இனவெறியை தூண்டும் அறிவிப்பு அட்டையை ஒட்டிய சோள விற்பனையாளர் மீது காவல் துறையில் புகார்

Police complaint filed against corn seller for pasting racist placard

இனவெறியை தூண்டும் அறிவிப்பு அட்டையை ஒட்டிய சோள விற்பனையாளர் மீது காவல் துறையில் புகார்
இனவெறியை தூண்டும் அறிவிப்பு அட்டையை ஒட்டிய சோள விற்பனையாளர் மீது காவல் துறையில் புகார்

Date :17 Feb 2025 News By:Maniventhan 

சிப்பாங் கோத்தா வாரிசானில் சோள விற்பனை வியாபாரி ஒருவர் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு சோளம் விற்பனைக்கு இல்லை என்று இனவெறியை தூண்டும் வகையில் அட்டையில் அறிவிப்பு வாசகத்தை ஒட்டிய சோள வியாபாரி மீது சிப்பாங் தொகுதி ம.இ.கா. இளைஞர் பகுதியினர் காவல் துறையில் புகார் செய்துள்ளனர்.

இது குறித்து விளக்கமளித்த ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினரும், சிப்பாங் தொகுதி ம.இ.கா. வின் நிரந்தரத் தலைவருமான டத்தோ வே.குணாளன்   இனவெறி வாசகத்தை வைத்த சம்பந்தப்பட்ட வியாபாரியின் செயலை சிப்பாங் ம.இ.கா. கடுமையாக கண்டிப்பதாகவும் இது ருக்குன் நெகாராவின் கோட்பாட்டு கொள்கைகளுக்கு எதிராக உள்ளதோடு மலேசியாவின் சமூக ஒற்றுமைக்கு எதிராகவும் உள்ளதாக அவர் கூறினார்.

மலேசியா பல்வேறு இனங்கள் கலாச்சாரங்களை கொண்ட ஒரு நாடாகும் ஒவ்வொரு இனத்தவரும் மற்ற சமூகங்களையும் கலாச்சாரங்களையும் மதிக்க வேண்டும். இதுவே நமது நாட்டை உலகில் மதிப்புமிக்க ஒன்றாக காட்டுவதோடு நாட்டின் மிகப் பெரிய சொத்தாகவும் கருதப்படுகிறது.

அமைச்சரவையும், அரசியல் கட்சிகளும் இது போன்ற  இனவாத மற்றும் தீவிரவாத போக்கை ஒரு மனதாக கண்டிக்கிறது. ஏனெனில் இது இந்த நாட்டில் இன ஒற்றுமையை பாதிக்கும்" என்று அவர் குறிப்பிட்டார்.

சிப்பாங் கோத்தா வாரிசானில் சோளத்தை விற்கப் பயன்படுத்தப்படும் மேஜையில் சம்பந்தப்பட்ட  வியாபாரி இனவெறி அறிவிப்பை வைத்ததைக் அடுத்து இந்தக் காணொலி  பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

அக்காணொலியில்  சம்பந்தப்பட்ட அந்த வியாபாரி "மன்னிக்கவும், இந்த சோளம் கிலிங் மக்களுக்கு விற்பனைக்கு இல்லை." என்ற அறிவிப்பை வைத்திருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இந்தியப் பெண் ஒருவரால் அக்காணொலி  பதிவு செய்யப்பட்டு பகிரப்பட்டது. கிலிங்' என்ற வார்த்தை இந்திய சமூகத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் இழிவான வார்த்தையாகும்.

இதற்கிடையில், தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங், ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நாட்டில் இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்தவொரு செயலையும் அல்லது அறிக்கையையும் ஏற்றுக்கொள்ளவோ ​​அல்லது சமரசம் செய்யவோ முடியாது.

பல இனங்களைக் கொண்ட மலேசியர்கள், எந்தத் தரப்பினரின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் எந்த அறிக்கைகளையும் செயல்களையும் அனுமதிக்க முடியாது என்றும் நாம் எப்போதும் நல்வாழ்வையும் அமைதியையும் கவனித்துக் கொள்ளவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற ஆரோன் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் ருக்குன் நெகாராவை ஒரு வாழ்க்கை முறையாக, குறிப்பாக 'கண்ணியம் மற்றும் ஒழுக்கம்' என்ற கொள்கையை நிலைநிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இதனிடையே இந்தப் சம்பவத்தை ம.இ.கா. மிகக் கடுமையாக கருதுவதாகவும் சம்பந்தப்பட்ட சோள வியாபாரி இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் டத்தோ குணாளன் கேட்டுக் கொண்டார்.