காலத்தால் அழியாத காவியத் திரைப்படமான " உதிரிப்பூக்கள்
The timeless epic movie "Uthiri Pookkal"
Date : 20 Feb 2025 News By : Maniventhan
நேற்று மாலை வேளையில் சற்று ஓய்வாக இருந்த போது தொலைக்காட்சியை முடுக்கி விட்டேன். தகவல் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் நினைத்த ஒரு சினிமா படத்தை பார்க்கும் வசதி உள்ளதால் வலையொளி( யுடியூப் ) யை முடுக்கி 70 ஆண்டுகளின் பிற்பகுதியில் வந்த ஒரு தமிழ்ப் படத்தை பார்த்தேன்.
ஏற்கெனவே பார்த்த படம்தான் இருந்தாலும் மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் என்று எண்ணியதால் படத்தை பார்த்தேன். அதுதான் 1979 ஆம் ஆண்டு வெளிவந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவை உலுக்கி எடுத்த படம்.. இன்று வரை மறக்க முடியாத அந்தப் படம்தான் உதிரிப்பூக்கள்!
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் வெளியாகி சினிமா உலகையே உலுக்கி எடுக்கும் என்பதும் மறுக்க முடியாத படமாக வெகு சில படங்கள் மட்டுமே அமையும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில்தான் கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான உதிரிப்பூக்கள் திரைப்படம் தமிழ் சினிமா உலகினரை ஆச்சரியப்பட வைத்தது.
நேற்று அப்படத்தை பார்த்த போது கூட அந்த படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியும் என்னை ஆச்சிரியப்பட வைத்தது. 1978 இல் வெளிவந்த இயக்குனர் மகேந்திரனின் முதல் படமான " முள்ளும் மலரும் " எனும் ஒரு அற்புதமான படத்தை சுங்கை வே கொங் வா திரையரங்கில் பார்த்து வியந்து நெகிழ்ச்சி அடைந்தேனோ அதே போல் 1979 ஆம் ஆண்டு உதிரிப்பூக்கள் படத்தை கோலாலம்பூர் லீடோ திரையரங்கில் பார்த்து வியந்து போனேன். இன்றும் அதே ஆச்சிரியமும் ஆர்வமும் இந்த படத்தை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது ஏற்படுகிறது. இந்தப் படத்தை பார்த்த ரசிகர்களுக்கும் இது தெரிந்திருக்கும் புரிந்திருக்கும் என்று நம்கிறேன்.
காலத்தால் அழியாத காவியத் திரைப்படமான " உதிரிப்பூக்கள் " படத்தை இயக்கியவர் மகேந்திரன். தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் 100 நாள் 200 நாள் என ஓடினாலும் அந்த படத்தை மக்கள் ஒரு கட்டத்தில் மறந்து விடுவார்கள். ஆனால் இன்று வரை ஒரு படத்தை பாராட்டி வியந்து, அந்த படத்தை அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது ‘உதிரிப்பூக்கள்’ மட்டுமே. இயக்குனர் மகேந்திரனை பல வருடங்கள் உதிரிப்பூக்கள் மகேந்திரன் என்றே திரை உலகம் அழைத்தது.
ஒரு அழகான கிராமத்திற்கு சரத்பாபு தனது மனைவியுடன் ரயில் வந்து இறங்குவார். அவர் அந்த கிராமத்தின் சுகாதாரத் துறை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருப்பார். அதே ஊருக்கு அதே ரயிலில் சத்யன் என்ற பள்ளி வாத்தியாரும் வருவார்.
அந்த கிராமத்தில் பெரிய மனிதராக இருக்கும் விஜயனுக்கு, பிறர் நன்றாக வாழ்ந்தால் பிடிக்காது. ஒருவர் நல்ல சட்டை போட்டாலோ, நல்ல மனைவி ஒருவருக்கு அமைந்தாலோ கூட பிடிக்காது. ஒரு விதமான பொறாமை குணம் கொண்ட கதாபாத்திரம் என்று கூட சொல்லலாம்.
இந்த நிலையில் விஜயனின் மனைவியாக அஸ்வினி, அவருக்கு இரண்டு குழந்தைகள் அஸ்வினியின் குழந்தைகளாக ஹாஜா ஷரிப்பும், பேபி அஞ்சுவும் நடித்திருப்பார்கள். மனைவியை எப்போதும் விஜயன் திட்டிக் கொண்டே இருப்பார். உங்க அப்பாவையும் தங்கச்சியும் ஊரை விட்டு போகச் சொல்லு என்று கூறுவார். தன்னிடம் வாங்கிய கடனை அடைக்குமாறு உங்க அப்பாவிடம் சொல்லு என்று கொடுமைப்படுத்துவார்.
அஸ்வினியின் தந்தையாக சாருஹாசன், கவலை மறந்து சிரித்தபடி வலம் வரும் அஸ்வினி சகோதரி மதுமாலினி என இந்த படத்தின் கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும்.
இந்த நிலையில்தான் புதிதாக அந்த ஊருக்கு வந்த வாத்தியாரும் அஸ்வினியின் தங்கையும் காதலிப்பார்கள். ஒரு கட்டத்தில் நீங்களே ஏன் அவளை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று விஜயன் அவரை ஏத்திவிடுவார்.
இந்த நிலையில் அந்த ஊருக்கு சுகாதாரத்துறை அதிகாரியாக வந்த சரத் பாபு அஸ்வினியை பார்ப்பார். அவர் ஏற்கனவே அஸ்வினையை திருமணம் செய்ய முயற்சித்து இருப்பார், ஆனால் அது நடந்திருக்காது. இந்த சமயத்தில் வேறொருவரை திருமணம் செய்து அவர் கஷ்டப்படுவதை பார்த்து சகிக்காமல் அவருக்கு ஆறுதல் கூறுவார்.
இந்த விஷயம் விஜயனுக்கு தெரிய வர அவர் கோபம் அடைந்து நீ உன் காதலனுடன் போய் கொள், எனக்கு உன் தங்கையை கட்டிக் கொடு என்று சொல்வார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து அஸ்வினி தனது குழந்தைகளுடன் தனது தந்தை வீட்டுக்கு சென்று விடுவார்.
ஒரு கட்டத்தில் நோய்வாய் பட்டு படுக்கையில் அஸ்வினி இருக்கும் நிலையில் அவரை பார்க்கக்கூட விஜயன் வரமாட்டார். ஒரு கட்டத்தில் அஸ்வினி இறந்து விடுவார். இந்த நிலையில் தான் அஸ்வினி தங்கைக்கு திருமணம் உறுதி செய்யப்படும் நிலையில் வேறொரு பெண்ணை விஜயன் திருமணம் செய்து கொள்வார். ஆனால் அஸ்வினி தங்கையை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்ற ஏமாற்றம் அவருக்கு இருக்கும்.
இந்த நிலையில் திருமணத்திற்கு முதல் நாள் அஸ்வினி தங்கை, விஜயன் வீட்டுக்கு வந்து தனது அக்காள் குழந்தைகளை தன்னிடம் கொடுத்துவிடுமாறு கேட்பார். அப்போது விஜயன், கதவை அடைத்து அவளுடைய ஒவ்வொரு ஆடையாக உருவி விடுவார், ஆனால் அவரை பாலியல் வல்லுறவு கொள்ள மாட்டார்.
உனக்கு இதுதான் தண்டனை, நீ உன் கணவனுடன் சேரும்போதெல்லாம் இது ஞாபகத்துக்கு வரவேண்டும், சாகுற வரைக்கும் இதனை மறக்க மட்டாய் என்பார். இந்த விஷயம் ஊராருக்கு தெரிந்து கொதித்து போவார்கள். அவரை கொலை செய்ய வேண்டும் என ஊர் மக்கள் ஆத்திரத்தோடு இருப்பார்கள். அப்போது நீங்கள் என்னை கொலை செய்ய வேண்டாம், நானே செத்துவிடுகிறேன், என்னை மாற்ற வேண்டுமென்று நீங்கள் முயற்சித்தீர்கள், ஆனால் இப்போது நீங்கள் என்னை போல் கொலை செய்ய துணிந்துவிட்டீர்கள் என்று கூறிவிட்டு விஜயன் தானாகவே ஆற்றில் விழுந்து இறந்து விடுவார். அம்மாவும் அப்பாவும் இல்லாமல் இரண்டு குழந்தைகள் உதிரிப்பூக்களாக இருப்பதுடன் கதை முடியும்.
இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. வசூலில் சாதனை செய்தது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். அழகிய கண்ணே என்ற பாடல் இன்று வரை பிரபலமாக உள்ளது.
புதுமை பித்தனின் சிற்றன்னை என்ற ஒரு குறும்புதினத்தை அடிப்படையாக கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார். படத்தின் மிகப் பெரிய பலம் அதன் திரைக்கதையாகும் எந்த இடத்திலும் பிசுறு தட்டாத ஒரே நேர்கோட்டில் செல்லும் திரைக்கதை, அளவான வசனங்கள் , நடிகர்களின் மிக எதார்த்தமான நடிப்பு என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
படத்தின் வெற்றிக்கு இன்னொரு மிகப்பெரிய சக்தி அதன் பின்னணி இசையாகும். படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை மிக அற்புதமாக அமைந்திருக்கும். இன்னும் சொல்லப்போனால் இசைஞானி இளையராஜா இந்தப் படத்தில் ஒரு இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார். குறிப்பாக படம் முடிந்த பிறகும் நம் காதுகளில் எஸ். ஜானகியின் " அழகிய கண்ணே" என்ற பாடல் தொடர்ந்து ரீங்க்காரமிட்டுக் கொண்டிருக்கும்.
தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத ஒரு காவிய திரைப்படத்தை தந்த மகேந்திரன் இன்று இல்லை என்றாலும் அவருடைய உதிரிப்பூக்கள், சினிமா இருக்கும் வரை இருக்கும்..
குறிப்பு : நம் காதுகளில் தொடர்ந்து ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் அந்த " அழகிய கண்ணே " பாடலை மீண்டும் ஒரு முறை கேட்கலாமே ?