பிரான்சுடன் மோதப் போவது யார்? இங்கிலாந்தா? குரோஷியாவா?

0
199

பிரான்சுடன் மோதப் போவது யார்? இங்கிலாந்தா? குரோஷியாவா?

மாஸ்கோ, ஜூலை.11- இங்குள்ள செய்ண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடந்த உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல்கணக்கில் பலம் பொருந்திய பெல்ஜியம் குழு வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றது பிரான்ஸ்.

இந்த வெற்றியால் பிரான்ஸ் முழுவதும் ரசிகர்கள் உற்சாகமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த 1998ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற நாடான பிரான்ஸ், அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டில் உலகக் கிண்ண இறுதி ஆட்டத்திற்குத் தேர்வு பெற்று, இத்தாலிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் தோல்வி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இளைய ஆட்டக்காரகளைக் கொண்ட பிரான்ஸ் அணி, இருதிப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளது. பெல்ஜியத்திற்கு எதிரான ஆட்டத்தில் பெரும்பாலான நேரம் பிரான்ஸ் ஆட்டக்காரர்கள் தற்காப்பிலேயே கவனம் செலுத்தினர்.

முற்பகுதி ஆட்டத்தில் இரண்டு குழுக்களுமே சமநிலையில் இருந்தன. பிற்பகுதி ஆட்டம் தொடங்கிய பின்னர் பெல்ஜியம் நெருக்குதலைக் கடுமையாக்கியது. எனினும், அதிர்ஷ்டக் காற்று பிரான்சின் பக்கமே வீசியது. ஆட்டத்தின் 55 ஆவது நிமிடத்தில் பிரான்சின் தற்காப்பு ஆட்டக்காரர்  சாம்வெல் உம்டிடி ஒரு கோலை அடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆட்டத்தைச் சமமாக்க பெல்ஜியம் மேற்கொண்ட பகீரத முயற்சிகள் அனைத்தையும் கடைசி வரையில் பிரான்ஸ் முறியடித்து வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டது. அடுத்து இன்று பின்னிரவு 2 மணியளவில் இங்கிலாந்துக்கும் குரோஷியாவுக்கும் இடையே நடக்கவிருக்கும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் குழுவுடன் பிரான்ஸ் இறுதி ஆட்டத்தில் மோதவிருக்கிறது.

Your Comments