பெண்ணியம் பேசு மனனேதாடு ஒரு பெண்களின் மனக்கீறல்கள்

Talk about feminism A Woman's Resentment

பெண்ணியம் பேசு மனனேதாடு ஒரு பெண்களின் மனக்கீறல்கள்

29 March 2025  News By :Punithai Perumal 

ஓர் அன்னைக்கும் – தந்தைக்கும் பெண்ணாகப் பிறந்து – செல்லமாக – கண்ணிமைப்போல வளர்த்து – அவள் மழலையர் பள்ளிக்குச் செல்லும் காலக்கட்டத்தில், அவளது உறவுகள் உடன் பிறப்புகளாக விரிகின்றன. பள்ளிப்பருவம் முடித்த பின்னர் – பணமிருந்தால் உயர்க்கல்வி – பணம் இல்லையேல் அவளுக்கென்று ஒரு காத்திருக்கிறது வேலை ஒன்று. வேலையிலும் சேருகிறாள் – பணமும் ஈட்டுகிறாள். – அன்னை தந்தையை, அக்கா, தங்கை, தம்பிகளை காத்து நிற்கிறாள்.

அவளுக்கென்று ஒரு மணநாள் வருகிறது. அந்த நாள்தான் அவளது தலைவிதியும் நிர்ணயிக்கப்படுகிறது.. வாழ்க்கை சுகமாகச் செல்லுமா...? அல்லது சோகமாகச் செல்லுமா...? அல்லது சுமையாகச் செல்லுமா...? என்று.

எது எவ்வாறாக இருப்பினும்,     ஒரு பெண்ணின் மனம் ஆழமானது – அகலமானது. இன்பமோ – துன்பமோ எதனையும் தூக்கி நிறுத்தும் ஒரு காவியமாக அவள் அந்த வீட்டில் வாழ்கிறாள் காண்கிறாள். இந்த நிலையில் ஒரிரு குழந்தைகளுக்கும் தாயாகிறாள். கணவரின் பாதையில் மாற்றம் – கண்டிக்கிறாள் – அவன் கண்டும் காணாமல் போகிறான் – வேதனை நெஞ்சை அழுத்துகிறது – கண்ணீர் கொட்டுகிறது – அப்பொழுதும் அவன் கண்டுக் கொள்ளவில்லை. வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருக்கிறது எண்ணற்ற      துயரங்களோடு! என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறாள்! விண்ணை முட்டும் அளவுக்கு சோகக் கீறல்கள். 

சரி! கணவன் நல்லனாக – கெட்டவனாக இருந்தாலும், பிள்ளைகளின் தேவைகளை முழுமையாக பூர்த்திச் செய்ய இயலாமல் இருந்தாலும்கூட, அதனையெல்லாம் ஒரு தவமாகக் கொண்டு, குடும்பத்தின் சுமையை சுகமாக  சுமந்து வழி நெடுக நடக்கிறாள். வாழ்வில் மேடுகளையும், பள்ளங்களையும் கடந்து பார்க்கிறாள். எங்கேயாவது ஓரிடத்தில் அவன் திருந்த மாட்டானா என்று ஏங்கி வாழ்கிறாள். எதுவும் நடக்கவில்லை. மென்மேலும் அவனது போக்கு எல்லை மீறுகிறது. இங்கேதான் மென்மையான காற்று இங்கு சீற்றமடைகிறது. வேண்டாம் இந்த வாழ்க்கை என்று எண்ணுகிறாள்.

முடிவாக என்ன செய்யலாம் என்று சிந்திக்கிறாள் – தவிக்கிறாள்.

விட்டுத் தொலைத்தால் சமுதாயத்தின் நச்சுப் பார்வை. விடாமல் இருந்தால் இதயத்தின் பார்வையில் அழுத்தம் வரும். கண்களில் கண்ணீர் வரவில்லை. இரத்தம் வடிகிறது. என்ன செய்யலாம், என்ன செய்யலாம் என்ற மன சஞ்சலம்.
நாட்களை கடக்கிறாள். வாரங்களாக, மாதங்களாக, ஆண்டுகளாக... ஒரு ஒரே ஒரு முடிவுதான். வேறு வழியே இல்லை. 

ஒரு துணிவு பிறக்கிறது! தனியொருவளாக நின்று வாழ்ந்துதான் பார்ப்போமே என்று! 

முடிவெடுக்கிறாள்! ஆம்! விவாகரத்து!

ஒருமனதாக இருவரும் பிரிக்கிறார்கள் – விவாகரத்தில்!

இங்குதான் ஒரு பெண்ணுக்கு கீறல்கள் ஏற்படுகிறது. எப்படி வாழப் போகிறோம் என்ற சிந்தனைகள். இந்தக் கட்டத்தில்தான் வாழ்க்கையே ஒரு கேள்விக் குறியாக மாறுகிறது. 
சொல்லண்ணாத் துன்பங்களுக்கு இடையில் உழல்கிறாள். குடும்பம் வறண்ட பாலைவனமாய் இருந்தாலும், குடும்பத்தில் உள்ளவர்களுக்காக வறண்ட பாலைவனத்தின் சுனை நீராக  – பொறுமையாய் இருந்து, குடும்பத்தைச் சுமக்கிறாள். ஆண்டுகள் உருண்டோடுகின்றன. உடல் தளர்ந்த நிலையில் பிள்ளைகள் அவளது மடியில் வெற்றிக் கனிகளைக் கொட்டுகின்றன. உருவில்.. ஆனால் அவளது மனக் கீறல்களுக்கு இதுவரை எவரும் மருந்தாகவில்லை!

இப்படி பல்வேறு இலக்கணங்களைக் கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது கற்பனைக்கு எட்டாதது. அவளது ஆழமானது. 

அவள் எழுதி முடிக்கப்படாத ஓர் அகராதி!