தேசியக் கல்வி ஏடலர் (ஆலோசனை) மன்றத்தில் தமிழர் நியமன நிலவரம் என்ன ஆனது? அமைச்சர், துனையமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும்.
06 ஜூன் 2023
தேசியக் கல்வி ஏடலர் (ஆலோசனை) மன்றத்தில் தமிழர் நியமன நிலவரம் என்ன ஆனது? அமைச்சர், துனையமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும்.
கடந்த சனவரி மாதத்தில் கல்வி அமைச்சருக்கு ஏடல் தெரிவிப்பதற்குத் தேசியக் கல்வி ஏடலர் மன்றத்தில் பொறுப்பாளர்களைக் கல்வி அமைச்சு நியமித்திருந்தது. இந்திய குமுகாயம் சார்பாக தமிழ்க் கல்வி, தமிழ்ப்பள்ளி புலமையும் கள நிலவரம் அறியாத சீக்கியர் ஒருவரை கல்வி அமைச்சர் நியமித்திருந்ததை அடுத்து சிக்கல் கிளம்பியது. தமிழ், தமிழர் அமைப்புகள் தங்கள் கண்டனத்தை பதிவுச் செய்திருந்தனர்.
இதனையடுத்து மாந்த (மனித) வள அமைச்சர் மாண்புமிகு சிவக்குமார் அவர்களும், கூட்டுறவுக்கழக மேம்பாட்டுத்துறை துணையமைச்சர் மாண்புமிகு செனட்டர் சரசுவதி கந்தசாமி அவர்களும் கல்வியமைச்சர் பாட்லினா சிடேக் அவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டதாகவும், அமைச்சரும் துணையமைச்சரும் தேசியக் கல்வி ஏடலர் மன்றத்திற்கு ஆளுக்கொரு பெயரை முன்மொழிந்துள்ளதாகவும் ஏடலர் மன்றத்தின் அடுத்தக் கூட்டத்தில் இது குறித்து கலைந்துரையாடி உரிய முடிவுகள் எடுக்கப்படும், அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும் என்று துணையமைச்சர் மாண்புமிகு செனட்டர் சரசுவதி கந்தசாமி அவர்கள் 2 மார்ச் 2023 அன்று மின்னியல் ஊடக வாயிலாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தேசியக் கல்வி ஏடலர் மன்றத்தில் பொறுப்பாளர்களை நியமித்து 6 மாதங்களாகிறது. அமைச்சர், துணையமைச்சர் ஏடலர் மன்றத்திற்குப் பெயர் முன்மொழிந்து 3 மாத மாதங்களாகிறது. ஆனால் இதுவரை தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி புலமைக்கொண்ட தமிழர் ஒருவரை நியமிக்கப்படவில்லை என்பது வேதனைக்குறியதாகும்.
இனியும் காலம் தாழ்த்தாது கல்வி அமைச்சர் தமிழர் ஒருவரை தேசியக் கல்வி ஏடலர் மன்றத்தில் நியமிக்கப்பட வேண்டும். இந்நியமனம் உடனடியாக நடைப்பெற அமைச்சர் சிவக்குமாரும், துணைக்கல்வி அமைச்சர் மாண்புமிகு செனட்டர் சரசுவதி கந்தச்சாமி அவர்களும் ஏனைய நாடளுமன்ற உறுப்பினர்களும் கட்சித் தலைவர்களும் குரலும் அழுத்தமும் கொடுக்க வேண்டும் என்று மலேசியத் தமிழர் தேசியப் பேரவைத் தலைவர் திரு செ.தமிழ்த்திறன் செல்வநாதன் கேட்டுக்கொண்டார்.
www.myvelicham.com