தவறான தகவலுடன் வருமானவரி கணக்குத் தாக்கல்: $25,000 அபராதம்; $955,580 செலுத்தும்படியும் உத்தரவு

0
81

நிறுவன வருமான வரி கணக்கை தாக்கல் செய்தபோது இயக்குநர்களின் கட்டணமாக சரியில்லாத செலவினங்களைத் தெரிவித்ததற்காக நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாட்டு இயக்குநருக்கு $25,000 அபராதம் விதிக்கப்பட்டது. $955,580 தண்டத்தொகை செலுத்துமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.

டான் ஹுவா லுக், 75, என்ற அந்த இயக்குநர், ஹுவா லுக் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்தபோது நியாயமான காரணமின்றி சரியில்லாத தகவல்களைத் தெரிவித்ததாகக் கூறும் குற்றச்சாட்டை எதிர்நோக்கினார்.

இதனால் 1995க்கும் 2007க்கும் இடையில் $763,285 மொத்த வரித்தொகை குறைத்துக் காட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தான் தாக்கல் செய்த வரிக் கணக்கில் அந்த நிறுவனம் 1995க்கும் 2007க்கும் இடையில் இயக்குநர்களுக்கான கட்டணம் மொத்தம் $3,386,000 என்று தெரிவித்தது.

சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம், 2012க்கும் 2013க்கும் இடையில் கணக்குகளைத் தணிக்கை செய்தபோது, இயக்குநர்களுக்குக் கொடுக்கப்பட்ட தொகை, 2006 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் நான்கு இயக்குநர்களுக்கு இரண்டு தவணையாகக் கொடுக்கப்பட்டது என்று டான் தெரிவித்து இருந்தார்.

இதற்கு ஆதாரமாக அவர் பட்டுவாடா ரசீதுகள், வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை ஆணையத்திடம் தாக்கல் செய்தார்.

ஆனால் இயக்குநர்கள் அப்படி தொகையைப் பெறவில்லை என்பதும் அந்தத் தொகையைப் பெற்றவர் டான்தான் என்பதும் ஆணையம் நடத்திய புலன்விசாரணை மூலம் தெரியவந்தது.

அந்தத் தொகை கடைசியில் மீண்டும் ஹுவா லுக் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தின் கணக்கிற்கே திரும்பியது.

டான் தொடக்கத்தில் 13 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார். ஆனால் ஐந்து குற்றச்சாட்டுகளின் பேரில் மட்டுமே வழக்கு தொடுக்கப்பட்டது.

எஞ்சிய குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்பட்டபோது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

Your Comments