கொரோனா கிருமி ஒழிய பல ஆண்டுகள் ஆகலாம்: அச்சந்தரும் புதிய ஆய்வு முடிவுகள்

0
128

உலகின் எல்லா மூலைகளையும் எட்டிவிட்ட கொரோனா கிருமித்தொற்றுப் பிரச்சினை இப்போதைக்கு ஓயாது என்றும் அது இன்னும் பல ஆண்டுகளுக்கு, ஏன் பல பத்தாண்டுகளுக்கு மனிதகுலத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ளக்கூடும் என விஞ்ஞானிகள் குழு ஒன்று அச்சமூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த   விஞ்ஞானிகள் அடங்கிய அந்தக் குழு, தனது ஆய்வு முடிவுகளை ‘நேச்சர் மெடிசன்’ எனும் இதழில் வெளியிட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்படுவதற்குப் பல காலத்திற்கு முன்னரே, கொரோனா கிருமி விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குத் தொற்றி இருக்கலாம் என்பது அந்த விஞ்ஞானிகளின் கருத்து.

“படிப்படியான பரிணாம மாற்றங்கள் காரணமாக கொரோனா கிருமி  தோன்றி இருக்கலாம். பின்னர் அது ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதரைத் தொற்றுவதற்கான திறனைப் பெற்று, தீவிரமான, உயிருக்கு உலை வைக்கும் நோயாக உருவெடுத்திருக்கலாம்,” என்றார் அமெரிக்க தேசிய சுகாதார நிலையத்தின் இயக்குநர் டாக்டர் ஃபிரான்சிஸ் கொலின்ஸ்.

“கொரோனா கிருமி தொடர்பில் எங்களுக்குக் கிடைத்துள்ள மரபணு வரிசைத் தரவுகளை ஒப்புநோக்கும்போது, இந்த SARS-CoV-2 கிருமி இயற்கைச் செயல்முறைகள் மூலமாகவே தோன்றியது என நாங்கள் திட்டவட்டமாக தீர்மானிக்கிறோம்,” என்று கலிஃபோர்னியா ஸ்கிரிப்ஸ் ஆய்வு நிலையத்தின் தலைமை ஆய்வாளரான கிறிஸ்டியன் ஆண்டர்சன் கூறியிருக்கிறார்.

இத்தாலியில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே வித்தியாசமான ‘நிமோனியா’ காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டினார் அந்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஜுசெப்பே ரெமூஸி. அதைப் பார்க்கும்போது, எவரும் அறிவதற்கு முன்னரே அது ஐரோப்பாவிற்கு வந்திருக்கலாம் என்பது அவரின் கூற்று.

அதேபோல, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு உள்ளோருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் ஒருவர், கடந்த ஆண்டில் புதிரானதொரு நிமோனியா பரவல் தொடர்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுகாதார நிபுணர்களும் பதிவுசெய்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

“கொரோனா தொற்று குறித்த முழு விவரங்களும் ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும்,” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத அந்த மருத்துவர்.

Your Comments