மீண்டும் போட்டியிட மாட்டேன்- சானி ஹம்சான் கூறுகிறார்
Won't contest again, says Sani Hamzaan
கோம்பாக், 21 May 2023
விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் தாமான் டெம்ப்ளர் தொகுதியில் தாம் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று முகமது சானி ஹம்சான் கூறியுள்ளார்.
ஒருவர் இரு தொகுதிகளில் உறுப்பினராக இருக்க முடியாது என்ற அமானா கட்சியின் கொள்கையை மதிக்கும் வகையில் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அத்தொகுதியின் நடப்பு உறுப்பினரான அவர் சொன்னார்.
இந்த தொகுதி மக்களை எனது குடும்பமாக எண்ணிக் பழகி வந்த காரணத்தால் தாமான் டெம்ப்ளர் தொகுதியை விட்டுச் செல்லும் முடிவை கனத்த மனதுடன் எடுத்துள்ளேன். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் தனது கடமையை முறையாகச் செய்யும் அதே வேளையில் மக்களின் குரலாகவும் ஒலிப்பார் என நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.
எனது உலு லங்காட் நாடாளுமன்றத் தொகுதியில் அடிப்படை வசதிகள், மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தவிருக்கிறேன் என்றார் அவர்.
தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் தொகுதியில் எத்தகையப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டன என நிருபர்கள் வினவிய போது, வெள்ளம், போக்குவரத்து நெரிசல், சாலை விளக்கு, கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள், குப்பை மற்றும் குழி விழுந்த சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தாம் தீர்வு கண்டுள்ளதாக அவர் பதிலளித்தார்.
இது தவிர, நான்கு பூப்பந்து மைதானங்களை உள்ளடக்கிய சமூக மண்டபம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியும் மாநில அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
செலாயாங் வட்டாரத்தில் 50 லட்சம் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்படவிருக்கும் இந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் ஜூலை மாதம் நடைபெறும் என்றும் அவர் சொன்னார்.