இளைஞர் மேம்பாடு, பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிப்போம்- கோத்தா கெமுனிங் வேட்பாளர் பிரகாஷ்
We will give priority to youth development, safety issues: Kota Kemuning candidate Prakash
25 July 2023
விரைவில் நடைபெற இருக்கும் மாநில தேர்தலில் வெற்றி பெற்றால் கோத்தா கெமுனிங் தொகுதியில் இளைஞர்களின் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கும் தாம் முன்னுரிமை அளிக்க உள்ளதாக
அத்தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் வேட்பாளரான
பிரகாஷ் சம்புநாதன் கூறினார்.
இது தவிர, அத்தொகுதி மக்கள் எதிர்நோக்கி வரும் அடிப்படை வசதிகள்
பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அதே வேளையில் மத்திய மற்றும் மாநில
அரசுகள் அமல்படுத்தியுள்ள பல்வேறு உதவித் திட்டங்களை பி40 தரப்பினர்
குறிப்பாக இந்தியர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்வதை தாம்
உறுதி செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இங்குள்ள புக்கிட் கெமுனிங்கில் மலேசிய மறுசுழற்சி பொருள்
சங்கத்தின் தலைவரும் மலேசிய செம்பிறைச் சங்கத்தின் கிள்ளான்
மாவட்ட பிரிவின் தலைவருமான டத்தோ ஜோ. சரவணனுடன் நடத்திய
சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார்.
இளைஞர்கள் வர்த்தகத் துறையில் ஈடு படுவதை ஊக்குவிக்கும் நோக்கில்
வர்த்தகம் மற்றும்
இலக்கவியல் முறையில் சந்தைப்படுத்துவது
தொடர்பான பயிற்சிகளையும் அவர்களுக்கு வழங்குவதற்கான
திட்டங்களையும் கொண்டிருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.
எஸ்.பி.எம் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு ஏதுவாக உயர் கல்விக்கூடங்களின் ஒத்துழைப்புடன் இணைய வழி கல்வித் திட்டத்தை
அமல்படுத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம்
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தி அவர்கள் சான்றிதழ் அல்லது
பட்டப் படிப்பை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்