இந்தியச் சமூகத் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு

PM meets indian community leaders

இந்தியச் சமூகத் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு
இந்தியச் சமூகத் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு

கோலாலம்பூர், ஜூன் 16-

 ஒற்றுமை அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கும் இந்திய
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூகத் தலைவர்களை பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று இங்குள்ள நாடாளுமன்றக்
கட்டிடத்தில் சந்தித்தார்.

இந்நாட்டில் இந்தியச் சமூகம் உள்ளிட்ட தரப்பினரிடம் காணப்படும் மிகவும் வறிய  நிலையைக் களைவதற்கு அரசாங்கம் விரும்புகிறது என்றத் தகவலைப் பிரதமர் இச்சந்திப்பின் போது எடுத்துரைத்ததாக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சர் கே.சரஸ்வதி கூறினார்.

பரம ஏழ்மை நிலையைக் அகற்றுவதற்கான முயற்சிகளில் கவனம்
செலுத்தும் அதே வேளையில் அனைத்து தரப்பினருக்கும் சமநிலையான
வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற மடாணி அரசாங்கத்தின்
நோக்கத்திற்கேற்ப இந்தியச் சமூகத்தின் நலனிலும் கவனம்
செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டதாக அவர் சொன்னார்.

நாட்டின் மேம்பாட்டு அலையில் யாரும் விடுபடக்கூடாது என்பதே
பிரதமரின் கருத்தாக இருந்தது என்று இச்சந்திப்புக்குப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ
எம்.சரவணன், ஜசெக உதவித் தலைவர் எம்.குலசேகரன், பத்து
நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், செனட்டர் நெல்சன் ரெங்கநாதன், செனட்டர் சி.சிவராஜ், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் சிறப்பு பணிக்குழு தலைவருமான டத்தோ ஆர்.ரமணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதனிடையே, இச்செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரமணன், இந்திய
சமூகத்தின் நலன்களை நீண்ட கால அடிப்படையில் காக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியச் சமூகத்தின் எதிர்கால இலக்கு மீதான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றத் தகவலைப் பிரதமர் இச்சந்திப்பின் போது வெளியிட்டதாகத் தெரிவித்தார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு நீடித்த இந்த சந்திப்பின் போது பிரதமர்
விரிவான தகவல்களை வழங்கியதோடு இந்தியச் சமூகத் தலைவர்கள்
மீதான தனது எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினார். இக்கூட்டத்தில் மித்ரா விவகாரமும் எழுப்பப்பட்டது. இது குறித்து நாங்கள் தெளிவான
விளக்கத்தைக் கூறி பிரதமரிடம் அறிக்கையையும் சமர்ப்பித்தோம் என்றார் அவர்.

இந்திய சமூகம் தொடர்பில் சமூகத் தலைவர்கள் முன்வைத்த
கருத்துகளைப் பிரதமர் கேட்டறிந்ததோடு கல்வி, வறுமை, அடையாளப்
பத்திரப் பிரச்சனை மற்றும் சமூக நடவடிக்கைத் திட்டம் குறித்தும்
விவாதித்தார் என ரமணன் விளக்கினார்.