இங்கிலாந்தில் கோவில் கொண்ட ஏழுமலையான்
Ezhumalaiyan with a temple in England
Bakthi Elakiyam : Jayarathan Date : 17 Jan 2025
உலகின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்களை தன்பால் கவர்ந்திழுக்கும் ஏழுமலைகளின் நாயகன், திருப்பதி வெங்கடேசப் பெருமாள்,மேலை நாட்டிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு திருவருள் தருகிறார். ஆம், இங்கிலாந்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டன் மாநகரில் இருந்து வடமேற்கில் 120 மைல் தொலைவில், பர்மிங்காமில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ளது டிவிடேல்.இந்தப் பகுதிகளில் வாழும் ஆன்மிக உணர்வாளர்களுக்கு வெங்கடேசப் பெருமாளை இங்கே கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே பலர் ஒன்று கூடி 1984-ல் ஒரு அறக்கட்டளையை உருவாக்கினர்.
இங்கும் , 'ஈஸ்டர்ன் காட்' எனப்படும் ஏழு மலைகள் சூழ்ந்த, 'ராக்கி மவுண்டன்' எனும் மிகப் பழமையான வனப்பகுதியில் திருப்பதி ஏழுமலையானை எழுந்தருளச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டனர். தேம்ஸ் நதி தீரத்தில் இருக்கும் இந்தப் பகுதியில் 20 ஏக்கர் நிலத்தை 1995-ல் வாங்கினார்கள்.
சாஸ்திர சம்பிரதாயப்படி 1997-ல் பூமி பூஜை செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. காரைக்குடி சிற்பி தட்சிணாமூர்த்தி,சிற்ப சாஸ்திரப்படி கோவிலை நிர்மாணிக்க, ஆடம் கார்டி' எனும் ஆங்கில கட்டிடக்கலை நிபுணர் வடிவமைத்துக் கொடுத்தார். ஏப்ரல் 2000-ல் கோவில் உருவானது.
வெங்கடேசப் பெருமாள் ஏழு கலசங்களுடன் கூடிய 4 அடுக்கு நுழைவு வாசல், கோவிலுக்குள் நம்மை வரவேற்கிறது. சிறிது தூரம் நேராகச் சென்றால் 18 படிகளைக் கடந்து 5 நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி நிற்கிறது. உள்ளே பக்கவாட்டு வழியில் நுழைந்தால் வழவழப்பான தரை. உள்ளே அலங்காரத் தோற்றத்தில் ஏழுமலையான்,திருப்பதி போன்று மிகப் பெரிய அளவில் இல்லாவிடினும் 4 அடி உயரத்தில் கருணையே வடிவாகக் காட்சி தருகிறார்.அங்கேயே ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாளின் உற்சவ மூர்த்திகள். எதிரே அவரது வாகனமான கருடாழ்வார் கை கூப்பி நிற்கிறார்.
நாமும் கை கூப்பி கண்மூடி வணங்கி விட்டுத் திரும்பினால், வலதுபுறத்தில் தனிச் சன்னிதியில் தாயார் கனிவுடன் புன்னகைக்கிறார்.சுற்றிவரும் போது பெருமாள் சன்னிதிக்கு இடப்புறம் ராமதூதனான ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. அவர் அருகே உற்சவர் ஆஞ்சநேயரின் பஞ்சலோகச் சிலை இருக்கிறது.அவரையும் வணங்கிவிட்டு வரும்போது தென்கிழக்கு மூலையில் சிறிய கோவிலில் அனைத்து தோஷங்களையும் நீக்கும், திருமாலின் வெற்றிப்படையான சக்கரத்தாழ்வார் எழுந்தருளி உள்ளார்.
இந்தத் திருக்கோவிலின் உள் மண்டபத்தில் மிக அழகிய கலை நுணுக்கத்துடன் கூடிய பளிங்குத் தூண்கள் நம்மை வியக்க வைத்தன
.
ராஜகோபுரத்தின் முன்பாக, படிகட்டிற்கு வலதுபுறம் ஒரு தனிக்கோவிலில் அமர்ந்த நிலையில் ஆனைமுகத்துக் கடவுள் அருள்பாலிக்கிறார். மூஞ்சுறு வாகனம் எதிரில் உள்ளது. இந்தப் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது அங்கே விநாயகரின் பஞ்சலோகச் சிலை தங்கச் சிலை போல மின்னுவதைக் காண முடியும்.
அதேபோல படிக்கட்டிற்கு இடது புறத்தில் ஒரு தனிக்கோவிலில் முருகப்பெருமான், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி போல நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். வேலும் சேவற் கொடியும் இரு கைகளிலும் ஏந்தியபடி காட்சிதரும் முருகப்பெருமானின் எதிரே மயில் வாகனம் உள்ளது.
இந்த முருகப்பெருமானைச் சுற்றி வரும் போது வள்ளி- தெய்வானையுடன் நின்ற கோலத்தில் முருகன் தகதகவென்று உலோகச் சிலையாக பளிச்சிடுகிறார்.கீழே இறங்கி வந்தவுடன் வலதுபுறம் அதாவது விநாயகர் கோவிலுக்கு எதிரே சிவன் கோவில் உள்ளது. கொடிமரம் தாண்டி உள்ளே நுழையும் போது,எதிரே நந்தி வீற்றிருக்க சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தருகிறார். கங்காதேசுவரர் என்ற திருநாமம் கொண்ட சிவலிங்கம்,கங்கையில் சுயம்பு வடிவாகக் கிடைத்தவர் என்று பெருமையுடன் சொல்கிறார்கள். அருகே வேதநாயகி என்ற பெயருடன் அம்பிகை நிற்கிறாள். பிரகாரத்தின் தென்புறம் ஐயப்பன் துர்க்கை அம்மன் சன்னிதிகள் உள்ளன.
விழாக்கள் பசுமையான மலைகளின் பின்னணியில் குளுமையான சூழலில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்குஇங்கிலாந்தின் பல பகுதிகளில் இருந்தும், தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகா போன்ற தென்னிந்திய பக்தர்கள் மட்டுமல்லாது மும்பை,குஜராத், வங்காளம் போன்ற வட மாநில பக்தர்களும் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். புரட்டாசி சனிக்கிழமைகளிலும், வார சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் அதிக அளவி வருகை தருகிறார்கள்.
விநாயகருக்குரிய சதுர்த்தி தினங்களும், முருகனுக்கேற்ற கார்த்திகை, சஷ்டி விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.சிவ பெருமானுக்குரிய விழாக்களில் பிரதோஷம், மகா சிவராத்திரி நாட்கள் பிரசித்தமானவை. வியாழக்கிழமைகளில் ஷீரடி சாய்பாபாவை நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து பஜனைப் பாடல்களைப் பாடி பக்தியுடன் வழிபட்டுச் செல்கின்றனர்.
இது தவிர நவக்கிரக சன்னிதிக்கு எப்போதும் தனி மவுசு உண்டு.குருபெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சிகளின் போது தனி வேள்விகள் நடைபெறுகின்றன. விழாக் காலங்களில் உற்சவர் உலாவும், தேரோட்டமும் நடத்தப்படுகிறது.
தினமும் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும் இந்த ஆன்மிக திருக்கோவில்கள், விசேஷ தினங்களில் கூடுதல் நேரம் திறந்திருக்கும்.
சமுதாயப் பணிகள்
ஆலயப் பணிகளை அங்கேயே தங்கியிருந்து கவனித்துக் கொள்ளும் வகையில் குருக்களுக்கு, தங்கும் குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன இந்த வளாகத்திலேயே கம்யூனிட்டி ஹால் என்ற தனிக்கட்டிடம் மிகப் பெரிய கூடத்துடன் இருப்பது ஆன்மிக விழாக்கள் நடத்தவும் மக்கள் பணிகளுக்கும் பயன்படுகிறது. குழந்தைகள் விளையாடும் கூடம், தியான கூடம் ஆகியவையும் உள்ளன.வெங்கடேசப் பெருமாள் கோவிலின் கீழ்த்தளத்தில் கோவில் அலுவலகம் இயங்குகிறது. அங்கே சிறிய கண்காட்சியும் உள்ளது.
பிரட் ஜாம், பர்கர், பீசா போன்ற மேலை நாட்டு உணவினையே பார்த்த வெளிநாட்டு வாழ் அன்பர்களுக்கு, இந்த ஆலயத்தில் அவ்வப்போது சர்க்கரைப் பொங்கல்,சாம்பார் சாதம், தயிர்சாதம், புளியோதரை, வடை, சுண்டல் போன்ற தென்னிந்திய உணவு பிரசாதமாகக் கிடைப்பது பெரிய வரப்பிரசாதமாகும்.
அனைத்து தெய்வங்களையும் உள்ளடக்கிய சிறுசிறு கோவில்களைக் கொண்ட இத்திருத்தலம் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் (பாலாஜி) கோவில் என்று அழைக்கப்படுகிறது.
www.myvelicham.com MyTravel pls whats APP call 018-2861950