ஜூக்ரா பண்டார் இந்து மயானத்தில் 41 லட்சம் ரிங்கிட் மின் தகனம்
RM4.1 million electrocuted at Jugra Bandar Hindu Cemetery
News By:M.S Maniam Date :14 Jan 2025
பந்திங் ஜன 14
பந்திங் ஜாலான் செர்டாங் பெலாவில் அமைந்திருக்கும் முக்கிம் ஜூக்ரா பண்டார் இந்து மயானத்தில் 41 லட்சம் ரிங்கிட் செலவில் மின் தகன மைய கட்டுமானப் பணி நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
நேற்று இந்த மயானத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மின் தகன மைய கட்டுமானப் பணிக்கான அதிகாரப்பூர்வ அனுமதி கடிதத்தை அதன் குத்தகையாளரிடம் கோலலங்காட் நகராண்மைக் கழக துணைத் தலைவர் கைருல் அசாம் பின் சரோனி வழங்கினார்.
ஆறு ஏக்கர் நிலப்பரப்பை கொண்டிருக்கும் முக்கிம் ஜூக்ரா பண்டார் இந்து மயானத்தில் ஒரு ஏக்கரில் இத்திட்டம் அமையவிருக்கிறது. கோலலங்காட் நகராண்மைக் கழகத்தால் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த திட்டம் அமையவிருப்பதாகவும் இதில் சிறிய மண்டபம், பொது கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகளை இது கொண்டிருக்கும். மேலும் பிதேதங்களை தகனம் செய்வதற்கு மூன்று இயந்திரங்களை பொருத்தப்படவிருப்பதாகவும் இதில் இரண்டு இயந்திரங்கள் தினசரி இயங்கும் அதே வேளையில் இன்னொரு தகன இயந்திரம் தயார் நிலையில் வைக்கப்படும் என்று கைருல் அசாம் குறிப்பிட்டார்.
முதல் கட்டமாக மின் தகன மையம் அமையவிருக்கும் இடத்தை தூய்மை படுத்தும் பணி உடனடியாக தொடங்கும். இதற்கடுத்து மாநில மந்திரி தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என்றும் 2026 ஆண்டு ஜூன் மாத வாக்கில் இத்திட்டம் பூர்த்தியடையும் என்று அவர் கூறினார். கோலலங்காட் மக்கள் பிரேதங்களை தகனம் செய்வதற்கு தற்போது கிள்ளான், சிப்பாங் போன்ற இடங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. கோலலங்காட்டில் முதன் முதலாக அமைய இந்த திட்டம் பூர்த்தியடையும் போது இவ் வட்டார மக்களின் தேவைகளை நிறைவு செய்ததாக அது அமையும் என்று கைருல் அசாம் பின் சரோனி கூறினார்.
மேலும் இத்திட்டம் பூர்த்தியடைந்ததும் அதன் நிர்வாகத்தை கோலலங்காட் நாகராண்மைக் கழகம் ஏற்றுக் கொள்ளும் என்றும் அதன் பணியாளர்களை நகராண்மைக் கழகமே தேர்வு செய்து பணியில் அமர்த்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே இத்திட்டம் குறித்து கருத்துரைத்த முக்கிம் ஜூக்ரா பண்டார் இந்து மயான சங்கத்தின் தலைவர் டத்தோ வீ.சுந்தர்ராஜூ நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கோலலங்காட்டில் இந்த மயானத்தில் மின் தகன மையம் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்தை நடைமுறை படுத்துவதற்கு மாநில அரசுக்கும் கோலலங்காட் நகராண்மைக் கழகத்திற்கம் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
www.myvelicham.com / Faca book / X / You Tube / Tik Tok / Google