதியிருக்கிறார். 1957ல் தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதினார்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்

19.இனியவை 20 என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் கருணாநிதி எழுதியிருக்கிறார்.

20. கருணாநிதி பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 69.

21. கருணாநிதி கதை – வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 9.

22. கருணாநிதியை ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் ‘ஆண்டவரே’ என்று அழைத்திருக்கிறார்.

23. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், 1969ல் கருணாதியிடம் பணியில் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உதவியாளராக இருந்துவருகிறார். இரண்டு முறை கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் கருணாநிதியிடம் சேர்ந்திருக்கிறார்.

24. கருணாநிதிக்கு ‘கலைஞர்’ என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதிய, ‘தூக்குமேடை’ என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார்.

25.இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.

26.சென்னை சேப்பாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக மூன்று முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார் கருணாநிதி. சைதாப்பேட்டை, அண்ணாநகர், திருவாரூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

27.1957லிருந்து தற்போதுவரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவரும் கருணாநிதி மிகக் குறுகிய காலத்திற்கு சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.

28. 33 வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரானார் கருணாநிதி.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்

29. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

30. கருணாநிதி சட்டமன்றக் கன்னிப் பேச்சே மிகவும் கவனிக்கப்பட்டது. அதில் நங்கவரம் பண்ணை விவசாயிகளுக்காகப் பேசினார் கருணாநிதி. பிறகு இதற்காக 20 நாட்கள் போராட்டமும் நடத்தி, பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.

31. தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கொறடா, எதிர்க் கட்சி துணைத் தலைவர், பொதுப் பணித் துறை அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை கருணாநிதி வகித்திருக்கிறார்.

32. முதல்முதலாக (1957) குளித்தலை தேர்தலில் தொகுதியில் போட்டியிட்ட  கருணாநிதி  தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

33. இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றது தஞ்சாவூர் தொகுதியில். 1962 சட்டமன்ற தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை 1,928 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார் கருணாநிதி.

34. இந்த 1962 சட்டமன்ற தேர்தல் குறித்து சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கருணாநிதி முதல் முதலாக வாக்கு சேகரிக்க சென்றது அவரை எதிர்த்து நின்ற பரிசுத்த நாடார் வீட்டிற்குதான் என்ற தகவலை தருகிறார் தஞ்சாவூரை சேர்ந்த முதியவர் ஒருவர்.

35. 1967 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுதான் திமுக முதல்முதலாக ஆட்சியை பிடித்தது.  சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயக மூர்த்தியைவிட 20, 484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்

36. 1971 ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அவர் சைதாப்பேட்டை தொகுதியிலிருந்துதான் போட்டியிட்டார்.  தம்மை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை விட  சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார். கருணாநிதி பெற்ற வாக்குகள் 63,334.

37. 1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்த போட்டி, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக – அதிமுக என்று மாறியது. ஆம், எம்.ஜி ஆர் அதிமுக என்ற கட்சியை தோற்றுவித்து, தனது நீண்டகால நண்பரான கருணாநிதிக்கு எதிராக அரசியல் களத்தில் நின்றார். எம்.ஜி.ஆர் ஆதரவு அலை கடுமையாக வீசியது. இந்த அலையிலும் துடுப்பு போட்டு வென்றார் கருணாநிதி. அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தியைவிட 16, 438 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். ஆனால், திமுக ஆட்சியை இழந்தது.

38. கருணாநிதி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தேர்தல் 1980ஆம் ஆண்டு தேர்தல். அண்ணா நகர் தொகுதியில் எச்.வி. ஹண்டேவை எதிர்த்துப் போட்டியிட்ட கருணாநிதி வெறும் 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

39. எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின் நடந்த 1989 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. அதிமுக இரண்டாக உடைந்து ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று நின்றது. இந்த தேர்தலில் கருணாநிதி பெற்ற வாக்குகள் 41,632. அவரை எதிர்த்து நின்ற முஸ்லீம் லீக்கின் வஹாப் பெற்ற வாக்குகள் 9641. அதாவது 31,991 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் கருணாநிதி.

40. ஜெயலலிதா முதல்முதலாக முதல்வரானது 1991 சட்டமன்றத் தேர்தலில்தான். ராஜீவ் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையினால் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி கண்டது. துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியும் மட்டும்தான் வெற்றி பெற்றனர். கருணாநிதி பெற்ற வாக்குகள் 30932. அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்பு பெற்ற வாக்குகள் 30042.

41. ‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது’ என்ற ரஜினி சொன்னது 1996 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில்தான். அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக முரண்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜி. கே. மூப்பனார் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.  தி.மு.க மற்றும் த.மா.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை 35,784 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். மீண்டும் முதல்வரானார்.

42. தி.மு.கவும் பா.ஜ.கவும் 2001 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தன. இந்த தேர்தலிலும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 4834 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்

43. தி.மு.க 2006 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தது. திமுக அணியில் காங்கிரஸ், பா.ம.க மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 34,188 வாக்குகள் பெற்று வென்றார்.

44. 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றாலும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 50, 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

45. 2016ஆம் தேர்தலில்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். திருவாரூர் தொகுதியில் 68366 வாக்கு வித்தியாசம். மாநிலத்திலேயே இது அதிக அளவு.

46. சட்டசபை விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாக செயல்பட கூடியவர் கருணாநிதி. ஒரு முறை, “தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே” என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, “கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?” என்றார் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?” என்றவர் கருணாநிதி.

47. கருணாநிதி முதன்முறையா சட்டமன்றத்தில் பேசிவிட்டு அமர்ந்ததும், அப்போது சட்டப்பேரவை தலைவராக இருந்த யு. கிருஷ்ணாராவ் ஒரு காகிதத்தில், ‘Very Good Speech’ என்று எழுதி கொடுத்தார்.

48. 1974க்கு முன்பாக முதலமைச்சர்கள் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் கொடியேற்ற முடியாது. ஆளுனர்தான் அதைச் செய்வார். 1974ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இது குறித்துப் பேசிய கருணாநிதி, முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் வழக்கத்தை உருவாக்கினார். 1974 ஆகஸ்ட் 15ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிய கருணாநிதி, சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய முதல் முதலமைச்சர்.

49. மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களி்ல் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார்.

50. 1953ல் திருப்பத்தூரில் நடந்த கார் விபத்தில்தான் கருணாநிதியின் இடது கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்த விபத்துகளிலும் அதே கண்ணில் அடிபட்டது.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்

51. அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான போதுதான் “உடன்பிறப்பே” என முரசொலியில் கடிதம் எழுதத் துவங்கினார் கருணாநிதி. 1971 முதல் “உயிரினும் மேலான உடன்பிறப்பே” என்று பேசவும் துவங்கினார்.

52. கருணாநிதி முரசொலியில் எழுதிவந்த “உடன்பிறப்பே” என்ற கடிதத் தொடர், உலகின் நீண்ட தொடர்களில் ஒன்று. முரசொலி துவங்கியதிலிருந்து, 2016ல் உடல்நலம் குன்றும்வரை இதனை எழுதிவந்தார் கருணாநிதி.

53. உடன்பிறப்பே என விளித்து கருணாநிதி எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 7,000க்கும் மேல்.

54. `சங்­கத்­தமிழ்’, `தொல்­காப்­பிய உரை’, `இனி­யவை இரு­பது’, `கலை­ஞரின் கவிதை மழை’,உட்­பட 150-க்கும் மேலான நூல்­களை கரு­ணா­நிதி எழு­தி­யி­ருக்­கிறார்.

55. உடன்­பி­றப்­பு­க­ளுக்கு இவர் எழு­திய கடி­தங்கள் தொகுக்­கப்­பட்டு 12 தொகு­தி­க­ளாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

56. முதல்வராக இருக்கும்போதும், இல்லாதபோதும் அதிகாலையிலேயே பத்திரிகைகளைப் படித்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் பேசுவது கருணாநிதியின் வழக்கம்.

57. ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை முரசொலி மற்றும் குங்குமம் இதழில்  எழுதினார் கருணாநிதி.

58. ஒரு சினிமா வசனகர்த்தாவாக கருணாநிதியை உச்சத்திற்கு கொண்டு சென்றது ‘பராசக்தி` திரைப்படம்தான்.  இத்திரைப்படம் வசனத்திற்காகவே திரும்ப திரும்ப பார்க்கப்பட்டது.

59. கல்லக்குடி போராட்டம்தான் அவரை அரசியல் தளத்தில் முக்கிய தலைவராக பரிணமிக்க செய்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லக்குடியில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்

60. இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு”  என்று அக்டோபர் 13, 1957 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேசினார் கருணாநிதி.

61. சென்னையின் மிகப் பிரபலமான ஜெமினி மேம்பாலம் எனப்படும் அண்ணா மேம்பாலம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 21 மாதங்களில் கட்டப்பட்டு, 1973 ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நாட்டிலேயே இம்மாதிரி கட்டப்பட்ட மூன்றாவது பாலம் அது.

62. தன் மூளையே தனக்கு டைரி என்பார் கருணாநிதி. அந்தளவுக்கு ஞாபக சக்தி கொண்டவர் அவர்.

63. சி.என். அண்ணாதுரையின் முதலாவது நினைவு நாளின்போது, மத்திய அரசு அவரது புகைப்படத்துடன் தபால் தலை வெளியிட விரும்பியபோது, அவரது கையெழுத்தையும் அந்த புகைப்படத்தின் மீது இடம்பெறச் செய்தார் அப்போது முதல்வராக இருந்தார் கருணாநிதி. “அப்போதுதான் தமிழ் எழுத்துகள் அந்த தபால்தலையில் இருக்கும்” என்றார்.

64. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய “நீராடும் கடலுடுத்த” பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970ல் கருணாநிதி ஏற்படுத்தினார். முதன் முதலாக திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்தப் பாடல் பாடப்பட்டது.

65. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தில், கருணாநிதி குறித்த அனைத்து தகவல்களும் தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

66. 1970ல் லண்டனில்கூட ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருக்கிறார் கருணாநிதி. பாரீசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டிற்குச் செல்லும் வழியில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

67. தமிழக முதலமைச்சர்களில் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டவர் கருணாநிதி. அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.

68. எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தது கருணாநிதிதான்.

கருணாநிதி

69. சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தது கருணாநிதிதான்.ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியதும் கருணாநிதிதான்.

70. நாட்டிலேயே முதல் முறையாக 1997லேயே தகவல்தொழில் நுட்பத் துறைக்கென ஒரு கொள்கையை அறிவித்தது கருணாநிதி தலைமையிலான அரசுதான். அந்தத் தருணத்தில் தரமணியில் கட்டப்பட்ட டைடல் பார்க், தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலையே நிகழ்த்தியது.

71. 1959ஆம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் 100ல் 45 இடங்களைப் பிடித்தது தி.மு.க. இதற்காக மோதிரம் ஒன்றை கருணாநிதிக்கு பரிசளித்தார் சி.என். அண்ணாத்துரை.

72. 1967ல் முதன் முதலில் சி.என். அண்ணாதுரை முதல்வரானபோது, அண்ணா, நெடுஞ்சழியன் ஆகியோருக்குப் பிறகு அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

73. நெருக்கடி நிலை காலகட்டத்தில் பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை அமலில் இருந்ததால், கைதுசெய்யப்பட்ட தி.மு.கவினரின் பட்டியலை வெளியிட யுக்தி ஒன்றைக் கடைப்பிடித்தார் கருணாநிதி. 1976 பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் மாவட்டவாரியாக கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.

74. உடல்நலம் நன்றாக இருந்தவரை, காலை 4.30 மணிக்கு எழுந்து, எல்லாப் பத்திரிகைகளையும் படித்துவிடும் பழக்கம் கொண்டவர் கருணாநிதி. சில சமயங்களில் சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகங்களுக்கும் அதிகாலையிலேயே அழைத்துப் பேசுவார்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்

75. கருணாநிதியை மிகவும் பாதித்த மரணங்களில் முரசொலி மாறனின் மரணம் முக்கியமானது. “அவனுக்கு முன்னாடி நான் போயிருக்கனும்” என்று கருணாநிதி அடிக்கடி கூறுவதாக அவரது உதவியாளர் சண்முகநாதன் சொல்கிறார்.

76. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு யாரும் தொலைபேசியில் அழைத்து தகவல் பெறமுடியும். தொலைபேசி ஒலித்தவுடன், “வணக்கம், தலைவர் இல்லம்” என்ற குரல் ஒலிக்கும்.

77. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டது, 1955ல். சரபேஸ்வரய்யர் என்பவர் இந்த வீட்டை விற்றார்.

78. கருணாநிதியின் வீட்டில் உள்ள தனி நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உண்டு.

79. தன்னுடைய கோபாலபுரம் இல்லம் தயாளு அம்மாளின் காலத்திற்குப் பிறகு மருத்துவமனையாக இயங்க வேண்டுமென்று கூறி, அன்னை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

80. தன் வீட்டை ஒட்டியுள்ள வேணுகோபலா சுவாமி கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை என்கிறார் கருணாநிதி.

81. தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்ற பெயரை அளித்தவர் கருணாநிதிதான்.

82. உடல் நலம் நன்றாக இருந்த காலகட்டத்தில் பெரும்பாலான நாட்களில் கட்சி அலுவலகத்திற்கு காலை, மாலை என இரு வேளையும் சென்றுவிடுவார் கருணாநிதி.

83. 2018ல்தான் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. ஆனால், 1969லேயே இதற்கான முயற்சிகளைத் துவங்கி, நாட்டிலேயே முதலிடம் வகித்தது தமிழ்நாடு.

84. பல காலகட்டங்களில் தேசிய அரசியலில் கருணாநிதி செல்வாக்கு செலுத்தியிருந்தாலும் ஒரு போதும் நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டதில்லை.

85. நேரம் தவறாமை கருணாநிதியின் முக்கியப் பண்புகளில் ஒன்று. எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார் கருணாநிதி.

86. கருணாநிதி செயல்படுத்திய திட்டங்களில் அவருக்கு மிகவும் பிடித்த திட்டங்களில் ஒன்று பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். 1998ல் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் துவங்கப்பட்டது. 237 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டன. இதில் தலித்துகளுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன.

87. ராஜாஜியில் துவங்கி, டி பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் என 11 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்

88. கருணாநிதி தலைவராக இருந்த காலத்தில் இரு முறை கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது. முதல் முறை எம்.ஜி.ஆரால். இரண்டாவது முறை வைகோவால். இரு முறையும் கட்சியை மீட்டெடுத்தார் கருணாநிதி.

89. உணவுப் பாதுகாப்பிற்காக, இந்திய உணவுக் கழகத்தைப்போல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கி வளர்த்தெடுத்தார் கருணாநிதி.

90. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டதுதான். ஆனால், வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் அவரது திட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

91. ஒரு முறை சட்டமன்றத்தில், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி பேச எழுந்த போது, அவரை சுருங்க பேச சொல்வதற்காக, ‘ அயிரை மீன் அளவுக்குப் பேசவும்’ என்று துண்டு சீட்டு  எழுதி கொடுத்தார் கருணாநிதி.

92. 2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே கருணாநிதியை கைது செய்யப்பட்டார். ஜூன் 30 – ஆம் தேதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட அந்த கைது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. மூத்த தலைவரை கண்ணியமாக நடத்தவில்லை என்று கண்டனங்களும் எழுந்தன.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்

93. எம்.ஜி.ஆர் ஆட்சியில், தமிழக சட்டசபை சபாநாயகராக க.ராஜாராம் இருந்தார். அப்போது ஒரு விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கமிடுகின்றனர். கூச்சலை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் சபாநாயகர். ஆனால் கூச்சல் குறையவில்லை. “எப்படியோ போங்க. இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்” என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார் சபாநாயகர். அதன்பின் எழுந்த கருணாநிதி “இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா, இதற்கு முன்பு ஆண்டவன் (ஆட்சியில் இருந்தவன்) நான்தானே” என்கிறார். இது போன்ற பல நகைச்சுவையான தருணங்கள் அவரது சட்டமன்ற வரலாற்று பக்கத்தில் உள்ளது.

94. அரசியல் விமர்சனங்களை எள்ளலுடன் எதிர்கொள்ளக் கூடியவர் கருணாநிதி. டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தது குறித்து கருத்து தெரிவித்து இருந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “நான் கேட்டது அறுவை சிகிச்சை… கருணாநிதி செய்ததோ முதலுதவி” என்று கூறி இருந்தார். இது தொடர்பாக பதில் அளித்த கருணாநிதி, “அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம். சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த விஷயம் மருத்துவம் படித்த மருத்துவருக்கு புரியாமல் இருப்பது ஆச்சர்யம்” என்றார்.

95. ”மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.” – இது அவர் அடிக்கடி மேற்கோள்காட்டிய வரி.

Categories
பொக்கிஷம்

தமிழ்தேசியம் : சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?

(தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந்த நிலையில், தமிழ் தேசியம் தொடர்பாக பல்வேறு ஆர்வலர்களின் கருத்துக்கள், இங்கே தொடராக வெளியிடப்படுகின்றன. இது, அந்தத் தொடரின் இரண்டாவது பாகம். இக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்)

மொழி

1. “தேசம் ஒரு கற்பிதம். கற்பிதம் செய்யப்பட்ட சமூகம் (imagined community) என்றுதான் பெனெடிக்ட் ஆன்டர்சன் சொல்கிறார். அவர் ஒன்றும் தேசியத்தைக் குறைவுபடுத்தியோ, அது ஒரு பொய் அல்லது மாயை என்றோ சொல்லவில்லை. தேசத்தின் பெயரால் அரசியல் செயல்பாடுகள் அமைகின்றன. மக்கள் திரள்கிறார்கள். உயிரைத் தத்தம் செய்கிறார்கள், மக்கள் கொல்லப்படுகிறார்கள், இடம் பெயர்கிறார்கள். எனவே தேசம் ஒரு மாயை என்றெல்லாம் நான் சொல்லவில்லை.

அதே நேரத்தில் குடும்பம், தனிச் சொத்து, அரசு என்பவை போலவே தேசமும் இயற்கையானதல்ல. அது வரலாற்று ரீதியானது. தேசிய அரசியலுக்கு அப்பாற்பட்ட புறநிலை எதார்த்தமாக தேசத்தைப் பார்க்க வேண்டியதில்லை. நூறாண்டுகளுக்கு முன்னால் எர்னஸ்ட் ரெனான் குறிப்பிட்டதுபோல நவீன தேசங்களுக்கிடையே பொதுக் காரணி ஏதும் இல்லை. ஒவ்வொரு தேசமும் வெவ்வேறு கூறுகள் சிலவற்றின் தொகு புள்ளியாக வரலாற்றுப் போக்கில் உருவாக்கப்படுகிறது.

பிரிவினையின் போது மத அடிப்படையில் பாகிஸ்தான் உருவானது. ஆனால் மதம் ஒன்றானாலும் அது ஒரே தேசமாகப் பரிணமிக்கவில்லை. இன்று மொழி அடிப்படையில் பாகிஸ்தான் எனவும் வங்கதேசம் எனவும் ஒன்றுக்கொன்று பகையான இரண்டு நாடுகளாகிவிட்டன. ஒரே மொழி அடிப்படையில் பஞ்சாப் ஒரு தேசமாகப் பரிணமிக்க முடியவில்லை. மத அடிப்படையில் சீக்கியர்கள் காலிஸ்தான் கேட்கின்றனர்.

முந்தைய கட்டுரை:

#தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்?’

மொழி அல்லது இன அடிப்படையில் விசால ஆந்திரம் ஒரே தேசமாக உருப்பெற இயலவில்லை. இன்று ஒரே மொழி, ஒரே மாதிரியான மத அடையாளங்கள் உள்ள ஆந்திரமும், தெலங்கானாவும் தனித்தனியாகப் போகத் துடிக்கின்றன. இங்கே ‘வளர்ச்சி’ (development) என்பது பிரிவினையின் முக்கிய காரணியாக அமைகிறது. இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் இவை சில எடுத்துக்காட்டுகள். உலக அளவில் இன்னும் ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்.

“எனில் தேசத்தின் ஆதிமூலம் எது? நதிமூலம் ரிஷிமூலம் போலவே தேசத்தின் மூலத்தையும் சொல்ல முடியாது. தேசத்தின் மூலத்தைத் தேடிப் போனீர்களானால் கடைசியாக உங்களுக்கு ஒரு கதைதான் பரிசாகக் கிடைக்கும். இமயத்தில் கொடி பொறித்த கதை. கனக விசயர் தலையில் கல்லேற்றிய கதை. கலிங்கத்தை வீழ்த்திப் பரணி பாடிய கதை. அனுராதபுரத்தையும் பொலனருவையையும் தீக்கிரையாக்கிய கதை…”

– இது நான் இருபதாண்டுகளுக்கு முன் எழுதியது. அப்போதுதான் இதற்கு எத்தனை எதிர்ப்புகள்; எத்தனை வசவுகள்.

ஆனால் அப்படி ஆத்திரப்பட்டவர்கள் எல்லோரும் இன்று சாதியின் அடிப்படையில் தமிழர்களை வரையறுக்கக் கிளம்பியுள்ளனர். சாதியைச் சொல், நீ தமிழனா இல்லையா எனச் சொல்கிறேன் என்கிறார் சீமான். மணியரசன் முதல் இன்னும் பலரும் இன்று அப்படித் தமிழ்ச் சாதிகள் பற்றிப் பேசுகின்றனர்.

சீமான்படத்தின் காப்புரிமைNAAM THAMIZHAR

சில மாதங்களுக்கு முன் மலேசியாவில் நடைபெற்ற இந்தக் கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் துண்டுச் சீட்டு கொடுத்து அதில் வந்திருந்தவர்களின் முகவரிகளோடு சாதிகளையும் எழுதச் சொல்லி வாங்கியுள்ளார்கள்.

2. ஒரு ஒப்பீட்டுக்காக இந்திய தேசிய உருவாக்கத்தின் கதையை மிகச் சுருக்கமாகப் பார்ப்போம். இந்தியா, பாரதம் என்கிற கருத்தாக்கங்கள் எல்லாம் வரலாற்றில் மிகச் சமீபமாக உருவானவை. “தேசப் போராட்டங்கள்தான் தேசத்தை உருவாக்குகின்றனவே ஒழிய தேசம் தேசப் போராட்டங்களை உருவாக்குவதில்லை” – என ரெனான் சொன்னதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு ‘இந்தியா’ என்கிற கற்பிதம்தான்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் இந்தியா என ஒன்று கிடையாது என்பதை எல்லோரும் சொல்லிவிட்டார்கள். உண்மை. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பின் முதல் சுதந்திரப்போர் எனச் சொல்லப்படும் சிப்பாய்க் கலகத்தின்போது கூட ‘இந்தியா’ என்கிற கருத்தாக்கம் உருவாகவில்லை.

‘இந்திய தேசியக் காங்கிரஸ்’ என இங்கு ஒன்று உருவாக்கப்பட்டபோது கூட அதை உருவாக்கியது ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் எனும் ஆங்கிலேயர்தான். பின் எப்போது இந்தியா என்கிற கருத்தாக்கம் உருவாகியது?

1905 ல் கர்சான் பிரபு வங்கத்தை இந்து வங்கம் (மேற்கு) எனவும் முஸ்லிம் வங்கம் (கிழக்கு) எனப் பிரித்தபோது இங்கு ஒரு எழுச்சியும் போராட்டமும் கிளர்ந்ததே அப்போதுதான் இந்தியா என்கிற கருத்து உருவானது. மகாகவி பாரதி அதை இப்படிச் சொல்கிறார்: வங்கப் பிரிவினையை ஒட்டி “தேசபக்தி என்கிற நவீன மார்க்கம்” தோன்றி, “நல்லோர்கள் சிந்தையை எல்லாம் புளகிக்கச் செய்தது” என 1908ல் அவர் எழுதினார்.

இந்த எழுச்சி இந்தியாவுக்குள் மத அடிப்படையில் முஸ்லிம்களுக்குத் தனி மாநிலம் என்கிற கருத்துக்கு எதிராக உருவானது. அந்த அடிப்படையில் ஆரிய சம்பத்து, பாரதம் முதலான அடையாளங்களுடன் இந்தியா என்பதைக் கற்பிப்பது தொடங்கியது. ஒரு பத்தாண்டுகளுக்குப் பின் காந்தி என்றொரு மனிதன் இந்திய அரசியலில் தோன்றினான்.

மார்க்ஸ்படத்தின் காப்புரிமைFACEBOOK
Image captionஅ. மார்க்ஸ்

அவன் இந்த மத அடிப்படையிலான தேசக் கற்பிதத்தை இயன்ற வரையில் எல்லோருக்குமான தேசியம் (Inclusive Nationalism) என்பதாகக் கட்டமைக்க உயிரைக் கொடுத்துப் போராடினான். ஆமாம் உயிரைக் கொடுத்துத்தான் போராடினான். அவனும் போனான். அடுத்த சில மாதங்களில் பாபர் மசூதிக்குள் இராமர் சிலைகள் வைக்கப்பட்டன. வட மாநிலங்களில் பசுவதைத் தடைச்சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்தியாவிற்குள் முஸ்லிம்களை விலக்கிய தேசியம் (Exclusive Nationalism) ஒன்று வேகமாக வளர்ந்தது.

3. தமிழகம் தொன்மை வாய்ந்த ஒரு வரலாறு மற்றும் பண்பாட்டுப் பின்னணி கொண்ட ஒரு நாடு. இனக்குழுச் சமூகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு விவசாயமயமாக்கம், முதற்கட்ட அரசுருவாக்கம் எல்லாம் உருவாக்கப்பட்டபோதுதான் மொழி உணர்வு, நில எல்லை குறித்த உணர்வு (territorial consciousness) எல்லாம் உருவாகின்றன. மொழியையும் நில எல்லையையும் இணைத்துப் பேசும், “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல் உலகத்து” என்கிற தொல்காப்பியப் பாயிரம் இந்தச் சூழலின் வெளிப்பாடுதான்.

இந்த மொழி – எல்லை உணர்வு தேசிய இன உணர்வின் ஒரு தொன்ம மாதிரி. “துடியன், பாணன், கடம்பன், பறையன் என இந் நான்கல்லது குடியும் இலவே” (புறநானூறு 335: 7-8) என்கிறது ஒரு புறநானூற்றுப் பாடல். இவ்வகையில், பல்வேறு இனக் குழுக்களின் தனித்துவங்கள், தலமொழி, பண்பாட்டு வேறுபாடுகள் எல்லாவற்றையும் உள்ளிணைத்த (inclusive) ‘தமிழ் கூறும் நல்லுலகம்’ எனும் ஒரு கருத்தாக்கம் இங்கு மேலெழுகிறது.

எனினும் அப்போது கூட ஒற்றை அரசு என்கிற ஒருங்கிணைப்பு முன் வைக்கப்படவில்லை என்பதற்கு “தமிழ்கெழு மூவர்” (அகம் 31:14) என்கிற கூற்று சான்றாகிறது.

தமிழ்நாட்டின் `தனித்தன்மையைக் காட்டும் திராவிட ஆட்சி சாதனைகள்`

அடுத்த 2500 ஆண்டுகளில் இங்கு என்னென்னவோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. புதிய படை எடுப்புகள், புதிய சிந்தனைகள், மதங்கள், அரசுகள், குடியேற்றங்கள் என என்னென்னவோ நடந்துவிட்டன. தமிழக மன்னர்களும் படை எடுத்துச் சென்று நாடுகளைக் கைப்பற்றினார்கள், தமிழகத்தின் மீதும் படை எடுப்புகள் நடந்தன.

தமிழர்கள் இன்று இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ் எனப் பல நாடுகளில் பாரம்பரியமாக வாழ்கின்றனர். தமிழகத்திற்குள்ளும் பலர் வந்து குடியேறித் தம் வேர்களை மறந்து, மொழியையும், மண்ணையும், அவற்றுக்குரிய அடையாளங்களையும் கைவிட்டு வாழ்கின்றனர்.

இன்று தமிழகத்தில் சுமார் 30 சதவீதம் இப்படியான மொழிச் சிறுபான்மையர் வாழ்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, வாக்ரிபோலி இப்படிப் பல மொழிகள் பேசுபவர்கள் இவர்கள். இவர்களுள் நில உடமையாளர்களும் உண்டு. நரிக்குறவர் போன்ற நாடோடிகளும் உண்டு. ஒட்டர்கள் போன்ற மண்வெட்டிக் கூலி தின்னும் மக்களும் உண்டு. மலம் அள்ள நிர்ப்பந்திக்கப்பட்ட அருந்ததியர்களும் உண்டு. முஸ்லிம்கள் உண்டு. கிறிஸ்தவர்கள் உண்டு.

இந்தப் பின்னணியில்தான் இங்கு பிரிட்டிஷ் ஆட்சி, சுதந்திர இந்தியா, மொழிவாரி மாநிலம் அதை ஒட்டிய போராட்டங்கள் எல்லாம் நடந்தேறின.

இன்று தமிழ்த் தேசியம் இங்கு வரையறுக்கப் படுவதில் இந்தச் சமகால வரலாறு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக 19, 20ம் நூற்றாண்டு அரசியல் போக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்தப் பின்னணியில் உருவான தமிழ் தேசியத்தை நாம் இரண்டாகப் பிரித்து அணுகலாம். அவை:

அ. திராவிட இயக்கம் முன்னெடுத்த தமிழ்த் தேசியம், ஆ. ம.பொ.சி வழிவந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்வைக்கும் தமிழ்த் தேசியம்.

அ. திராவிட இயக்கம் முன்னெடுத்த தமிழ்த் தேசியம்

தமிழ்நாட்டில் 30 சதவீதம் மொழிச் சிறுபான்மையர் உள்ளனர்; ஒ 12 சதவீதம் மதச் சிறுபான்மையர் உள்ளனர்; 18 சத வீதம் பட்டியல் சாதியினர் உள்ளனர். இவர்கள் யாரையும் ஒதுக்கிவிடாமல் உள்ளடக்கியது திராவிட தேசியம். இரண்டரை சதவீத அளவு உள்ள பார்ப்பனர்களைத்தான் அது வெளியில் நிறுத்தியது.

திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக் கட்சிக்கும், பெரியார் முன்வைத்த திராவிடக் கருத்தாக்கத்துக்கும் சில முக்கிய வேறுபாடுகள் உண்டு. நீதிக் கட்சியினர் பார்ப்பனர்களின் சமூக மேலாண்மையை (social hegemony) மட்டுமே எதிர்த்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக உருவான கல்வி வளர்ச்சி, அரசியல் நிர்வாகம், பதவிகள் ஆகிய எல்லாவற்றையும் அளவில் மிக மிகக் குறைவான பார்ப்பனர்களே கைப்பற்றிக் கொள்கிறார்களே என்கிற அடிப்படையிலேயே நீதிக்கட்சியின் அரசியல் இருந்தது.

திராவிட இயக்கம்படத்தின் காப்புரிமைGNANAM

ஆனால் பெரியார் இந்தச் சமூக மேலாண்மையோடு பார்ப்பனர்களின் சடங்கு மேலாண்மையையும் (ritual hegemony) கேள்விக்குட்படுத்தினார். பிறப்பு முதல் இறப்பு வறையிலான அனைத்துச் சடங்குகளிலும் அவர்களுக்கு இருந்த பூசாரி நிலையையும் ஒழிக்க வேண்டும் என்றார்.

இந்து மதம், கடவுள் மறுப்பு ஆகியவை குறித்த கடும் விமர்சனங்களையும் இந்தப் பின்னணியிலிருந்தே முன் வைத்தார். சுயமரியதைத் திருமணம் போன்ற மாற்றுக்களையும் அவர் இதனூடாகவே நடைமுறைக்குக் கொண்டுவந்தார்.

அப்போது கூட அவர்கள் மீது வன்முறையையோ, அவர்களை முற்றாக ஒதுக்க வேண்டும் என்றோ, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றோ ,பெரியாரோ, வேறு எந்த திராவிட இயக்கத்தினரோ சொன்னதே இல்லை.

’50 ஆண்டுகளில் மாயமான திராவிட லட்சியங்கள்’

தமிழ்நாட்டின் `தனித்தன்மையைக் காட்டும் திராவிட ஆட்சி சாதனைகள்`

பார்ப்பனர்களுக்கும் கூட அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 2 சத ஒதுக்கீடு கொடுத்துவிடலாம், வரலாறு பூராவும் இருந்ததுபோல அனைத்துப் பதவிகளையும் அவர்களே ஆக்ரமிப்பது என்பதற்குத்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றுதான் பெரியார் சொன்னார். சரியாகச் சொல்வதானால் அவர் பார்ப்பன ஆதிக்கத்தைத்தான் எதிர்த்தார். பார்ப்பனரை எதிர்க்கவில்லை. பின்னால் வந்த திமுகவோ இந்த பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பையும் கைவிட்டது.

மொத்தத்தில் திராவிட தேசியம் என்பது தமிழர்கள் எல்லோரையும் உள்ளடக்குவதாக இருந்தது. எல்லாவகைச் சிறுபான்மை மக்களுடனும் அது மிகவும் நெருக்கமாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டாமையிலிருந்து விடுபட அவர்கள் இஸ்லாத்துக்கு மாற வேண்டும் என்றார் பெரியார். திராவிட சமயமும் இஸ்லாமும் ஒன்று என்றார்.

பெரியார்படத்தின் காப்புரிமைDHILEEPAN RAMAKRISHNAN

அண்ணாவோ தனது ‘ஆரிய மாயை’ நூலில் “முஸ்லிம்கள் திராவிட இனம்” என்றதோடு ஆரியத்திற்கெதிரான “திராவிட -இஸ்லாமிய கூட்டுப்படை” என்றெல்லாம் முழங்கினார். எனினும் தமிழகத்தை விட்டு ஆரியர்களை (அதாவது பார்ப்பனர்களை) வெளியேற்றுவது தம் நோக்கம் அல்ல என்றார். “திராவிடநாட்டிலிருந்து ஆரியரை ஓட்டுவதல்ல, ஆரிய பயத்தை ஓட்டுவதுதான் எங்கள் நோக்கம்” என்றார்.

மொத்தத்தில் எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு Inclusive Nationalism. என்பதற்குப் பெரியார் வழி வந்த திராவிட இயக்கத்தினர் ஓர் எடுத்துக்காட்டாக இருந்தனர்.

திராவிட தேசியத்தின் இன்னும் இரண்டு அடிப்படைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். திராவிடப் பிரிவினை பேசியபோதெல்லாம் பெரியார் கேரளம், கன்னடம், ஆந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கிப் பேசினார் என்பதில்லை. இதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியாரின் நோக்கம் பார்ப்பன ஆதிக்கத்தை அரசியல், அரசுப் பணிகள், அன்றாட வாழ்விற்குரிய சடங்குகள் ஆகியவற்றில் ஒழிப்பதுதான். அதற்குத் தடையாக இருப்பது இந்தியக் கூட்டாட்சி. இந்தக் கூட்டாட்சிக்குள் இருக்கும் வரை பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பது சாத்தியமில்லை.

எனவேதான் கூட்டாட்சியிலிருந்து பிரிய வேண்டும் எனக் கோருவதாக வெளிப்படையாகச் சொன்னார். சென்னை மாகாணம் தனித்தனி மாநிலங்களாகப் பிரிந்த பின்னர் அவர் தமிழ்நாடு பிரிவினையத்தான் பேசினார். அதை வெளிப்படையாகவும் சொன்னர்.1956 ஆகஸ்ட் 29 விடுதலை இதழில் இதை அவர் எழுதவும் செய்தார். 1938 தொடங்கியே பெரியார் ‘திராவிடமே தமிழ்’, ‘தமிழே திராவிடம்’ என எழுதியும் பேசியும் வந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது (விடுதலை, செப் 11, 1938).

இருந்தும் அரசியல் சொல்லாடல்களில் அவர் ஏன் தொடர்ந்து திராவிடநாடு எனச் சொல்லி வந்தார். அதற்கும் அவர் ஒரு விளக்கத்தைச் சொன்னார். தமிழன் என்று சொன்னால் பார்ப்பானும் வந்து ஒட்டிக் கொள்வானே, அதனால்தான் திராவிடன் எனச் சொல்ல வேண்டியதாகிறது என்றார்.

சுருக்கமாகச் சொல்வதானால் திராவிட இயக்கங்கள் பார்ப்பன ஆதிக்கம் ஒழிக்கப்பட்ட எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு தமிழ்த் தேசியத்தை முன் வைத்தன.

ஆ. ம.பொ.சி வழிவந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்வைக்கும் தமிழ்த் தேசியம்

ம.பொ.சி எனப்பட்ட ம.பொ. சிவஞானம் இங்குள்ள மொழிச் சிறுபான்மையரை வெளியே நிறுத்தி Exclusive Nationalism ஒன்றை முன்வைத்தார். பதிலாக அவர் பார்ப்பனர்களை உள்ளடக்கினார். இந்து என்கிற அடையாளத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்.

தமிழுணர்வு என்பது நாலரை கோடி தமிழ் மக்களுடன் மட்டுமே தன்னை இணைக்கிறது எனவும் இந்து என்கிற அடையாளம் தன்னை ஐம்பது கோடி மக்களுடன் இணைக்கிறது எனவும் காஞ்சி சங்கராசாரியார் ஏற்பாடு செய்த உலக இந்து மாநாட்டில் அவர் முழங்கியது குறிப்பிடத் தக்கது (மார்ச் 3,1976). மதச் சிறுபான்மையைப் பற்றி அவர் ஒன்றும் பேசவில்லையாயினும் அவரது பார்ப்பனீய ஆதரவு, இந்து மத அடையாளத்திற்கான அழுத்தம் என்பன இயல்பாகவே மதச் சிறுபான்மையினரை ஒதுக்கின.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்த இரண்டாவது போக்கு இன்னொரு பரிமாணம் எடுத்தது. பெங்களூரு குணா என்பவர் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்றொரு புத்தகம் எழுதினார். அப்பட்டமான வரலாற்றுப் புரட்டல்களுடன் கூடிய அந்த நூல் பார்ப்பனீயத்தை உயர்த்திப் பிடித்த கொடுமையான மன்னர் ஆட்சிகளை எல்லாம் பொற்காலம் என்றது.

இங்குள்ள மொழிச் சிறுபான்மையினர்தான் தமிழ் மக்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிற ஓர் அப்பட்டமான பொய்யை முன்வைத்தது. அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்றெல்லாம் வெறுப்பைக் கக்கியது.

வெறும் இரண்டரை சதமாக இருந்து கொண்டு பல மடங்கு அதிகமான அரசுப் பணிகளை எல்லாம் ஆக்ரமித்துக் கொண்டிருந்த பார்ப்பனர்களையும் பிற உயர்சாதியினரின் ஆதிக்கத்தையும் அது விமர்சிக்கவே இல்லை. ஏனென்றால் அவர்கள்தான் உண்மையான தமிழர்களாம்.

இவர்கள் இலக்காக்கித் தாக்கியதெல்லாம் இந்த 30 சதம் அளவு உள்ள மொழிச் சிறுபான்மையினரைத்தான்.

சரி, யார் அந்த மொழிச் சிறுபான்மையினர்? தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழிகளைப் பேசுகிற சாதியினர்; உருது மொழி பேசும் முஸ்லிம்கள்; மார்வாரிகள் முதலானோரைத்தான் அவர்கள் தமிழர்களின் வீழ்ச்சிக்குக் காரணமான மொழிச் சிறுபான்மையினர் என்கின்றனர்..

இதில் ஒரு சிறு பகுதியாக உள்ள மார்வாரிகள் தவிர மற்றவர்கள் அவ்வளவு பேரும் தமிழகத்தையே பல காலமாகத் தாயகமாகக் கொண்டு இங்கு வாழ்ந்து வருகிற சாதாரண மக்கள். இவர்களில் பெரும்பாலோர் இப்போது தமிழையே தாய்மொழியாகக் கொண்டு, தங்கள் பிள்ளைகளைத் தமிழிலேயே படிக்க வைத்து வாழ்ந்து வருபவர்கள். அவர்களைத் திருப்பி அனுப்புவது என்றால் எங்கே போவார்கள்? நமது பண்பாட்டை ஏற்றுக் கொண்டு, நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மக்களில் பெரும்பாலோர் கூலிகளாகவும், சாதாரண பணிகளிலும் இருப்போர்.

பிற தமிழ்ச் சாதிகளாக இவர்களால் அடையாளம் காட்டப்படுகிறவர்களைப் போலவே பொருளாதார நிலை உடையவர்கள். இந்த மொழிச் சிறுபான்மையினரை வெளியே துரத்தாவிட்டாலும் அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்க வேண்டும், இட ஒதுக்கீடு போன்ற பலன்கள் இவர்களுக்குச் சென்று சேரக் கூடாது என்கிறார்கள்.

பெரியார்

இங்கே நம்மோடு வாழ்ந்து நமது மலத்தை அள்ளி, இங்குள்ள சாக்கடைகளைச் சுத்தம் செய்து வாழ நேர்ந்த நம் அருந்ததியர் இனச் சகோதரர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாதென இவர்களின் ஆசான் குணா வெளிப்படையாகச் சொன்னார்.

அது மட்டுமல்ல தலித் மக்களின் விடுதலைக்காக முன்னின்று, உலக அளவில் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கருக்கு இங்கு ஊரெங்கும் சிலைகள் திறக்கப்படுவதை “அம்பேத்கராம் மராட்டியருக்கு” இங்கு சிலைகளை வைத்து சாதிச் சண்டைகளை ஏன் தூண்டவேண்டும் எனக் கேட்டவர்கள் இவர்கள்.

மார்வாரிகளிலும் கூட எல்லோரும் பெரிய வணிகர்களாக இருப்பதில்லை. அவர்களிலும் எளிய மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்குத் தெரிந்து என்னுடைய நண்பர் ஒருவர் பி.எஸ்.என்.எல்.லில் வேலை செய்கிறார். அடித்தளச் சாதியைச் சேர்ந்தவர். அவர் மனைவி ஒரு மார்வாரி இனத்தைச் சேர்ந்தவர்.

கூலிகளாகவும் வணிகர்களாகவும் சென்று இலங்கை, மலேசியா, மொரிஷியஸ், சிங்கப்பூர் முதலான நாடுகளில் வசிக்கும் தமிழர்களை எல்லாம் அந்தந்த நாடுகள் திருப்பி அனுப்புவது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோமா? கி.ராஜநாராயணன் இப்படி ஒரு வந்தேறிதான். ஆனால் அவர் தமிழின் ஆக முக்கியமான எழுத்தாளர். நவீன தமிழுக்கு வளம் சேர்த்தவர். கரிசல் மண்ணில் புழங்கப்படும் தனித்துவமான தமிழ்ச் சொற்களுக்கு ‘அகராதி’ உருவாக்கிய தமிழறிஞர் அவர்.

அவருடைய மூதாதையர் எத்தனையோ தலைமுறைக்கு முன்னதாக இங்கு வந்தவர்கள். அவரை இன்று திருப்பி அனுப்புவது அல்லது அவரது குடும்பத்தாரை இரண்டாம் தர மக்களாக, உரிமையற்றவர்களாக நடத்துவது என்றால்… அத்தனை கொடூரமானவர்களா தமிழர்கள்?

தமிழ்நாட்டின் `தனித்தன்மையைக் காட்டும் திராவிட ஆட்சி சாதனைகள்`

இங்கு வாழும் பிற மொழியினர் எல்லோரும் தமிழகத்தைச் சுரண்டி வளம் கொழிப்பவர்கள் அல்ல. இவர்களால் ஒரிஜினல் தமிழர்கள் எனச் சொல்கிற எல்லோரும் இங்கு கூலி வேலை செய்து துன்புறுபவர்களும் அல்லர். எல்லா மக்களிலும் பணக்காரர்களும் உள்ளனர், ஏழை எளியோரும் உள்ளனர். குடந்தை, மதுரை போன்ற இடங்களில் சௌராஷ்டிரர்கள் உள்ளனர்.

மிகவும் அடித்தள நெசவாளிகள் அவர்கள். ஆம்பூர், வாணியம்பாடி முதலான பகுதிகளில் வசிக்கும் உருது முஸ்லிம்கள் எல்லோரும் தோல் தொழிற்சாலைகள் வைத்திருப்பவர்கள் அல்ல. தோல் தொழிற்சாலைகளில் பெரிய பதவிகளில் பெரும்பாலும் உயர்சாதி இந்துக்கள்தான் உள்ளனர்.

தோலைச் சுரண்டித் தூய்மைப்படுத்துவது முதலான, தூய்மைக் குறைவான வேலைகளில் எவ்வளவோ உருது பேசும் முஸ்லிம்கள் பணியில் உள்ளனர். இவர்களை எல்லாம் உருது பேசுபவர்கள் என்பதற்காகவே இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்குதல் நியாயமா?

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இப்படி மொழிவாரி தேசியம் பேசும் ம.பொ.சி, குணா, சீமான், மணியரசன் போன்றோர் தமிழ்நாட்டில் தற்போது வாழ்கிற மக்களில் இப்படியான “தமிழர்கள் அல்லாதவர்களை” அடையாளம் காண என்ன வழியைக் கையாள்கிறார்கள்?

சாதி அடிப்படையில் அவர்கள் ஒரிஜினல் தமிழர்களை இனம் காண்கிறார்களாம். எந்தச் சாதி முறை, தீண்டாமை ஆகியவற்றை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அந்தச் சாதிமுறையை இவர்கள் இந்த நோக்கில் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

உன் சாதியைச் சொல் நீ தமிழனா, இல்லையா எனச் சொல்கிறேன் என்கிறார் சீமான். நீ ஒரு அருந்ததியன், சௌராஷ்டிர நெசவாளி, உருது பேசும் முஸ்லிம், என்றால் தமிழன் இல்லை. வீட்டில் தமிழ் மட்டுமே பேசினாலும் சாதியில் நீ நாயக்கராக இருந்தால் நீயும் தமிழன் இல்லை., மண்வெட்டிக் கூலி தின்னும் ஒட்டர்களாக இருந்தால் அவர்களும் தமிழர்கள் இல்லையாம். அவர்கள் எத்தனை ஏழைகளாக இருந்தாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு, இலவசக் கல்வி முதலியன கூடாதாம்.

தமிழ்த் தேசிய அரசியல் தமிழ்ச் சாதிய அரசியலாகத் தேய்ந்த கதை

மக்களை இப்படிச் சாதி அடிப்படையில் கூறு போடும் இவர்கள் மிகப் பெரிய வரலாற்றுப் புரட்டர்களாகவும் உள்ளனர். தமிழர்களின் பெருமிதம் எனச் சொல்லி இவர்கள் கொண்டாடுவது எல்லாம் காலங் காலமாகச் சாதிமுறையையும் பார்ப்பனீயத்தையும் முன்னிறுத்திய பழங்கால மன்னர்களைத்தான். இங்கு கொடுமையான நில உடைமை முறைகள், சமஸ்கிருதக் கல்வி, தேவதாசி முறை ஆகியவற்றை எல்லாம் புகுத்திய ராஜராஜ சோழன்தான் இவர்களின் திரு உரு (icon). கொடும் ஏற்றத் தாழ்வுகளும், சாதிமுறையும், தீண்டாமையும் தலைவிரித்தாடிய சோழர் காலம் அவர்களைப் பொருத்த மட்டில் பொற்காலம்.

கூர்ந்து பார்த்தால் இவர்கள் தமிழுக்கும் உண்மையானவர்களாக இல்லை என்பது புலப்படும். எண்ணாயிரம் என்கிற இடத்தில் சோழர் காலத்தில் இருந்த கல்வி நிலையம் குறித்து எல்லோரும் பீற்றிக் கொள்வார்கள். அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத் திட்டம் எல்லாம் முழுக்க முழுக்க சமஸ்கிருதமாகவே இருந்தது.

தலித்துகளுக்கு நன்மை செய்தனவா திராவிட ஆட்சிகள்?

இவர்கள் இப்படி மொழி அடிப்படையில் தமிழர்களைக் கூறுபோடுவது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் மத அடிப்படையிலும் இவர்கள் தமிழர்களைப் பிரித்து நிறுத்துகிறார்கள்.

பார்ப்பனீய ஒதுக்கல்களுக்கும், வருண சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கும் எதிரக மலர்ந்த சீர்திருத்த மதங்களான பௌத்தம், சமணம் ஆகியவற்றை இவர்கள் வட இந்திய மதங்கள் எனப் புறந் தள்ளுகின்றனர். அதன் மூலம் வருண சாதி அமைப்பை வலியுறுத்திய சனாதனப் பார்ப்பன மதத்தையே இவர்கள் தமிழர்களின் மதமாக முன் வைக்கிறார்கள். பார்ப்பனீயமும் வடநாட்டிலிருந்து இங்கு வந்ததுதான் என்பதைப் பற்றி இவர்கள் இம்மியும் கவலைப்படுவதில்லை.

இவர்களின் இந்தக் கணக்குப்படி இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியனவும் அந்நிய மதங்கள்தான். ஆனால் தமிழின் சிகரங்களாக உள்ள ஐம்பெரும் காப்பியங்கள் எனச் சொல்லப்படுபவையும், கிட்டத்தட்ட எல்லாத் தமிழ் இலக்கண நூல்களும் இவர்களால் வட இந்திய மதங்கள் எனச் சொல்லப்படக் கூடிய பௌத்த, சமணப் புலவர்களால் உருவாக்கப்பட்டவைதான். கிறிஸ்தவம் இங்கு அச்சைக் கொண்டு வந்தது. நம் மக்களுக்குக் கல்வியைத் தந்தது. முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்புகள் குறித்து மதுரைப் பல்கலைக் கழகம் ஐந்து தொகுதிகளாக நூல்கள் வெளியிட்டுள்ளது.

இந்து மதம் தொன்மையான மதம் என்பது உண்மைதான். இஸ்லாம் ஆயிரத்தும் மேற்பட்ட ஆண்டுகளாக இங்கு நம்மோடு வாழும் மதம். கிறிஸ்தவம் ஐநூறு ஆண்டுகளாகத் தமிழிலிருந்தும் தமிழர்களிடத்திலிருந்தும் பிரிக்க இயலாமல் ஒன்று கலந்த மதம். இன்று தமிழகத்தில் தடம் இல்லாமற் போனாலும் பௌத்தம் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையும் செழித்திருந்த மண் இது.

இன்று தமிழ் பவுத்தம் என்றொரு ஆய்வுத்துறையே உருவாகியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பின் குறியீடாக அண்ணல் அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட மதம் அது.

இத்தனையையும் ஒதுக்க வேண்டும் என்றால் இது தேசியமா இல்லை பாசிசமா?

பெரியாரை இவர்கள் ஏன் கரித்துக் கொட்டுகிறார்கள்? இவர்களால் கொண்டாடப்படும் பார்ப்பனீயத்திற்கு உறுதியான எதிரியாக அவர் இருந்தார் என்பதுதான் அவர்களின் எரிச்சல்.

இவர்கள் பேசுவது மக்களைச் சாதி, மதங்களுக்கு அப்பால் ஒன்றிணைக்கும் தமிழ்த் தேசியம் அல்ல. மாறாக மக்களைச் சாதி, மத அடிப்படையில் கூறு போடும் தமிழ்ப் பாசிசம்.

Categories
பொக்கிஷம்

சுடப்பட்ட இந்திரா காந்தியின் உயிரை காப்பாற்ற ’80 பாட்டில் ரத்தம்’: நடந்தது என்ன?

சுடப்பட்ட இந்திரா காந்தியின் உயிரை காப்பாற்ற ’80 பாட்டில் ரத்தம்’: நடந்தது என்ன?

 • 01-11-2017
இந்திரா காந்தி.

இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு முதன்முறையாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டது புவனேஷ்வரில்தான். நோயிலிருந்து குணமடையாத அவர் 1964ஆம் ஆண்டு மே மாதம் இறந்தார். புவனேஷ்வரில் 1967ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த இந்திரா காந்தியின்மீது கல் வீசி எறியப்பட்டு, அவரது மூக்கு எலும்பு உடைந்தது.

1984ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்று மதியம் புவனேஷ்வரில் இந்திரா காந்தி ஆற்றிய தேர்தல் உரையை வழக்கம்போல் தயாரித்தவர் அவரது தகவல் ஆலோசகரான எச்.ஒய்.சாரதா பிரசாத்.

ஆனால், தயாரிக்கப்பட்ட உரையை தவிர்த்து ஆச்சரியப்படும்விதமாக தன் விருப்பப்படி பேச ஆரம்பித்துவிட்டார் இந்திரா காந்தி.

இந்திரா காந்தி

மாற்றப்பட்ட உரை

இந்திரா காந்தியின் உரை இது: “நான் இன்று இங்கு இருக்கிறேன், நாளை இல்லாமலும் போகலாம். நான் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டேன். நாட்டு மக்களின் சேவையில் எனது வாழ்க்கையை செலவிட்டதற்கு பெருமை கொள்கிறேன். எனது இறுதிமூச்சு வரை மக்களுக்கு சேவை செய்வேன். நான் இறந்தாலும், எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இந்தியாவை வலுவாக்கும் பணியைச் செய்யும்”.

சில சமயங்களில் தற்செயலாக திடீரென்று வெளிவரும் வார்த்தைகள் எதிர்வரும் தினங்களை சூசகமாக குறிப்பதாக அமைந்துவிடும். அதுபோலவே இருந்தது இந்திராவின் சுய உரை.

“வன்முறை, மரணம் என்று குறிப்பிட்டு என்னை உலுக்கிவிட்டீர்கள்” என்று கூட்டத்திற்குக் பிறகு ராஜ்பவனுக்கு திரும்பிய இந்திராகாந்தியிடம் மாநில ஆளுனர் பிஷம்பர்நாத் பாண்டே வருத்தப்பட்டார்.

நேர்மையான மற்றும் உண்மையான விடயங்களைப் பற்றியே தான்பேசியதாக இந்திரா காந்தி பதிலளித்தார்.

இந்திரா காந்தி

தூங்கா இரவு

அன்று இரவு டெல்லி திரும்பிய இந்திரா காந்தி மிகவும் களைப்படைந்திருந்தார். அன்று இரவு இந்திராவால் ஆழ்ந்து உறங்க முடியவில்லை.

தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்த மருமகள் சோனியா காந்தி, அதிகாலை நான்கு மணிக்கு ஆஸ்துமாவுக்காக மருந்து எடுத்துக் கொள்வதற்காக குளியலறைக்கு சென்றார், அப்போதே இந்திரா காந்தி விழித்துக்கொண்டார்.

குளியலறைக்கு சென்ற தனது பின்னரே வந்த இந்திரா காந்தி, மருந்து எடுத்துக்கொடுக்க தனக்கு உதவியதாக சோனியா காந்தி ‘ராஜீவ்’ என்ற தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உடல்நிலை மீண்டும் மோசமாகிவிட்டால், எனக்கு ஒரு குரல் கொடுங்கள் நான் விழித்திருக்கிறேன் என்று இந்திரா, மருமகளிடம் கூறினாராம்.

இந்திரா காந்தி

குறைவான காலை உணவு

காலை ஏழரை மணிக்கு இந்திரா காந்தி தயாராகிவிட்டார். அன்று குங்குமப்பூ நிற சேலையில் கருப்பு பார்டர் போட்ட சேலையை அணிந்திருந்தார் இந்திரா.

அன்று காலை இந்திராவை சந்திப்பதற்கு இந்திரா காந்தி பற்றிய ஆவணப்படம் தயாரித்துக் கொண்டிருந்த பீட்டர் உஸ்தீனோவுக்கு முன் அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கு ஒருநாள் முன்னர் ஒடிசாவுக்கு சென்றிருந்தபோதும் இந்திரா காந்தி தொடர்பான சில காட்சிகளை அவர் படம் பிடித்திருந்தார்.

பிரிட்டனின் முன்னாள் பிரதம மந்திரி ஜேம்ஸ் கேலகன் மற்றும் மிசோரத்தை சேர்ந்த ஒரு தலைவரையும் பிற்பகலில் இந்திரா காந்தி சந்திப்பதாக ஏற்பாடாகியிருந்த்து. அன்று மாலை, இந்திரா காந்தி, பிரிட்டன் இளவரசி ஆன்னுக்கு விருந்தளிக்கும் ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அன்று காலை சிற்றுண்டியாக, இரண்டு ரொட்டித் துண்டுகள், தானியங்கள், ஆரஞ்சு சாறு மற்றும் முட்டைகளை சாப்பிட்டார் இந்திரா. அதுவே இந்திராவின் இறுதி உணவாகவும் இருந்தது.

காலை உணவுக்கு பிறகு, இந்திராவின் ஒப்பனையாளர் அவருக்கு ஒப்பனை செய்தார். இந்திராவை தினசரி காலைவேளையில் சந்திக்கும் மருத்துவர் கே.பி மாதூரும் அங்கு வந்தார்.

மருத்துவர் மாதூரை உள்ளே அழைத்த இந்திரா அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் 80 வயதிலும் தேவைக்கு அதிகமாக ஒப்பனை செய்துக் கொள்வது, தற்போதும் அவரது முடி கருப்பாகவே இருப்பது என இருவரும் வேடிக்கையாக பேசிக்கொண்டிருந்தார்கள்

இந்திரா காந்தி

திடீர் துப்பாக்கி சூடு

9 மணி 10 நிமிடங்களில் இந்திரா காந்தி வெளியே வந்தபோது மிதமான வெப்பத்துடன் காலை சூரியன் தகதகத்தது.

இந்திரா காந்திக்கு வெயில் படாமல் இருப்பதற்காக, கறுப்பு குடையை இந்திராவின் தலைக்கு மேலே உயர்த்தி பிடித்தவாறு நடந்து சென்றார் நாராயண் சிங். இந்திராவின் சில அடிகள் பின்னதாக ஆர்.கே. தவண் மற்றும் இந்திரா காந்தியின் தனிப்பட்ட ஊழியர் நாது ராம் நடந்து கொண்டிருந்தனர்.

அனைவருக்கும் பின்னர் நடந்துக் கொண்டிருந்தார் இந்திராவின் பாதுகாப்பு அதிகாரி துணை ஆய்வாளர் ராமேஷ்வர் தயால். இதனிடையில், பணியாளர் ஒருவர் ‘கப் அண்ட் சாஸருடன்’ சென்று கொண்டிருந்தார்.

முன்புறமாக கடந்து சென்ற அவரிடம் அது எங்கே எடுத்துச் செல்லப்படுகிறது என்று விசாரித்தார் இந்திரா. அந்த தேநீர் உஸ்தீனோவுக்காக எடுத்துச் செல்லப்பட்டதை தெரிந்துக் கொண்ட இந்திரா, வேறு ‘கப் அண்ட் சாஸரை` பயன்படுத்துமாறு கூறினார்.

சப்தர்ஜங் சாலையில் உள்ள வீட்டை, அக்பர் சாலையுடன் இணைக்கும் சிறிய வாயிலை நோக்கி செல்லும்போது தவணிடம் பேசிக்கொண்டே சென்றார் இந்திரா காந்தி.

ஏமனுக்கு அதிகாரபூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங், அன்று டெல்லிக்கு திரும்பவிருந்தார். இரவு ஏழு மணிக்கு அவரது விமானம் பாலம் விமானநிலையத்தில் இறங்கியதும், பிரிட்டன் இளவரசிக்கு தான் அளிக்கும் விருந்தில் கலந்துக் கொள்ளவேண்டும் என்ற செய்தியை ஜெயில் சிங்குக்கு இந்திரா அனுப்பச் சொன்னார் என்கிறார் தவண்.

திடீரென பிரதமரின் பாதுகாவலரான பியந்த் சிங் தனது துப்பாக்கியை எடுத்து இந்திரா காந்தியை நோக்கி சுட்டார். தோட்டா இந்திரா காந்தியின் வயிற்றில் பாய்ந்தது.

தனது முகத்தை மறைப்பதற்காக இந்திரா வலது கையை தூக்கினார், அதற்குள் பியந்த் சிங், இந்திராவின் பக்கவாட்டு மற்றும் மார்பில் இரண்டு முறை சுட்டார். துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த தோட்டாக்கள் இந்திரா காந்தியின் மார்பு, பக்கவாட்டுப்பகுதி மற்றும் இடுப்புக்குள் ஊடுருவின.

இந்திரா காந்தி

சுட்டுத் தள்ளுங்கள்

அங்கிருந்து ஐந்தடி தூரத்தில் சத்வந்த் சிங் ஒரு ஸ்டென் சப்மெஷின் துப்பாக்கியுடன் நின்றிருந்தார்.

இந்திரா காந்தி கீழே வீழ்ந்ததைப் பார்த்த சத்வந்த் சிங், தனது இடத்தில் இருந்து அசையாமல் ஒரு கணம் சிலைபோல் நின்றான். அதைப்பார்த்த பியந்த் சிங் ‘சுடு’ என்று கூச்சலிட்டான்.

சத்வந்த் சிங், உடனே தனது தானியங்கி துப்பாக்கியில் இருந்த 25 தோட்டாக்கள் தீரும்வரை இந்திராவை நோக்கி சுட்டான்.

பியந்த் சிங் பிரதமரை நோக்கி சுட்டு 25 வினாடிகள்வரை, அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

சத்வந்த் துப்பாக்கியால் சுட்டபோது அனைவருக்கும் பின்னால் நடந்து நடந்துக்கொண்டிருந்த ராமேஷ்வர் தயால் முன்னோக்கி ஓடிவந்தார்.

ஆனால், இந்திரா காந்தியிடம் அவர் சென்று சேர்வதற்கு முன்னரே சத்வந்தின் தோட்டாக்கள் அவரது தொடைகளையும் கால்களையும் தாக்கியதில் அவர் கீழே விழுந்தார்.

தோட்டாவால் துளைக்கப்பட்டு கீழே வீழ்ந்துகிடந்த இந்திரா காந்தியை பார்த்த உதவியாளர்கள், ஒருவருக்கொருவர் உத்தரவுகளை பிறப்பித்தார்கள். துப்பாக்கி சத்தத்தைக் கேட்ட அக்பர் சாலையில் நின்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரி தினேஷ் குமார் பட் உள்ளே ஓடிவந்தார்.

இந்திரா காந்தி.
இந்திரா காந்தியின் பின்னால் நிற்பவர் காங்கிரஸ் தலைவர் ஆர்.கே.தவண்.

ஆம்புலன்ஸ்

அப்போது பியந்த் சிங்கும், சத்வந்த் சிங்கும் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டார்கள். “நாங்கள் செய்ய வேண்டியதை செய்துவிட்டோம், இனி நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்” என்று எக்காளமிட்டான் பியந்த் சிங்.

அப்போது அங்கு குதித்து முன்னேறிய நாராயண் சிங், பியந்த் சிங்கை கீழே தள்ளினார். அருகில் இருந்த பாதுகாப்பு அறையில் இருந்து ஐ.டி.பி.பி வீரர்கள் ஓடிவந்து, சத்வந்த் சிங்கை பிடித்தனர்.

எப்போதும் அங்கு ஒரு ஆம்புலன்ஸ் நிற்பது வழக்கம். ஆனால் அன்று அந்த அவசர ஊர்தியின் ஓட்டுநர் அவசர உதவிக்கு வரவில்லை, அவர் எங்கே என்றே தெரியவில்லை. இந்திரா காந்தியின் அரசியல் ஆலோசகர் மாக்கன்லால் ஃபோதேதார், ‘காரை கொண்டு வாருங்கள்’ என்று கூச்சலிட்டார்.

நிலத்தில் வீழ்ந்துகிடந்த இந்திரா காந்தியை, ஆர்.கே.தவணும் பாதுகாவலர் தினேஷ் பட்டும் தூக்கி வெள்ளை அம்பாஸிடர் காரின் பின்புற இருக்கையில் கிட்த்தினார்கள்.

முன்புற இருக்கையில் தவண், ஃபோதேதாரும் அமர்ந்தார்கள். காரை கிளப்புன்போது ஓடிவந்த சோனியா காந்தியில் காலில் செருப்புகூட இல்லை. இரவு உடையில் சோனியா காந்தி ‘மம்மி, மம்மி’ என்று கத்திக் கொண்டு ஓடிவந்தார்.

இந்திரா காந்தி காரில் கிடத்தப்பட்டிருந்ததை பார்த்த சோனியா காந்தி, பின் இருக்கையில் இந்திரா காந்தியின் அருகில் அமர்ந்து, அவரது தலையை தனது மடியில் தூக்கி வைத்துக்கொண்டார்.

கார் வேகமாக எய்ம்ஸ் மருத்துவமனையை நோக்கிச் சென்றது. நான்கு கிலோமீட்டர் செல்லும் வரை யாரும் ஒன்றுமே பேசவில்லை. சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி இறந்த பல மணி நேரத்திற்கு பிறகே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஸ்ட்ரெட்சர் இல்லை

ஒன்பது மணி 32 நிமிடத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கார் சென்றடைந்தது. அங்கு இந்திரா காந்தியின் ஓ ஆர்.ஹெச் நெகடிவ் வகை ரத்தம் போதுமான அளவு இருந்தது.

ஆனால், இந்திரா காந்தி காயமடைந்திருப்பது, அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவது போன்ற எந்த ஒரு தகவலும் தொலைபேசி மூலமாக மருத்துவமனைக்கு சொல்லப்படவில்லை.

அவசர பிரிவு கதவு திறப்பதற்கும், இந்திரா காந்தி காரில் இருந்து இறக்கப்படுவதற்கும் மூன்று நிமிடங்கள் ஆனது. அங்கு அவரை கொண்டு செல்வதற்கு ஸ்ட்ரெட்சர் இல்லை!

சக்கரம் கொண்ட ஒரு ஸ்ட்ரக்ட்சர் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டு, இந்திரா காந்தி கொண்டு செல்லப்பட்டார். இந்திராவின் மோசமான நிலையைப் பார்த்த அங்கிருந்த மருத்துவர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள்.

அவர்கள் உடனே எய்ம்சின் மூத்த இதய சிகிச்சை நிபுணர்களுக்கு தகவல் அளித்தார்கள். சில நிமிடங்களிலேயே குலேரியா, எம்.எம். கபூர், எஸ்.பலராம் ஆகிய மருத்துவர்கள் விரைந்துவந்தனர்.

இந்திராவின் இதயம் சிறிதளவு செயல்படுவதாக எலெக்ட்ரோகார்டியோகிராம் இயந்திரம் காண்பித்தது. ஆனால் நாடித்துடிப்பு இல்லை.

இந்திரா காந்தியின் கண்கள் நிலைகுத்தி நின்றன. இது மூளை சேதமடைந்ததற்கான அறிகுறி.

இந்திராவின் நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் சென்றால் மூளை செயல்படலாம் என்ற எண்ணத்தில் அவரது வாயில் ஆக்சிஜன் குழாய் பொருத்தப்பட்டது.

இந்திரா காந்திக்கு 80 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டது. இது வழக்கமானதை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.

மருத்துவர் குலேரியா சொல்கிறார், “இந்திரா காந்தியை பார்த்ததுமே அவர் இறந்துவிட்டார் என்பதை அறிந்துக்கொண்டேன். ஈ.சி.ஜியும் அதை உறுதிப்படுத்தியது. இனி என்ன செய்வது என்று அங்கிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் ஷங்கரானந்திடம் கேட்டேன். பிரதமர் இறந்ததை அறிவித்துவிடலாமா என்று வினவினேன். வேண்டாம் என்று அவர் மறுத்துவிட்டார். பிறகு இந்திராவின் உடலை அறுவை சிகிச்சை அறைக்கு மாற்றினோம்”.

இந்திரா காந்தி

இதயம் மட்டுமே பாதிக்கப்படவில்லை

இந்திரா காந்தியின் உடலை இதயம் மற்றும் நுரையீரல் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டது. இது அவருடைய ரத்தத்தை சுத்தமாக்க தொடங்கியது, இதனால் ரத்த வெப்பநிலை 37 டிகிரிலிருந்து 31 டிகிரியாக குறைந்தது.

இந்திரா இறந்துவிட்டார் என்பது தெளிவாகிவிட்டது. ஆனாலும் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் எட்டாவது மாடியில் உள்ள ஆபரேஷன் தியேட்டருக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

தோட்டாக்கள், இந்திராவின் கல்லீரலின் வலது பகுதியை சேதப்படுத்திவிட்ட்தை மருத்துவர்கள் கண்டறிந்தார்கள். அவரது பெருங்குடலில் குறைந்தது பன்னிரண்டு துளைகள் இருந்தன, சிறுகுடலும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.

பிரதமரின் நுரையீரலையும் தோட்டா துளைத்திருந்தது. முதுகுத்தண்டும் தோட்டாக்களின் இலக்கில் இருந்து தப்பவில்லை. இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட இந்திராவின் இதயம் மட்டுமே பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருந்தது.

இந்திரா காந்தி
மருத்துவமனைக்கு வெளியே சினத்துடன் நிற்கும் மக்கள்

திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது

பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திரா காந்தி கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு பிறகு, மதியம் இரண்டு மணி 23 நிமிடத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அரசு பிரசார ஊடகங்கள் மாலை ஆறு மணிவரை பிரதமர் இறந்துவிட்டதை அறிவிக்கவில்லை.

“இந்திரா காந்தி மீது இது போன்ற தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறை முகமைகள் எச்சரிக்கை விடுத்திருந்தன” என்று இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இந்தர் மல்ஹோத்ரா கூறுகிறார்.

இந்திரா காந்தியின் அனைத்து சீக்கிய பாதுகாப்பு அதிகாரிகளும் அகற்றப்பட வேண்டும் என்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தார்கள்

இந்திரா காந்தி
இந்திரா காந்தி படுகொலைக்கு பிறகு டெல்லியில் சீக்கீயர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது

ஆனால் அந்த கோப்பு, இந்திரா காந்தியிடம் சென்றபோது, நாம் மதசார்பற்றவர்கள் தானே? (Aren’t We Secular?)) என்று கோபத்துடன் அவர் மூன்றே வார்த்தைகளில் முடித்துவிட்டார்.

இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவருடைய சீக்கிய பாதுகாவலர்கள் இருவரும் அவருக்கு அருகில் பணியில் அமர்த்தப்படவேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்திரா காந்தி
இந்திரா காந்தியின் இறுதி சடங்குகளில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி

31ஆம் தேதியன்று தனக்கு வயிறு சரியில்லை என்று சத்வந்த் சிங் சாக்குபோக்கு சொன்னார். அதனால் அவருக்கு கழிவறைக்கு அருகில் இருக்குமாறு பணி வழங்கப்பட்டிருந்தது.

இப்படித்தான், சீக்கியர்களின் பொற்கோவிலில் இந்திராகாந்தி பிரதமராக எடுத்த ‘ப்ளூ ஸ்டார்’ நடவடிக்கைக்கு பழிவாங்கினார்கள் சத்வந்த் சிங்கும் பியந்த் சிங்கும்.

இந்திரா காந்தி

‘தனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இந்தியாவை வலுவாக்கும் பணியைச் செய்யும்’ என்று இறப்பதற்கு முதல் நாள் இந்திரா காந்தி ஆற்றிய உரைக்கு நேர்மாறாக, இந்திரா காந்தியை கொன்ற அவரது பாதுகாவலர்களின் சீக்கிய சமூகம் பல மடங்கு ரத்தத்தை சிந்தியது, காலத்தின் கோலமல்ல, அலங்கோலம்!

Categories
Featured பொக்கிஷம் பொது செய்திகள்

கென்னடி கொலை தொடர்பான 2,800 கோப்புகளை விடுவித்தார் டிரம்ப்….

அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஜான் எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 2,800 ரகசியக் கோப்புகளை வெளியிடத் தகுந்த கோப்புகளாக வகைமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்.

கென்னடி உரையாற்றுகிறார்.
கென்னடியின் (வலது) வாழ்வும் மரணமும் அமெரிக்கர்களின் ஆர்வத்தை இன்னமும் தூண்டியபடிதான் உள்ளது.

எனினும் தேசியப் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி இக் கொலை தொடர்பான இன்னும் சில ரகசியக் கோப்புகளை சாதாரணக் கோப்புகளாக வகை மாற்றம் செய்து விடுவிக்க டிரம்ப் மறுத்துவிட்டார்.

தேசிய ஆவணக் காப்பகத்தால் பகிரத்தக்கதாக மாற்றப்பட்டுள்ள கோப்புகளில் இருப்பது என்ன என்பது பற்றி டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அலுவலர்கள் தெரிவிக்கவில்லை. 54 ஆண்டுகளுக்கு முன்பு டெக்சஸ் மாகாணத்தின் டல்லாஸ் பகுதியில் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது முதல் அவரது கொலைக்கான நோக்கம் தொடர்பாக பல சதிக் கோட்பாடுகள் வலம் வந்தபடி உள்ளன.

இந்தக் கொலை தொடர்பான விசாரணையின் சுமார் 50 லட்சம் பக்க ஆவணங்கள் முழுவதையும் 25 ஆண்டுகளில் பகிரங்கமாக வெளியிடவேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் 1992ல் சட்டம் இயற்றியது. இந்தச் சட்டப்படி, எல்லா ஆவணங்களையும் வெளியிடுவதற்கான காலக்கெடு வியாழக்கிழமை முடிவடைய இருந்த நிலையில் இந்த ஆவணங்களில் இன்னும் வெளியிடப்படாமல் இருந்தவற்றில் பெரும்பாலானதை டிரம்ப் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாகவே, சுமார் 90 சதவீத ஆவணங்கள் வெளியிடப்பட்டுவிட்டன.

அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., புலனாய்வு நிறுவனமான எஃப். பி.ஐ. வெளியுறவுத் துறை உள்ளிட்ட நிறுவனங்கள் கடைசி நிமிடத்தில் மேற்கொண்ட முயற்சிகளால் இந்தக் கொலை தொடர்பான கோப்புகளில் சில வெளியிடப்படவில்லை. எனினும், அரசு மூடி மறைக்க முயல்வதான குற்றச்சாட்டுகள் குறையப்போவதில்லை.

தேசியப்பாதுகாப்புக்கு சரி செய்ய முடியாத பாதிப்ப ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படும் கோப்புகளை நிறுத்திவைக்கவேண்டும் என்ற முடிவை ஏற்றுக்கொள்வதைத் தவிர என்னால் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை என்று டிரம்ப் டிவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது?

1963 நவம்பர் 22-ம் தேதி டல்லாசில் மேற்கூரையில்லாத கார் ஒன்றில் பயணித்தபோது கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தக் காரில் இருந்த டெக்சஸ் மாகாண ஆளுநர் ஜான் கொன்னாலி காயமடைந்தார். காவல்துறை அதிகாரி ஜெ.டி.டிப்பிட்டும் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட லீ ஹார்வீ ஆஸ்வால்டு என்பவர் போலீஸ் அலுவலகத்தில் இரவு விடுதி உரிமையாளர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.