அதிபர் தேர்தல்; போதுமான ஆதரவை பெற்றார் கமலா ஹாரிஸ்!
Presidential election; Kamala Harris got enough support!
News By : Jayarathan
21 August 2024 - இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளதாக இருந்தது. இத்தகைய சூழலில் தான் அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து விலகுகிறேன். மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். மிஞ்சியிருக்கும் தனது பதவிக் காலம் முழுவதும் அதிபராக எனது கடமைகளை நிறைவேற்றுவேன். இதுவே எனது கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது என நம்புகிறேன்” என அறிக்கை வாயிலாக ஜோ பைடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான போதுமான ஆதரவைக் கட்சி நிர்வாகிகளிடம் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.
இதற்கான ஆதரவைப் பெறுவதற்கான வாக்குப்பதிவு தொடங்கிய 2வது நாளிலேயே கட்சி நிர்வாகிகளிடம் இருந்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். 5 நாட்கள் நடக்கும் இந்த வாக்குப்பதிவில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வாக்களிக்க உள்ளனர். ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகத் தேர்வாக 2 ஆயிரத்து 370 வாக்குகளைப் பெற வேண்டியது அவசியமாகும். இருப்பினும் அதற்கும் அதிகமான வாக்குகளைக் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளதாக அக்கட்சியின் தேசியக் குழு தலைவர் ஜேம் ஹாரிசன் அறிவித்துள்ளார்.