பத்துமலை தைப்பூசத்தில் சிலாங்கூர் மாநில ஆலயங்களுக்கு மானியம்
Selangor grants to temples in Batu Hills Thaipusam
Date :06 Feb 2025 News BY : Venthen
வரும் 11-2-2025 செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பத்துமலையில் சிலாங்கூர் மாநில ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு தெரிவித்தார்.
தைப்பூச முதல் 10-2-2025 திங்கட்கிழமை மாலை 6.00 மணியளவில் பத்துமலை நுழைவாயிலுக்கு முன்புறம் உள்ள மேம்பாலத்தின் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்.
சிறப்பு கலை நிகழ்ச்சியுடன் இது தொடங்கும் என்றும் மானியம் பெறுவதற்காக அழைக்கப்பட்ட ஆலய பொறுப்பாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் இங்கு வருகை புரிந்து அதன் ஏற்பாட்டாளர்களிடம் தங்கள் விவரங்களை பதிந்து கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதனையடுத்து இதே நாளில் 10-2-2025 திங்கட்கிழமை இரவு 8.00 முதல் கெர்லிங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அதன் சுற்று வட்டார ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும். எனவே இங்குள்ள அழைப்பட்ட ஆலய பொறுப்பாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் இங்கு வந்து தங்களை பதிந்து கொண்டு மானியங்கள் பெற்றுக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து தைப்பூச திருவிழா நடைபெறும் நாளான 11-2-2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி முதல் கோலசிலாங்கூர் 2 1/2 மைல் ஸ்ரீ சுப்பிரமணியர் சிறப்பு கலை நிகழ்ச்சியில் இங்குள்ள வட்டார ஆலயங்களுக்கு மானியங்கள் வழங்கப்படும் எனவே இதன் சுற்று வட்டார அழைப்பட்ட ஆலயப் பொறுப்பாளர்கள் இவ்வாலயத்திற்கு குறித்த நேரத்தில் வந்து அதன் பொறுப்பாளர்களிடம் தங்களை பதிந்து கொண்டு மானியங்களை பெற்றுச் செல்லலாம்
.
இம்முறை பத்துமலையில் 45 ஆலயங்களுக்கும், கெர்லிங்கில் நான்கு ஆலயங்களுக்கும், கோலசிலாங்கூரில் 12 ஆலயங்களுக்கும் மானியம் வழங்கப்படும் என்றும் ஆலயப் பொறுப்பாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து சேரும் அதே வேளையில் ஆலயப் பொறுப்பாளர்கள் தங்கள் ஆலயத்தின் அதிகாரப்பூர்வ ரப்பர் முத்திரையை கொண்டு வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில் பத்துமலை தைப்பூச திருவிழாவிலும் நாடு முழுவதிலும் நடைபெறும் தைப்பூச திருவிழாக்களிலும் கலந்து கொள்ளும் பக்தர்களும், பொது மக்களும் தங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பாக குழந்தைகளுடன் செல்லும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பாப்பா ராய்டு தைப்பூச திருவிழாவிற்கு ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்களும் பொது மக்களும் தூய்மையை பேண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனிடையே 10-2-2025 திங்கட்கிழமை தைப்பூச முதல் நாளில் பத்துமலையிலும், கெர்லிங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திலும் நடைபெறவிருக்கும் மானியம் வழங்கும் நிகழ்ச்சியில் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொள்வார்கள் என்றும் தொடர்ந்து 11-2-2025 செவ்வாய்க்கிழமை தைப்பூச திருவிழா அன்று கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் மானியம் வழங்கும் நிகழ்ச்சியில் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு கலந்து கொள்வார் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.