எனது சக்தியை மீறி உழைத்தேன்” - மு.க. ஸ்டாலின் உருக்கம்!
“I worked beyond my strength” – M.K. Stalin’s
Date: 04 May 2026 News By: Ganapathy
பின்னடைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்; விவரத்தை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக 2026ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் மாநிலம் முழுவதும் இன்று (04-05-26) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மொத்தம் 47 இடங்களைப் பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் தலா 5 இடங்களைப் பெற்றுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா 2 இடங்களைப் பெற்றுள்ளன. பாரதிய ஜனதா கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலா ஒரு இடத்தையும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஒரு இட முன்னிலையையும் பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதவில், “மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்அனைவருக்கும் நன்றி. எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மு.க.ஸ்டாலின், தனது கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் சுமார் 9 ஆயிரத்து 122 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அதாவது கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு 82 ஆயிரத்து 110 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மு.க. ஸ்டாலின் 72 ஆயிரத்து 988 வாக்குகள் பெற்றுத் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



ganapathy 







\
