எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு
There is a similarity between MGR and Sivaji
News By:Jayarathan Date :17August 2024
Mgr Sivaji: எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது என்னவெனில் இருவரும் சிறுவயதிலேயே நாடகங்களில் நடித்து பயிற்சி எடுத்தவர்கள். எம்.ஜி.ஆர் சிவாஜியை விட வயதில் பெரியவர். எனவே, அவரை ‘அண்ணன்’ என்றே அழைப்பார் சிவாஜி. சிவாஜியை எம்.ஜி.ஆர் பாசமாக ‘தம்பி கணேசா’ என அழைப்பார்.
எம்.ஜி.ஆர் வீட்டில் சிவாஜியும், சிவாஜி வீட்டில் எம்.ஜி.ஆரும் சாப்பிடுவார்கள். நாடகங்களில் நடித்ததில் கிடைக்கும் பணத்தில் சிவாஜிக்கு எம்.ஜி.ஆர் நிறைய செலவும் செய்வார். எம்.ஜி.ஆர் 30 வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு போனார். 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவிட்டு ஹீரோவாக மாறினார்
.
சிவாஜியோ முதல் படமான பராசக்தியிலேயே ஹீரோவாக நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததோடு ரசிகர்களிடையே ஒரு எழுச்சியை உருவாக்கியது. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் சிவாஜி நடித்து நடிகர் திலகமாகவும் மாறினார். எம்.ஜி.ஆர் ஆக்ஷன் கதைகளில் நடித்தபோது சிவாஜி நடிப்புக்கு தீனி போடும் செண்டிமெண்ட் காட்சிகள் கொண்ட குடும்ப கதைகளில் நடித்தார்.
60களில் சில கதைகள் சிவாஜிக்கு போகும். ஆனால், ‘இது அண்ணன் நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும்’ என சொல்லி எம்.ஜி.ஆருக்கு அந்த கதையை அனுப்பிவிடுவார் சிவாஜி. அதேபோல், அதிக செண்டிமெண்ட் காட்சிகள் கொண்ட கதை எனில் அதை சிவாஜிக்கு அனுப்பிவிடுவார் எம்.ஜி.ஆர்
.
ஆனால், வெளியே பார்த்தால் இருவரும் போட்டி நடிகர்கள் போல தெரியும். ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையே அன்பான ஒரு உறவு மட்டுமே இருந்தது. ஒருமுறை வசனகர்த்தா ஆருர்தாஸ் சிவாஜியிடம் ஒரு கதை சொல்ல அது அவருக்கு பிடித்துப்போனது. அவரே சொந்தமாக தயாரித்து நடிக்கவிருந்தார்.
அதன்பின், கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் நடிக்கவிருந்தபோது ஆரூர்தாஸிடம் ஒரு கதை கேட்டார் எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு சொன்ன அதே கதையை அவர் சொல்ல எம்.ஜி.ஆருக்கு அது பிடித்துப்போனது. எம்.ஜி.ஆர் நடிக்க ஆசைப்பட்டதால் அந்த கதையை விட்டுக்கொடுத்தார் சிவாஜி. அப்படி உருவான திரைப்படம்தான் பெற்றால்தான் பிள்ளையா. 1966ம் வருடம் இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது
.