கோவிட் – 19 யின் காரணமாக கொள்ளை லாபம் அடிக்கும் நிறுவனங்கள்….

0
152


நாட்டை கோவிட் – 19 நச்சுயிரி நோய் உலுக்கி வரும் வேளையில், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் பயனீட்டாளர்களிடமிருந்து கொள்ளை லாபம் அடிப்பதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என மலேசிய நண்பன் இப்புதிய அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள இந்த இக்கட்டான நேரத்தில் பல்வேறு தரப்பினர் தங்களின் சக்திக்கு ஏற்றவாறு மக்களுக்கு பல்வேறு வகையில் உதவிகளைச் செய்து வருகின்றனர். ஆனால், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மூலமாக கோடிக்கணக்கான வெள்ளி வருமானம் பெறும் ஆஸ்ட்ரோ கட்டண தொலைக்காட்சி நிறுவனம் உட்பட மெக்சிஸ், டிஜி, செல்கோம் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எந்த வகையில் மக்களின் சுமையைக் குறைப்பதற்கு தங்களின் பங்கினை ஆற்றி வருகிறது என்றால், ஒன்றுமே இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். பயனீட்டாளர்களிடமிருந்து பல கோடி வெள்ளியை லாபமாகப் பெறும் மேற்கண்ட நிறுவனங்கள் இதுபோன்ற நெருக்கடியான காலகட்டத்தில் பெரும் நிதிச்சுமையை எதிர்நோக்கி வரும் மலேசியர்களுக்கு தங்களால் முடிந்த அளவில் கட்டணக் கழிவுகள் வழங்குவதே நியாயம். அதேபோல், நாட்டிலுள்ள மெக்சிஸ், டிஜி, செல்கோம் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புக் கழிவுகளை வழங்க முன்வர வேண்டும். இவ்விவகாரத்தில் அரசாங்கம் நேரடியாக தலையிட்டு ஆஸ்ட்ரோ கட்டண தொலைக்காட்சி உட்பட மேற்குறிப்பிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நாட்டு மக்கள் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இந்நேரத்தில் தாங்கள் அதிக லாபம் சம்பாதிக்க இது நேரமில்லை என்பதை மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

Your Comments