மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையில் சிலாங்கூரை தக்க வைத்துக் கொள்ள முடியும்- அமிருடின்
Selangor can be retained by a two-thirds majority: Amiruddin
ஷா ஆலம்,20 June 2023
வரும் மாநிலத் தேர்தலில் குறைந்த பட்சம்
மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மை இடங்களை பக்கத்தான்
ஹராப்பான் மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகள் பெற
முடியும் எனத் தாம் நம்புவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கூறினார்.
மாநிலத்திலுள்ள 56 தொகுதிகளில் 50 மேற்பட்ட இடங்களை ஆளும்
கூட்டணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தமது ஐந்தாண்டுக்
காலத் தவணையின் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி நடத்திய சிறப்பு
செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
வெற்றியைத் தீர்மானிக்கும் துருப்புச் சீட்டாக விளங்குபவர்கள்
வாக்காளர்களே. இருந்த போதிலும் வெற்றி பெற முடியும் என்ற
நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இதற்கான வியூகங்கள் குறித்து பக்கத்தான்
தலைவர்கள் ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகளுடன்
அடுத்த சில தினங்களில் விவாதிக்கவுள்ளோம் என அவர் சொன்னார்.
புதிய பங்காளிகளுடன் கடந்த 2018ஆம் ஆண்டு அடைவு நிலையை
மீண்டும் பிரதிபலிக்க முடியும் என்பதோடு வரும் தேர்தலில் 50க்கும்
மேற்பட்ட இடங்களைப் பிடிக்க இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.
தனது தலைமையிலான நிர்வாகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆற்றிய
சேவைகளின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை தாம்
வெளிப்படுத்துவதாகச் சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினருமான அவர்
தெரிவித்தார்.