மலேசியா சாதனை மனிதர் துன் வீ.தி சம்பந்தன்திருமதி மு.ப. விக்னேஸ்வரி தனசேகர் .
Malaysia Man of Achievement Tun V.T. Sampanthan. Mrs. M.P. Vigneswary Dhanasekar

Date : 12 April 2025 News By: திருமதி மு.ப. விக்னேஸ்வரி தனசேகர்
நமது மலேசிய இந்தியர்களுக்கு முகவரி கொடுத்த தோட்டங்கள் அன்று அதிகமாக இருந்தது. இந்தியர்கள் என்றாலே அவர்கள் தோட்டப்புறங்களில் தான் அதிகமாக வாழ்ந்து வந்தார்கள்.
ஒரே வட்டத்திற்குள் அனைவரும் தோட்டத்தில் பால் மரம் (Rubber Tipper) வேலை செய்து வந்தனர். ஏற்றத்தாழ்வு ஏதுமின்றி அனைவரும் தங்களின் சுய அடையாளம் மறந்து சகோதரத்துவத்துடன் பழகி வந்தனர். மலேசியா முழுவதும் தோட்டங்களாகவும், பால் மரக் காடுகளாகவும் இருந்தன.
இரப்பர் (Rubber) விலை நன்றாக இருந்த காலத்தில் அதன் விலைப் பருவம் சற்று குறையத் தொடங்கியதும் எனும் ரூபத்தில் தோட்டங்களை சிறு சிறு பகுதிகளாக விற்கத் தொடங்கினர்.
தோட்டங்களே இந்தியத் தொழிலாளர்களின் உயிர் நாடியாக இருந்த தருணத்தில் இவ்வாறான நிலை ஏற்பட்டபோது, இந்தியர்கள் என்ன செய்வது என்று அறியாது தவித்து நின்றனர்.
அதனை பார்த்து மனம் வேதனைப்பட்ட துன் வீ.தி. சம்பந்தன் அவர்கள் 14 /5/1960ஆம் ஆண்டில் தோற்றுவித்ததுதான் (NLFCS) தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம்.(NLFCS) 'குருவிக்கும் கூடு உண்டு, உழைக்கும் சமுதாயத்திற்கு என்ன உண்டு' தோட்டத் தொழிலாளர்களும் முதலாளி ஆகலாம் என தோட்டங்கள்தோறும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டவர்,
'பத்து வெள்ளி கொடுங்கள், தோட்டங்களை வாங்கலாம்' என்று கூறி தோட்டப் பாட்டாளி மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி தோட்டங்களை வாங்கினார்.
அதோடு அப்போது எந்தவொரு வசதியும் இல்லாத நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஒருவரை நியமித்து, அவர் மூலமாக கூட்டுறவுக்கான பணத்தைத் திரட்டிக் கொடுத்த, அந்த உண்மையான தோட்டப் பட்டாளி மதிப்பு மிக்க பொது நலவாதியாகவும் நேர்மை வாதியாகவும் இருந்துள்ளது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
இவற்றுக்கெல்லாம் முக்கியப் புள்ளியாக, சமூகவாதியாக தோட்ட மக்களின் சேவகனாக துன் வீ.தி. சம்பந்தன் திகழ்ந்தார்.
மக்களும் அவர் மீது நம்பிக்கை வைத்து, பத்து பத்து வெள்ளியாக வழங்க முன் வந்தனர்.
எங்கெல்லாம் தோட்டங்கள் துண்டாடப்படுகிறதோ அவற்றை எல்லாம் வாங்க முற்பட்டார்.
'கார்கள் நுழையாத தோட்டங்களிலும் துன் சம்பந்தனின் கால்கள் நுழைந்தன என்றும், மக்களைச் சந்தித்து கூட்டுறவு சங்கத்திற்கு நிதி திரட்டினார்’ என்ற பெயரையும் துன் சம்பந்தன் பதித்தார் என்கிற வரலாறும் பதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மளமளவென 19 தோட்டங்களை தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம் வாங்குவதற்கு வழி அமைத்துக் கொடுத்தார்.
அவ்வாறு வாங்கிய தோட்டங்களில் மேலாளராக (Manager- Clark) இந்தியர்களே பணியில் அமர்ந்தனர்.
தோட்டத்தில் உழைக்கும் தொழிலாளர்களுக்கே முன்னுரிமை என்பது போல் தோட்டப் பட்டாளிகளுக்கு வீட்டுடமைத் திட்டத்தை அமல்படுத்தி, அதை நடைமுறைப் படுத்தியதும் தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம் என ஒவ்வொரு இந்தியரும் நெஞ்சை நிமிர்த்தி, மார்பு தட்டிச் சொல்ல வைத்தது.
கூட்டுறவு சங்கம் வாங்கியத் தோட்டங்களில், தமிழ்ப்பள்ளிகளும், ஆலயங்களும் அதே இடத்தில் நிலைப் பெற்று நிற்பது நாம் பெருமைப்பட வேண்டிய அம்சங்களாகும்.
அந்த முதலாவது தோட்டத் தொழிலாளர் வீட்டுடமைத் திட்டத்தை டோவன்பி தோட்டத்தில் அறிமுகப்படுத்தி வைத்தனர். அதே போல் பல்வேறு தோட்டங்களில் அறிமுகப்படுத்தி இருந்தாலும், சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ரிஞ்சிங் தோட்டத்தை நகரமயமாக்கியதில் (Bandar Rinching) சிரம்பான் தோட்டத்தை Bandar Seremban 2 என்று மாற்றியதும், தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் சாதனை என்றே கூற வேண்டும்.
85,000 சங்கத்தின் உறுப்பினர்கள் இருந்த நிலையில் தற்போது 66 ஆயிரம் உறுப்பினர்களுக்கு லாப ஈவு வழங்குவது, சங்கத்தின் உறுப்பினர் பிள்ளைகளுக்கு கல்வி உதவி நிதி, தீரதாத நோயில் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி, கண் அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி, 60 வயதிற்கும் மேற்பட்டவருக்கு மாதாந்திர உதவி நிதி, மரண சகாய நிதி, சோமா மொழி இலக்கிய அறவாரித்தின் வருடாந்திர இலக்கிய போட்டிகள், உலக எழுத்தாளர்களின் நாவல் போட்டிகள் என ஏற்பாடு செய்து வருவதோடு பல சமூக மனித நேய உதவிகளை செய்வது பாராட்டுக்குறியது.
அன்றையக் காலகட்டத்தில் அனைவரும் துன் வீ்.தி. சம்பந்தன் என்ற ஒரு தனி மனிதரின் தலைமையிலான ஒரே அணியில் நின்று தோட்டங்களை வாங்குவதற்கு ஆதரவு கரம் கொடுத்த தோட்டப் பாட்டாளிகளின் ஒற்றுமைக்கு தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கமே சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது.
இன்று தலைநகர் ஜாலான் சுல்தான் சுலைமான் சாலையில் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறது விஸ்மா துன் சம்பந்தன்.
அன்று கூட்டுறவுத் தந்தை என்று போற்றிப் புகழப்பட்ட துன் வீ.தி. சம்பந்தன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், பத்து பத்து வெள்ளியாய் தோட்டப்பட்டாளி மக்களிடையே திரட்டிய நிதி இன்று ஆலமரமாய் வேரூன்றி நின்று பலருக்கும், பல்வேறு விதமான உதவிகளை வழங்கி வருவதை யாராலும் மறுக்க முடியாது.
ஐந்தாவது மஇகா தேசியத் தலைவராக பொறுப்பு ஏற்றப் பிறகு 1955ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் பேராக் கிந்தா, அதன் பிறகு சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று, தபால் தந்தித்துறை, சுகாதாரத் துறை, தொழிலாளர் அமைச்சு, ஒற்றுமைத் துறை அமைச்சாரகவும் பணியாற்றினார்.
அதேவேளை, மஇகா தேசியத் தலைவராக 18 ஆண்டு காலம் பதவி வகித்த போது மஇகாவின் 7 மாடி கட்டடத்தை 1969 ஆம் ஆண்டில் நிறுவினார்.
இலண்டன் சென்று மலாயா நாட்டின் சுதந்திரப் பிரகடனத்தில் இந்தியர்களின் பிரதிநிதியாகக் கையெழுத்திட்டார்.
மலாயா நாட்டின் பிரதமராகவும் ஒரு நாள் பதவி வகித்தார்.
தலைநகர், பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா பகுதியில், ஜாலான் துன் சம்பந்தன் 1,2,3, என்ற சாலைகளும, துன் சம்பந்தன் மோனோ ரயில் நிறுத்தமும் உள்ளன. அது மட்டுமன்றி, மோனோ ரயில் ஒவ்வொரு நாளும் அவரின் பெயரை உச்சரிப்பைச் செய்கிறது. சுபாங் ஜெயாவில் தேசிய வகை துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியும் அவர் பெயரில் இயங்கி வருகிறது.
தம் வாழ்நாள் முழுவதும் வெள்ளை நிற வேட்டி, ஜிப்பா அணிந்தே நமது பாரம்பரிய அடையாளத்தை வெளிப்படுத்தினார். எந்தவொரு ஆடம்பரமோ விலை உயர்ந்த காரிலோ துன் சம்பந்தன் அவர்கள் பவனி வராமல் நடுத்தரமான வாழ்க்கை வாழ்ந்தது, அவர் அடக்கத்தின் உச்சமாய், மனிதருள் மாணிக்கமாய், பண்பையும் ஒழுக்க நெறியை கடைபிடித்து வாழ்ந்தார் என்பதை இந்த நாடே அறியும்.
இதய நோய் காரணமாக 18-5-1979 ஆம் ஆண்டு தனது 59 வயதில் மறைந்தார்.
மண்ணில் மறைந்தாலும் மக்களின் மனங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் கூட்டுறவுத் தந்தை துன் வீ.தி சம்பந்தன்.
- திருமதி
மு.ப. விக்னேஸ்வரி தனசேகர் பாண்டார் செமினி, சிலாங்கூர்.
www.myvelicham.com / Face book / Tik Tok / You Tube /.Intg / Linkendin / Google