பாதுகாப்பு படைக்கு மேலும் வெ.15 கோடி ஒதுக்கீடு... பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

Rm 15 crore allocated for security forces Prime Minister Datuk Seri Anwar Ibrahim announced

பாதுகாப்பு படைக்கு  மேலும் வெ.15 கோடி ஒதுக்கீடு... பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  அறிவிப்பு

21 July 2023

நாட்டிலுள்ள பாதுகாப்புப் படையினரின் வசதிக்காக உள்துறை அமைச்சின் கீழுள்ள துறைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு கூடுதல் ஒதுக்கீடாக 15 கோடி வெள்ளி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பொது நடவடிக்கைப் படையின் (பி.ஜி.ஏ.) 117 பாதுகாப்புச் சாவடிகளை தரம் உயர்த்துவதற்கும் புதிய உபகரணங்களை வாங்குவதற்கும் 4 கோடியே 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படுவதாக அவர் சொன்னார்.

இது தவிர எஸ்கோம் எனப்படும் சபா கிழக்குக் கரை சிறப்பு பாதுகாப்பு பிரதேசத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு மேலும் 4 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இவற்றோடு, அரச மலேசிய போலீஸ் படையின் பணியாளர் குடியிருப்புகளில் காணப்படும் உடைந்த சிமெண்ட் தரை, பழுதடைந்த கழிப்பறை போன்ற குறைபாடுகளைச் சீரமைப்பதற்கு மேலும் 5 கோடி வெள்ளி வழங்கப்படும். சிறைச்சாலைத் துறையின் குவார்ட்டர்ஸ் மற்றும் அடிப்படை வசதிகளை தரம் உயர்த்துவதற்கு கூடுதலாக ஒன்றரை கோடி வெள்ளி வழங்கப்படும் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள கூலிம் பி.ஜி.ஏ. இரண்டாவது பட்டாளத்தில்  உள்துறை அமைச்சுடனான மலேசிய மடாணி சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பிரதமர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மற்றும் அரச மலேசிய போலீஸ் படையின் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த 15 கோடி வெள்ளி கூடுதல் நிதி ஒதுக்கீடு தொடர்பான திட்டமிடல் அறிக்கையை நிதியமைச்சு விரைந்து தயாரிக்க வேண்டும் எனக் கூறிய அவர், இதன் தொடர்பான அறிக்கையை சம்பந்தப்பட்டத் தரப்பினர் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.