மதவெறுப்பு பிரச்சாரகர் ஜாகிர் நாய்க் விவகாரம்: மாண்புசால் சுல்தான்களின் முடிவை உள்துறை அமைச்சர் மீறுகிறாரா?

Zakir Naik case: Is Home Minister violating Sultans' decision?

மதவெறுப்பு பிரச்சாரகர் ஜாகிர் நாய்க் விவகாரம்: மாண்புசால் சுல்தான்களின் முடிவை உள்துறை அமைச்சர் மீறுகிறாரா?
மதவெறுப்பு பிரச்சாரகர் ஜாகிர் நாய்க் விவகாரம்: மாண்புசால் சுல்தான்களின் முடிவை உள்துறை அமைச்சர் மீறுகிறாரா?

Date : 22 Feb 2025  News By: Jayarathan 

நாட்டின் இறையாண்மைக்கும் மக்களின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக வெறுப்புப் பிரச்சாரம் செய்யும் ஜாகிர் நாய்க்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றியதன்மூலம், மாநிலங்களின் ஆட்சியாளர்களான மாட்சிமைக்குரிய சுல்தான்களின் உத்தரவை உள்துறை அமைச்சர் மீறுகிறாரா என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி வினாத் தொடுத்துள்ளார்.

எது எவ்வாறாயினும் மதவெறுப்பு பிரச்சாரகர் ஜாகிர் நாய்க்கை பொதுவெளியில் அனுமதித்துள்ள மடானி அரசு, தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இந்த வேண்டுகோள் மாநில அளவில் இஸ்லாமிய விவகாரங்களை நிர்வகிக்கும் சுல்தான்களின் மாண்பைப் போற்றுவதற்கும் மலேசிய மக்கள் தொகையில் 45% ஆக இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களின் கவலையைப் போக்குவதற்கும் விடப்படுகிறது.

ஜாகிர் நாயக் மீதான தடையை நீக்கியதற்கான மடானிஅரசாங்கத்தின் நிலைகுறித்து உள்துறை அமைச்சர் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாட்டின் சரித்திர சாதனை இயக்கமான ஹிண்ட்ராஃப் (HINDRAF) தலைவருமான பொன். வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

மதவெறுப்புப் பேச்சு மற்றும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் போக்கு காரணமாக, ஜோகூர், மலாக்கா, பெர்லிஸ், கெடா, பினாங்கு, சரவாக் மாநிலங்கள் ஜாகிர் நாயக்கிற்கு தடைவிதித்துள்ளன. அவர் தங்கள் பகுதிகளுக்குள் நுழையவோ வெறுப்புப்பிரச்சாரம் செய்யவோ தடை விதித்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, தேசிய பாதுகாப்பிற்கான மருட்டல் மற்றும் இனங்களுக்கிடையே நிலவும் நல்லிணக்கத்திற்கான அச்சுறுத்தல் காரணமாக, தேசிய காவல் துறை 2019, ஆகஸ்ட் 20இல் ஜாகிர் நாய்க்கிற்கு தேசிய அளவில் தடைவிதித்ததுடன் அவர் பொது இடங்களில் உரை நிகழ்த்தவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது

.

மலேசிய சினர்கள் சீனாவிற்கு திரும்பிச்செல்ல வேண்டும் என்று சொன்ன ஜாகிர் நாய்க், மலேசிய இந்தியர்களின் நாட்டுப்பற்று குறித்தும் கேள்வி எழுப்பினார். இவ்வாறெல்லாம் இன துவேசக் கருத்துக்களின் மூலம் நாட்டின் ஒற்றுமைக்கு வேட்டுவைத்த ஜாகிர் நாய்க்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை சரியான நடவடிக்கை என்று பிரதமர் துன் மகாதீரும் அப்போது கருத்து தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், ஜாகிர் நாயக் இனி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லை என்று அரசாங்கத்தையும் காவல்துறையையும் நம்ப வைக்கும் புதிய சான்றுகள் அல்லது உத்தரவாதம் என்னென்ன?

இந்த முடிவு மடானி அரசாங்கத்தின் அமைதியான சகவாழ்வு, ஜனநாயகம் மற்றும் சமூக நல்லிணக்கக் கொள்கைகளுடன் எவ்வாறு ஒத்துப்போகிறது?

ஜாகிர் நாய்க்கின் முந்தைய மதவெறுப்புப் பிரச்சாரம் மலேசிய மக்களின் இன ஒற்றுமை மற்றும் பிற சமயத்தினரை மதிக்கும் தன்மை ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தின என்பதை மடானி அரசாங்கம் ஒப்புக்கொள்கிறதா என்னும் கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

மலேசியாவின் ஜனநாயக விழுமியம் மக்களின் ஒருமைப்பாடு ஆகியவற்றை பின்தள்ளி, இஸ்லாமிய தலைமைத்துவத்தை முன்னிலைப்படுத்தியது ஜாகிர் நாய்க்கின் வெறுப்புப் பிரச்சாரம் என்று உறுதியாகக் கூறமுடியும். எனவே, தேச ஒற்றுமை, மக்களின் ஒருமைப்பாடு, அமைதி, பரஸ்பர மரியாதை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ஜாகிர் நாய்க்கை பொதுவெளியில் அனுமதித்த முடிவை மடானி அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக ஒற்றுமைத் துறை முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.