வீடுகளில் தோட்டம் வளர்க்க இலவச விதைகள்

0
118

தோட்டக்கலை ஆர்வலர்களுக்கான சமூகத் தோட்டங்களின் எண்ணிக்கை வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக அதிகரிக்க உள்ளது.

தற்போதுள்ள 1,500 சமூகத் தோட்டங்களை 3,000 ஆக அதிகரிக்கவும் மேலும் தோட்டங்களுக்காக 3,000 இடங்களை ஒதுக்கவும் தேசிய பூங்காக் கழகம் இலக்குக் கொண்டுள்ளது. இது தற்போதைய எண்ணிக்கையிலிருந்து மூன்று மடங்கு அதிகமாகும்.

கொவிட்-19 கிருமிப் பரவல் நிலைமை மேம்பட்டவுடன் புதிய தோட்ட உருவாக்கம் தொடங்கும்.

அதேநேரத்தில் வீடுகளில் காய்கறிகளை வளர்க்கவும் பொதுமக்களை தேசிய பூங்காக் கழகம் ஊக்குவிக்கிறது. அதன்பொருட்டு, கீரை, பழங்கள், காய்கறி விதைகளை இலவசமாக விநியோகிக்கும் திட்டத்தை நேற்றுத் தொடங்கியது.

விதைகள் தேவைப்படுவோர் தேசிய பூங்காக் கழகத்தின் https://www.nparks.gov.sg/gardening/gardening-with-edibles என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது ஜூன் 18 முதல் ஜூன் 30 வரை 6499 1099 என்ற எண்ணில் அழைக்கலாம்.

ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் விதைகள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

“உண்ணும் உணவுக்குத் தோட்டம்” என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம், 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் ஊட்டச்சத்து தேவைகளில் 30 விழுக்காட்டை உற்பத்தி செய்யும் “30க்கு 30” எனும் இலக்கை ஆதரிக்கிறது.

சிங்கப்பூர் தற்போது அதன் உணவு விநியோகத்தில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கிறது.

இந்தத் திட்டத்திற்கு டிபிஎஸ் வங்கியும் சிங்கப்பூர் பந்தயப் பிடிப்பு வாரியமும் ஆதரிக்கின்றன.

“கொவிட்-19 சூழ்நிலையில் சிங்கப்பூரின் உணவு விநியோகத்தில் இடையூறு ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளூர் உணவுப் பண்ணைகளின் முக்கியத்துவத்தையும் உள்ளூரில் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் சமூகத்தின் தாக்குப்பிடிக்கும் தன்மையை அதிகரிப்பதற்குமான நமது உத்திபூர்வத் திட்டத்தில் இது ஒரு பகுதி என்று தேசிய வளர்ச்சிக்கான இரண்டாவது அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று தெரிவித்தார்.

கீரை, பழம், காய்கறி விதைகள் அடங்கிய இந்த பாக்கெட்டுகளின் நான்கு மொழிகளிலும் விதைகளை நட்டு வளர்ப்பது பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். விதைகளைத் தேர்வு செய்து பெற முடியாது.

சீன முட்டைக்கோஸ், கங் கோங், தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், பயிற்றங்காய், வெள்ளரிக்காய் விதைகள் அவற்றில் அடங்கும். இச்செடிகள் வளர நான்கு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும்.

Your Comments