கோலாலம்பூரில் வர்த்தகத்தை அந்நியர்களிடம் ஒப்படைக்கும் வணிகர்களின் லைசென்ஸ் பறிமுதல்- பிரதமர் எச்சரிக்கை
Pm warns of confiscation of licenses of businessmen who hand over business to foreigners in Kuala Lumpur
கோலாலம்பூர்,15 ஜூன் 2023
தங்கள் வர்த்தகத்தைப் பிறரிடம் குறிப்பாக அந்நிய
நாட்டினரிடம் ஒப்படைக்கும் அங்காடி வியாபாரிகளின் உரிமங்களைக்
கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டி.பி.கே.எல்.) பறிமுதல் செய்யும் என்று
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு வணிகர்கள் பயன் பெறுவதற்கு ஏதுவாக இந்த விதிமுறை
முறையாகக் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான வழிவகைகளை மாநகர் மன்றமும் தமது தரப்பும் கண்டறிந்து வருவதாக பிரதமர் சொன்னார்.
உள்நாட்டு வணிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள லைசென்ஸ் முறையாகப்
பயன்படுத்தப்படுவதையும் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வது தொடர்பில் மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டார் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நான் பேச்சு நடத்தினேன். அவர்கள் (வணிகர்கள்) தங்கள் உரிமத்தைப் பிறரிடம் ஒப்படைத்தால் அதனை நாங்கள் பறிமுதல் செய்வோம் என்றார் அவர்.
இங்குள்ள ஜாலான் தெங்கு அப்துல் ரஹ்மான் சாலையிலுள்ள மடாணி
அங்காடி வியாபார மையத்தில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பு
நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, மக்களின் நலன் கருதி சிறு வணிக மையங்கள் உள்பட
மாநகரின் தோற்றம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில்
தாம் கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டையும் பிரதமர் மீண்டும்
வலியுறுத்தினார்.
பல இடங்களில் வடிகால்கள், நீரோடைகள் மற்றும் கூரைகளைச்
சீரமைக்கும் பணியை இவ்வாண்டில் விரைந்து மேற்கொள்வோம் என்று
அவர் மேலும் சொன்னார்.