அறிவியல்...
க.பாலசுப்பிரமணியம்
மனிதன் இறைவனால் படைக்கப்பட்டானா அல்லது இயல்பு பரிணாம சுழற்சியில் உருமாற்றம் பெற்றவனா என்பதில் சில மதங்களின் நம்பிக்கைகளுக்கும், அறிவியல் கூற்றுக்கும் முரண்பாடு உள்ளது.
குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்று அறிவியலும், இறைவன் மனிதனைப் படைத்தான் என்பது சில மத நம்பிக்கைகளின் கூற்றாகவும் இருக்கின்றது.
எது சரி என்கிற விவாதத்தினால் எவ்வித நன்மையும் இல்லை என்பதால் அவ்விவாதத்தை தவிர்த்துவிட்டு வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் வழிவகை குறித்து சிந்திப்போம்
.
பரிணாம வளர்ச்சியில், ஓரறிவு முதல் ஐந்தறிவு உயிரினங்கள் எத்தகைய உடல் அமைப்பும், அறிவு வளர்ச்சியும் கொண்டுள்ளனவோ அவற்றில் எத்தகைய மாற்றமும் இன்றி வாழ்ந்து மடிகின்றன.
ஆனால் மனிதன் காலத்துக்கு காலம் அறிவு வளர்ச்சி பெற்று வாழ்க்கையை மேம்படுத்திக்கொண்டிருக்கிறான் என்பது கவனத்தில்கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஐந்தறிவுக்கு உட்பட்ட உயிரினங்கள் மாறமுடியாதவை எனவும் ஆறறிவு மனிதன் தன்னை மாற்றிக்கொள்ளும் வல்லமை படைத்தவன் என்பதையும் ஐயத்துக்கு இடமின்றி அறிவுள்ளோர் ஒப்புவர்.
ஆறாவது அறிவு எது என்பதையும் அதனை எவ்வாறு பயன்படுத்தி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வது என்பது குறித்து சிந்திக்கும் முயற்சி இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆறாவது அறிவுதான் மனிதனின் மேம்பாட்டுக்கு துணையாக இருக்கிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் நூல்களில் தொன்மையானதாகக் கருதப்படும் "தொல்காப்பியம்" - உயிர்களின் பகுப்பும், சிறப்பு மரபும் என்ற தலைப்பில் உயிரினங்களின் அறிவின் பரிணாம வளர்ச்சியை வகைப்படுத்தியுள்ளது.
உலகின் பல்வேறு இனங்கள் மனம் குறித்து சிந்திக்கும் முன்பே ஆறாவது அறிவுக்கு மனம் என்று பெயரிட்டது தமிழ் மக்களே.
உலகில் வாழும் உயிர்கள் படிப்படியாக ஒவ்வொரு அறிவாக வளர்நிலை அடைந்து சிறப்பு எய்தியதை, பண்டைத் தமிழ் உயிரியலாளர்கள் ஆறு வகை அறிவுள்ள உயிர்களாக நெறிப்படுத்தினர்
.
"ஒன்றறிவதுவே உற்றறிவதுவே" ஓர் அறிவென்பது உடலால் தொட்டு அறியும் அறிவு. தாவரம் சூரிய ஒளியை நாடி வளர்வதும், கொடிபடர்வதும், வேர்கள் நிலத்துள் விரவிச்செல்வதும், தாவரம் நிலத்துடன் நிலைத்து நிற்பதும் தொடும் அறிவாலேயேயாகும். தொட்டு அறிவதே முதலாவது அறிவாகும். புல், செடி, கொடி, மரம் போன்றவை ஓர் அறிவு உடையவை.
"இரண்டறிவதுவே அதனொடு நாவே" இரண்டு அறிவென்பது உடலால் தொட்டும், நாவால் சுவைத்தும் அறிவது. நாவால் சுவையை அறிவதே இரண்டாவது அறிவாகும். சங்கு, சிப்பி போன்றனவை ஈரறிவுடையன.
"மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே" மூன்று அறிவென்பது உடலால் தொட்டும், நாவால் சுவைத்தும், மூக்கால் முகர்ந்தும் அறிவது. மணத்தை மூக்கால் முகர்ந்து அறிவதே மூன்றாவது அறிவாகும். கறையான், எறும்பு போன்றனவை மூன்றறிவு உடையன.
"நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே" நான்கு அறிவென்பது உடலால் தொட்டும், நாவால் சுவைத்தும், மூக்கால் முகர்ந்தும், கண்ணால் கண்டும் அறிவது. கண்ணால் காண்பதை தெரிந்து கொள்வதே நான்காவது அறிவாகும். நண்டு, தும்பி போன்றனவை நாலறிவுடையன.
"ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே" ஐந்து அறிவென்பது உடலால் தொட்டும், நாவால் சுவைத்தும், மூக்கால் முகர்ந்தும், கண்ணால் கண்டும், செவியால் கேட்டும் அறிவது. செவியால் கேட்பதை விளங்கிக் கொள்வதே ஐந்தாவது அறிவாகும். விலங்கு, பறவை போன்றனவை ஐந்தறிவுடையன.
"ஆறறிவதுவே அவற்றொடு மனமே" ஆறு அறிவென்பது மேலே சொன்ன ஐவகை அறிவுடன் மனதால் நினைத்தும் அறிவது. மனத்தில் எழும் எண்ணங்களைப் புரிந்து கொள்வது அல்லது நல்லது எது கெட்டது எது எனப்பகுத்து அறிந்து கொள்வது ஆறாவது அறிவாகும். மனிதரே ஆறறிவு உடையோர்.
மனதின் பேராற்றலைப் புரிந்துகொண்ட சித்தர் பெருமக்கள் அதனைப் பயன்படுத்தி எண்ணிலடங்கா பேருண்மைகளை மனிதகுல மேம்பாட்டுக்கு அருளியுள்ளனர். அறிவியல் இன்னமும் தொடமுடியாத 'மனப்பேராற்றல்' குறித்த உண்மைகளை சித்தர் பெருமக்கள் அன்றே இயம்பி உள்ளனர்.
ஆங்கிலேயர்கள் வரையறுத்த கல்வி முறையில் இன்றளவும் வாழ்க்கைக்கு ஆதார சுருதியாக இருக்கும் ஆறாவது அறிவாகிய மனதைக் குறித்து எவ்வித பாடநூல்களும் இல்லையென்பது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
இவ்வுலகில் வெற்றி பெறுவதற்கு மனதின் ஆற்றலை விரிவாக்கம் செய்தல் வேண்டும். மீண்டும் பிறவா பிறப்பறுத்து இறை சக்தியோடு இணையும் நிலை பெறுவதற்கு மனநாசம் அல்லது மனம் அற்ற நிலை வேண்டும் என்பது ஆன்மீக அறிவியலாகும்
.
மதத்தின் பேரால், ஆன்மீகத்தின் பேரால், தெரியாத ஊருக்கு மக்களை அழைத்துச் செல்லும் அறிவார்ந்த பெரியவர்கள், ஆறாவது அறிவாகிய மனதைப் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்வுகாணும் வழிகாட்டுதலை வழங்கவில்லை என்ற குறைபாட்டினை சரிசெய்யும் முயற்சி இதுவாகும்.
மனதின் பேராற்றலை பயன்படுத்தி மனிதகுல மேம்பாட்டுக்கு சித்தர் பெருமக்கள் சொல்லிய பாடல்களின் பொருள் விளங்கிக்கொள்ள இன்னொரு பிறப்பு தேவைப்படும்.
ஆறாவது அறிவாகிய மனதைப்பற்றிய ஆய்வினை ஒரு பாமரத்தனமான பார்வையில், யாவரும் சுலபமாக விளங்கிக்கொண்டு அதனை பயன்படுத்தும் வழி வகைகள் குறித்த என்னுடைய கருத்தினை பதிவு செய்துள்ளேன். இக்கருத்து முடிவுக்கு வருவதற்கு முதலில் என்னுடைய ஞானகுருவாக தொடக்கி வைத்த டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி ஐயா அவர்களை நினைவுகூர்ந்து, வணங்குகிறேன். அதற்குப் பின்னர் நான் கலந்துகொண்ட ஆங்கில தன்முனைப்புப் பயிற்சிகள், படித்த ஆங்கில நூல்கள், ஆன்மீகப் பயணங்கள், தொல்காப்பியம், சைவ சித்தாந்தம், திருமந்திரம் திருக்குறள் காட்டும் நெறிகள், இன்னும் பல்வேறு நூல்களும், 40 ஆண்டுகாலம் தன்முனைப்புப் பயிற்சிகள் நடத்திய அனுபவங்களும் என்னை செதுக்கியிருக்கின்றன.
ஆக்கம் - க.பாலசுப்பிரமணியம்