உலகத் தமிழர்கள் உலகத் திருக்குறள் நாள் ... மலேசியத் தமிழ்நெறிக் கழகம்

Thirukkural World Tamils Day 2025 Malaysian Tamil Ethics Association

உலகத் தமிழர்கள் உலகத் திருக்குறள் நாள் ...  மலேசியத் தமிழ்நெறிக் கழகம்

Date 03 January 2025 News By - இரா. திருமாவளவன்

மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் ஏற்பாட்டில்  முத்தமிழ் முரசு ஐயா திரு.திருமாவளவனார் தலைமையில்  உலகத் திருக்குறள் நாள்  சிறப்புற நிகழ்த்தப்பட்டது.

 

ஆங்கில புத்தாண்டு அன்று அவலும் சீர் கேடான பழக்க வழக்கங்களை கண்டு வேதனைக்குள்ளாகிய ஐயா திரு.மணிவெள்ளையனார் அவர்கள் ஆங்கில புத்தாண்டன்று உலகத் தமிழர்கள் உலகத் திருக்குறள் நாளாக கொண்டாட வேண்டுமென்ற கோட்பாட்டை மலேசியத் தமிழ்நெறிக் கழகம் நாடுதழுவிய அளவில் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

முதற்கண் இயங்கலை வாயிலாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் சுவிசர்லாந்து பேர்ன் நகரில் வள்ளுவர் தமிழ்ப்பள்ளி நடத்தி வரும் தமிழ்நெஞ்சர் பூநகரி முருகவேள் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நல்கினார். 

இயங்கலை விரிவரங்க நிகழ்ச்சியை நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைந்த இயக்கத்தின் தமிழ்நெறி இளையர் பணிப்படையினர் சிறப்புற வழிநடத்தினர். இந்நிகழ்ச்சி வலையொளியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இயங்கலை நிகழ்ச்சிக்குப் பின்னர், முதற்கட்டமாக தம் மழலையர் கல்வியைத் தொடங்கவிருக்கும் வழக்கறிஞர் மகேசுவரன் முனைவர் தமிழ்முல்லை இணையரின் அன்பு மகன் செல்வன் தமிழ்வேந்தருக்கு அகரம் எழுதி எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பெற்றது. முதுமுனைவர் இரா. அன்பரசு அவர்கள் தமிழ்வேந்தன் கையைப் பற்றி அகரம் எழுதி எழுத்தறிவித்தார். பின்னர் பத்துமலைக் கிளையின் மாணவர்கட்கு பண்பாளர் விழா சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. 

இறுதியாக மாணவர்கள் தம் பெற்றோரை வணங்கி வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சி விருந்தோம்பலுக்குப் பின் இனிதே நிறைவுற்றது.

இரா. திருமாவளவன்